Published:Updated:

`என்னை விளையாட்டுல சேர்க்கல.. அவங்கள கைது பண்ணுங்க!' -போலீஸில் புகார் கொடுத்த 8 வயதுச் சிறுவன்

சிறுவன் உமர்நிதால்
சிறுவன் உமர்நிதால்

`நீ பையன்.. அதனால் பெண்களுடன் விளையாட வேண்டாம், வீட்டில் போய் டி.வி பார்' என்றார்கள். `நான் போலீஸில் புகார் கொடுப்பேன்' எனச் சொல்லிப்பார்த்தேன். அதற்கும் என்னைப் பரிகாசம் செய்தார்கள்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தன்னை விளையாட்டுக்குச் சேர்க்காத சகோதரி உள்ளிட்ட ஐந்து சிறுமிகளைக் கைது செய்ய வேண்டும் என 8 வயதுச் சிறுவன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

கோழிக்கோடு சிட்டி கஸபா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய பாலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உமர்நிதால். புதிய பாலம் அருகில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காகச் சென்ற ஜன மைத்றி அதிகாரிகளிடம் (மக்கள் நட்புக் காவல் அதிகாரிகள்) சிறுவன் உமர்நிதால் ஒரு புகார் மனு அளித்தான்.

அந்தப் புகாரில், "நான் அபே இன்டர்நேஷனல் ஸ்கூலில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். என் வீட்டின் அருகில் உள்ள ஜவாகீரா, அமீகா, ஹசா, பெஹ்மில், ஹிதாயா ஆகிய ஐந்து சிறுமிகள் என்னைத் தொல்லை செய்கிறார்கள். எனவே உடனடியாக அவர்களைக் கைது செய்யவேண்டும்" என அந்தப் புகாரில் கூறியிருந்தான்.

சிறுவன் உமர்நிதால் வீட்டில் விசாரணை நடத்தும் போலீஸ
சிறுவன் உமர்நிதால் வீட்டில் விசாரணை நடத்தும் போலீஸ

சிறுவனின் புகார்தானே என அலட்சியம் செய்யாமல் அந்த போலீஸார் சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்தச் சிறுவன் புகார் அளித்தது தனது சகோதரி உள்ளிட்ட சிறுமிகள் மீது என போலீஸாருக்குத் தெரியவந்தது. அந்தச் சிறுவனை விளையாட்டுக்குச் சேர்க்காமல் புறக்கணித்ததால் மனமுடைந்து இந்தப் புகாரை அளித்துள்ளதும் தெரியவந்தது. சிறுமிகளை அழைத்து, சிறுவன் உமர்நிதாலையும் விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்ளும்படி போலீஸார் அறிவுரை கூறிச் சென்றனர்.

இதுகுறித்து கஸபா போலீஸ் ஜனமைத்றி பீட் அலுவலர் நிறாஸ் நம்மிடம், "நாங்கள் வேறு ஒரு விசாரணைக்காக புதிய பாலம் பகுதிக்குச் சென்றோம். எங்களைக் கண்டவுடன் அந்தச் சிறுவன் புகார் எழுதியிருக்க வேண்டும். நாங்கள் அங்கு பணி முடிந்து திரும்பும்போது இரவு 7 மணியை நெருங்கிவிட்டது. அந்த சமயத்தில் வீட்டுக்கு வெளியே வந்த சிறுவன், ' ஒரு கம்ப்ளைன்ட் இருக்கிறது' எனக் கைப்பட எழுதிய புகாரை என்னிடம் தந்தான்.

அதைப் படித்து பார்த்தபோது சிறுவனின் நிலைமை எனக்கு புரிந்தது. இப்போது இரவு ஆகிவிட்டதால் நாளை வந்து விசாரிக்கிறேன் எனக் கூறிச் சென்றேன். மறுநாள் நாங்கள் இரண்டுபேர் அங்கு சென்றபோதுதான் அவன் புகார் அளித்தது அவனது சகோதரி மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமிகள் மீது எனத் தெரியவந்தது.

போலீஸ் ஜன மைத்றி பீட் அலுவலர் நிறாஸ்
போலீஸ் ஜன மைத்றி பீட் அலுவலர் நிறாஸ்
அதைப் படித்துப் பார்த்தபோது சிறுவனின் நிலைமை எனக்குப் புரிந்தது. இப்போது இரவு ஆகிவிட்டதால் நாளை வந்து விசாரிக்கிறேன் எனக் கூறிச் சென்றேன்.
நிறாஸ்

தன்னை விளையாட்டுக்குச் சேர்க்காமல் புறக்கணித்த அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனச் சிறுவன் பிடிவாதமாக இருந்தான். `அவர்களை கைது செய்தால் ஜெயிலில் அடைப்போம்' என நான் கூறினேன். `இவர்களை ஜெயிலில் போட்டால் எனக்கு விளையாட யாருமே இல்லை' என அப்பாவியாகச் சொன்னான். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமிகளிடம், `உங்கள் சகோதரனை விளையாட்டுக்குச் சேர்க்க வேண்டும்' எனக் கூறினேன். சிறுமிகளும் ஏற்றுக் கொண்டனர்.

`இனி விளையாட்டுக்குச் சேர்க்காமல் இருந்தால் உங்களுக்கு போன் செய்கிறேன்' என எனது எண்ணை அந்தச் சிறுவன் வாங்கிக்கொண்டான். இதையெல்லாம் குழந்தைகளின் பெற்றோர் சிரித்தபடி வேடிக்கை பார்த்தனர். சிறுவன் புகார் அளித்த சம்பவம் நாங்கள் சொன்ன பிறகுதான் பெற்றோருக்கு தெரியவந்தது. சின்னக் குழந்தைகள்கூட இதுபோன்ற பிரச்னைகளுக்கு போலீஸை அணுகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இந்தப் புகாரை நாங்கள் கையாண்டோம்" என்றார்.

சிறுவன் உமர்நிதால் எழுதிய புகார்
சிறுவன் உமர்நிதால் எழுதிய புகார்

இதுகுறித்து சிறுவன் உமர்நிதால் கூறும்போது, "இவர்கள் என்னை விளையாட்டுக்குச் சேர்ப்பதில்லை. நீ ஆண் என்பதால் பெண்களுடன் விளையாட வேண்டாம், வீட்டில் போய் டி.வி பார் எனக் கூறினார்கள். நான் போலீஸில் புகார் கொடுப்பேன் எனச் சொல்லிப்பார்த்தேன். அதற்கும் என்னை பரிகாசம் செய்தார்கள். லாக்டெளன் காரணமாக வேறு நண்பர்களுடன் விளையாடச் செல்லமுடியாது. எனவேதான் நான் போலீஸில் புகார் கொடுத்தேன். போலீஸார் வந்து சொன்னபிறகு என்னை விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்கிறார்கள்" என்றான் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு