Published:Updated:

`400 கி.மீட்டர், ஐந்து மணி நேரம், ஃபேஸ்புக் லைவ்!'- குழந்தையைக் காப்பாற்ற நடந்த ரியல் போராட்டம்

சத்யா கோபாலன்
`400 கி.மீட்டர், ஐந்து மணி நேரம், ஃபேஸ்புக் லைவ்!'- குழந்தையைக் காப்பாற்ற நடந்த ரியல் போராட்டம்
`400 கி.மீட்டர், ஐந்து மணி நேரம், ஃபேஸ்புக் லைவ்!'- குழந்தையைக் காப்பாற்ற நடந்த ரியல் போராட்டம்

பிறந்து பதினைந்து நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒரு மாநிலமே உதவி செய்துள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மங்களூருவில், பிறந்து பதினைந்து நாள்களே ஆன ஒரு குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ரா திருநல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்வந்தனர்.

மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வரை சுமார் 600 கிலோ மீட்டர் இருக்கும். அந்த தூரத்தை ஆம்புலன்ஸ் மூலம் 12 மணி நேரத்தில் கடக்க உறவினர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை அவ்வளவு தூரம் பயணிக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த விஷயம் கேரளாவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் சென்றது. அவர்கள் சூழ்நிலையை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவிடம் தெரிவிக்க அவரும் குழந்தைக்கு உதவ முன்வந்தார். 

பின்னர் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து கேரள அரசின் இருதயா திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 11 மணிக்கு மங்களூருவில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் குழந்தையுடன் புறப்பட்டது. அதற்கு முன்னதாக குழந்தையின் நிலை குறித்து கேரளாவில் அனைத்து சமூக ஊடகங்களிலும் செய்திகள் பகிரப்பட்டன. ஆம்புலன்ஸ் புறப்பட்டதில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்து மக்களிடம் உதவி கோரப்பட்டது. 

மேலும், குழந்தை நல அமைப்பைச் சேர்ந்த பல தன்னார்வலர்கள் ஆம்புலன்ஸ் வரும் பாதையை அறிந்து சாலையில் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பொதுமக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவே சுமார் 400 கிமீ தொலைவிலான தூரத்தை வெறும் ஐந்து மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கடந்து மாலை 4 மணிக்கு கொச்சி வந்தடைந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனும் தன் ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்களிடம் உதவி கோரிப் பதிவிட்டிருந்தார். அதில், ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நேரம் விலைமதிப்பற்றது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அனைத்து மாநிலங்களும் மக்களவைத் தேர்தலில் பிஸியாக இருக்கும் இந்த நேரத்தில் கேரளாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ஆம்புலன்ஸை அதி விரைவாக ஓட்டிவந்த ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.