''2002ம் ஆண்டு என் வீட்டுக்குப் பின்னாடி விளையாடிட்டு இருந்தேன். அப்ப மண்ல கனமான ஒரு பொருள் புதைஞ்சு கிடந்தது. ஆசையா அதை எடுத்து வெளியாடப் போனேன். திடீர்னு டமார்னு ஒரு சத்தம். அவ்வளவுதான் கேட்டது எனக்கு. கண் முழிச்சு பார்த்தப்ப ஒருகையோட முன்பாகம் இல்லை. கால் சிதைஞ்சு போயிருந்தது. இரண்டு வருஷ படுக்கை அவஸ்தை பரிசா கிடைச்சது" என்கிற மாற்றுத் திறனாளி மாளவிகாவின் தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் அவர் அடைந்திருக்கும் இடம் ஐ.நா.சபை.
ஆம், ஐ.நா.சார்பாக நியூயார்க்கில் மார்ச் 11 மற்றும் 12 இரண்டு நாள் நடைபெறும் பெண்கள் தின விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த மாளவிகாவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான மாளவிகாவின் பேச்சை உலகமே கவனிக்கப் போகிறது. ''ஐ.நா.சபை அழைப்பு கடிதத்தைப் படிச்சதும், என்னையே நாள் கிள்ளிப் பார்த்துகிட்டேன். என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானது மாதிரி இருக்கு. வாழ்க்கையில பல வலிகள், வேதனைகளை தாண்டி வரும்போது கூட ஏற்படாத சந்தோஷம் இப்ப கிடைச்சிருக்கு. பெண்ணாப் பிறந்ததுக்கு நான் பெருமைப்படுற தினம் இதுதான்.
பொதுவாவே சமூகத்துல, மாற்றுத் திறனாளி பெண்கள் சமத்துவமின்மை மற்றும் உடல் ஊனம் என்கிற இரண்டு சவால்களை சந்திக்க வேண்டியது இருக்குது. மாற்றுத் திறனாளிகள் தங்களை தகுதிக் குறைவானவங்களா நினைச்சுகிட்டு, ஒரு இடத்துக்குள்ள முடங்கிப் போயிடுறாங்க. அங்கதான் அவங்களோட பலம் மத்தவங்களுக்கு தெரியாமப் போயிடுது.
என்னை எடுத்துக்கோங்க, இன்னைக்கு பல விழாக்களுக்கு தன்னம்பிக்கை பேச்சாளரா இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில பேசுறது எனக்கு சாத்தியமானது என் அம்மாவாலதான்" என்றவர் தனக்கு நடந்த விபத்து பற்றியும் பேசினார்.
''அப்ப நான் எட்டாவது படிச்சுட்டு இருந்தேன். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துள்ளிக்குதிச்சு, விளையாடிட்டு இருப்பேன். அப்பலாம் எனக்கு டான்ஸ்ராகனுங்கிறதுதான் கனவே. அதுபோக, படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு எடுத்த செயல்கள் எல்லாத்திலேயும் ஆல் ரவுண்டரா இருந்தேன். எனக்கு ஏற்ப்பட்ட விபத்துல கைபோனதுல ஆரம்பிச்சு, கால் சேதமாச்சு, நரம்புகள், எலும்புகள்னு சொல்லமுடியாத பாதிப்புகள் உடம்புல உண்டாச்சு.
விபத்து நடந்த 2 வருஷத்துல 13 அறுவை சிகிச்சைகளை என் உடம்பும் மனசும் தாங்குச்சு. மருத்துவமனையே பெட்ரூமாச்சு. இப்ப கூட தனிமையில இருக்கிறப்ப அந்த வெடிச்சத்தத்தோட ஒலி கேட்கிற மாதிரி இருக்கும். என்னை ரத்தச் சகதியில பார்த்த அம்மா அலறுனப்பதான், என் கையில பாதி இல்லாமப் போனதால உண்டான வலியை அனுபவிச்சேன். ரெண்டு காலும் பிய்ந்துத் தொங்கிட்டு இருந்தது. அம்மாதான் கூடவே இருந்து ஒவ்வொரு தருணத்துலேயும் உன்னால முடியும்... உன்னால முடியும்னு சொல்லிட்டே இருந்தாங்க. வெளியுலகுக்கு தன்னம்பிக்கை பெண்ணா மிளர ஆரம்பிச்சதுக்கு முதல் ஊக்கம் அம்மாகிட்ட இருந்துதான் கிடைச்சது. அம்மாவோட ஊக்கத்தாலதான் டூடோரியல் போய் படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினேன்.
அதுகப்புறம் கிடைச்ச அங்கீகாரம் எல்லாம் விடா முயற்சியால வந்தது. இப்பவும் என்னால தொடர்ச்சியா 10 நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. கால் எல்லாம் வலியெடுக்க ஆர்மபிச்சிடும். வெயில் காலத்துல கையில செயற்கை கை பொருந்தியிருக்கிறது ரொம்ப சிரமப்படுத்தும். என்னோட செயற்கை கையாலதான் நான் கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்றது முதற்கொண்டு பல வேலையை செய்ஞ்சுட்டு வர்றேன். எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் சிரமத்தோட சக்சஸ் பண்ணி காண்பிக்கிறேன். எதையும் முடியாதுனு சட்டுனு சொல்லிட மாட்டேன்" என்றவரிடம் திருமண வாழ்க்கைப் பற்றி கேட்டால்,
''கணவரும் நானும் சந்தோஷமா அமெரிக்காவுல இருக்கோம். நல்ல புரிதல் இருக்கு. கல்யாணமானாலும் நான் மாளவிகாவா அடையாளம் காணப்படுறதுலதான் சந்தோஷப்படுறேன். எல்லா இடத்துக்கும் தனியாதான் போறேன். என் தேவைகளை நானே செய்ஞ்சுகிடுறேன். ஒரு குடும்ப தலைவியா அத்தனை வேலைகளையும் நானே செய்றேன்" என்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் மாளவிகா.
''என்னை மத்தவங்க எப்படி பார்க்கனும்னு நான்தான் தீர்மானிக்கனும்ங்கிறதுல உறுதியா இருந்தேன். என் தோற்றத்தை விட என் திறமையை பார்க்கனும். என்னோட திறமைகளை முழுமையா பயன்படுத்துறது மாதிரியான அத்தனை விஷயங்களையும் செய்ஞ்சுட்டு வர்றேன். ஒருவேளை எனக்கு இப்படி நடக்கலைனா நான் இவளோ உறுதியான தன்னம்பிகை மனுஷியா உருவாகியிருக்க மாட்டேனோ என்னவோ" என்று சிரித்தபடி ஐ.நா.சபையில் பேசுவதற்கான குறிப்புகளில் மூழ்குகிறார் மாளவிகா.
- ஆர். ஜெயலட்சுமி