Published:Updated:

'நானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன்!'- வரலெட்சுமி சரத்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'நானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன்!'- வரலெட்சுமி சரத்குமார்
'நானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன்!'- வரலெட்சுமி சரத்குமார்

'நானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன்!'- வரலெட்சுமி சரத்குமார்

மிழ், மலையாள திரை உலகில் பிரபலமான நடிகை பாவனா, காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணை  நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நடிகை வரலெட்சுமி சரத்குமார், 'நானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி இருக்கிறேன்' என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

வைரலாகி வரும் வரலெட்சுமியின் ட்விட்டர் பதிவு இதுதான்:

 ''இரண்டு நாட்களாக இதுபற்றி எழுதலாமா வேண்டாமா என்னும் விவாதத்தில் இருக்கிறேன். நான் ஒரு டிவி சேனல் நிகழ்ச்சி பொறுப்பாளர் கலந்துகொண்ட கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அரை மணி நேர கூட்டம் நிறைவடைந்த பின்னர், அந்த டிவி சேனலின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்னிடம் வந்து, ‘நாம் எப்போது வெளியில் சந்திக்கலாம்?’ எனக்கேட்டார். 'எதற்காக? எந்த வேலைக்காக?' என  நான் கேட்டேன். ஒரு நமட்டுச் சிரிப்போடு, 'பணி விஷயமாக இல்லை. மற்ற வேலைகளுக்கு' என்றார். இதைக் கேட்டவுடன் எனக்கு ஆத்திரமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அவரிடம், ‘நீங்கள் முதலில் இந்த இடத்தை விட்டுக் கிளம்புங்கள்’ என்றேன். 'அவ்ளோதானா?' எனக்கேட்டுவிட்டு, மீண்டும் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுக் கிளம்பிவிட்டார். 

திரைப்பட உலகிலும் சரி, வெளியுலகிலும் சரி... இச்சம்பவத்தைக் கேட்பவர்கள், 'திரைப்படத்துறையே அப்படித்தான்’ என்பார்கள். சிலர், 'புகார் தெரிவிக்கலாம்  அல்லது கண்டுக்காம விட்டுவிடலாம்' என அறிவுறுத்துவார்கள். 

திரைப்படத்துறை என்னை  இறைச்சித் துண்டு போல் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது ஏற்கெனவே பெண்களை எப்படி திரையுலகம் பார்க்கிறதோ அதை பார்வையில் என்னையும் பார்க்கட்டும் என்றோ நான் இத்துறைக்கு வரவில்லை. நடிப்பு எனக்குப் பிடிக்கும். அதை நான் நேசிக்கிறேன். நடிப்பு என் தொழில். பிடித்தமான தொழில். நான் எனது பணியில்  அதிக உழைப்பைச் செலுத்தி பணிபுரிந்து எனக்கென ஓர் இடத்தை வைத்துள்ளேன். இதுபோன்ற அதிர்ச்சியான சூழலுக்காக என்னை நான் மாற்றிக்கொள்வதாகவோ அல்லது இப்பணியை விட்டு விலகிச்  செல்வதாகவோ இல்லை. 

இச்சூழலில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு, அந்த கசப்பான சம்பவத்தை இங்கு பதிவு செய்வது. ஆண்கள் பெண்களை அவமரியாதை செய்வதை விட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். என்னுடைய  முடிவு. 

நான் ஒரு நடிகை. திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது போல் நிஜ உலகிலும் நான் அம்மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறேன் என நினைத்துக் கொண்டு அவமரியாதையாக நடக்கக்கூடாது. இது என் வாழ்க்கை. என்னுடைய உடம்பு. நான் விரும்பும் வகையில் வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை உண்டு. எந்த ஆணும், என்னிடம்  அவமரியாதையாக நடந்துகொள்ளலாம் என நினைத்துவிடக்கூடாது. 

இது ஒரு சாதாரண விஷயம் என நினைப்பவர்களுக்கு இப்பதிவு தேவையற்றதாக தோன்றும். 'உங்களுக்கு தான் எதுவும்  நடக்கவில்லையே? அப்புறம் ஏன் இந்தப் பதிவு?' எனத் தோன்றும். இச்சூழல் என்பது கத்தி முனையில் நடப்பது போன்றது. அந்த ஆணை அடையாளப்படுத்துவதை பெரிய விஷயமாக கருதவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் பாதுகாப்போடு அந்தத் தருணத்தில் இருந்து வந்துவிட்டாலும், அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் சந்தோஷம்  அடைகிறேன். 
    
பெண்களிடம், 'இப்படி உடையணியுங்கள்', 'இப்படித்தான் பேச வேண்டும்', 'இப்படித்தான் நடக்க வேண்டும்' என்பதற்குப் பதிலாக, ஆண்களிடம், 'பெண்களின் உடல்  அங்கங்களை பற்றி நினைப்பதை விடுங்கள். பெண்களிடம் ஆளுமை, திறமை, தன்னம்பிக்கை, மனிதநேயம் என அவர்களின் குணங்களைப் பார்க்கப் பழகுங்கள்' என்று சொல்லுங்கள். இது வீட்டில் இருந்து, பெற்றோர்களின் சரியான குழந்தை வளர்ப்பு முறையில் இருந்து துவங்குவது அவசியம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என்பது,  திரையுலகில் மட்டும் நடப்பது இல்லை. உலகெங்கிலும், அனைத்துத் துறைகளிலும், கலாசாரம், வயது என்று எந்த  வித்தியாசமுமின்றி  நடைபெறுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களை போகப்பொருளாக பார்ப்பது, ஆணுக்குக் கீழாக நினைப்பது மரபணுவிலேயே ஊறிவிட்ட கலாசாரமாக உள்ளது. இதனை மாற்ற ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

சமீபமாக பாலியல் வன்புணர்ச்சி, பெண்களை அவமரியாதை செய்வது உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. நம்  கல்விமுறை நம்மை எதை நோக்கி அழைத்துச் செல்கிறது? நான் பாதிக்கப்பட்டவள் என்று கூறி இவ்விஷயத்தில் பெரிய பங்களிப்பை ஆற்ற இப்பதிவை பதிவிடவில்லை. பயத்தின் காரணமாக வெளியில் சொல்ல  முடியாமல் தவித்து வரும் பெண்களின் சார்பாக இக்கருத்துகளை முன்வைக்கிறேன். ஆண்கள் மீதான பயத்தைப் பற்றி பேசினாலே பெண்கள் தண்டிக்கப்படும் சூழல் சமூகத்தில்  உள்ளது.'' 

 

ஆம்... பெண்கள் காலம் காலமாகப் பேசாததைப் பேச வேண்டிய தருணம் இது. வெல்கம் வரலெட்சுமி!      

- ஆர். ஜெயலெட்சுமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு