Published:Updated:

`இந்த வீடியோ வைரலாகத் தகுதியானது'- ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யப்பட வைத்த கேரள மாணவி

`இந்த வீடியோ வைரலாகத் தகுதியானது'- ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யப்பட வைத்த கேரள மாணவி
`இந்த வீடியோ வைரலாகத் தகுதியானது'- ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யப்பட வைத்த கேரள மாணவி

சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் தென்படும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இவர் அடிக்கடி ட்வீட் செய்வது வழக்கம். அதேபோல நேற்றைக்கு ஒரு வீடியோவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா. அவர் குறிப்பிட்ட வீடியோவில் சீருடை அணிந்த மாணவி ஒருவர் குதிரையில் அமர்ந்துகொண்டு சாலையில் சென்றுகொண்டிருக்கிறார். 15 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை மனோஜ் குமார் என்பவர் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

வாட்ஸ்அப்பில் இந்த வீடியோவைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், திரிசூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுத அந்த மாணவி குதிரையின் மீது ஏறிச் சென்றுகொண்டிருக்கிறார் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார். மனோஜ் குமாரின் அந்த ட்வீட் எப்படியோ ஆனந்த் மஹிந்திராவின் கண்களுக்குத் தென்படவே வீடியோ அவரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ``திறமைசாலி! பெண் கல்வி குதிரை வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ உலகம் முழுக்க வைரலாகத் தகுதியானது" என ட்வீட் செய்திருந்தார்.

மேலும், `திரிசூரில் உள்ள யாருக்காவது இந்தப் பெண்ணைத் தெரியுமா? அந்தப் பெண்ணின் போட்டோவும் அவரது குதிரையின் போட்டோவும் தேவைப்படுகிறது. அதை என்னுடைய ஸ்க்ரீன் சேவராக வைக்க விரும்புகிறேன். அவளுடைய பார்வை எதிர்காலத்துக்கான நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது' எனவும் அடுத்த ட்வீட் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதையடுத்து, அந்த மாணவி தொடர்பான தகவல்களைப் பலரும் அவருக்குத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் மூலமாக அந்த மாணவி தொடர்பான பல்வேறு தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. `கிருஷ்ணா' என்பது அந்த மாணவியின் பெயர், திரிசூருக்கு அருகே இருக்கும் மலா என்ற ஊரில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 'ராணாக்ரிஷ்' என்ற அவருடைய குதிரையின் மூலமாகவே 3.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக்குத் தினமும் சென்று வருகிறார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.