Published:Updated:

விலங்குகளுக்கு விலங்கு இடாதீர்கள் #TheSecretLifeofPets

விலங்குகளுக்கு விலங்கு இடாதீர்கள் #TheSecretLifeofPets
விலங்குகளுக்கு விலங்கு இடாதீர்கள் #TheSecretLifeofPets


முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்று இருக்கிறது. நாம் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்ட பிறகு வீட்டில் உள்ள அஃறிணைப் பொருட்கள் எல்லாம் கூடி கும்மாளமிட்டால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை அடிப்படையாகக்கொண்டது. கவிதையில் வருபவன் எதையோ மறந்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப, கும்மாளமிட்டுக்கொண்டிருந்த அனைத்துப் பொருள்களும் அதிர்ச்சியடைந்து, 'என்னடா இவன் சீக்கிரம் வந்துட்டான்' என்று எரிச்சலுடன் பழைய இடத்துக்கே சென்று அமரும். உள்ளே நுழைபவனும் அவற்றின் தனிமையைக் குலைத்துவிட்டதற்காக வருந்துவான்.

இந்தத் திரைப்படமும் ஏறத்தாழ அதே கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டது. பாதுகாப்பு, அசட்டுப் பெருமை, தனிமை போன்ற தங்களின் சுயநலக் காரணங்களுக்காக வீட்டுப் பிராணிகளை வளர்க்கும் மனிதர்கள், தாங்கள் வெளியே செல்லும்போது பெரும்பாலும் தனிமையில் விட்டுச் செல்வார்கள். எத்தனையோ வீடுகளின் வாசல்களில், சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட நாய்கள் அவ்வப்போது எங்கேயோ பார்த்து குரைத்துக்கொண்டோ, சோர்வுடன் முடங்கி படுத்துக்கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். தங்களின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில்கொள்ளும் செல்லப் பிராணிகள் வளர்ப்பாளர்கள், அவற்றின் மகிழ்ச்சியையும் கணக்கில்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படியான விலங்குகளின் துயரை சுவாரஸ்யமான பயணம் ஒன்றின் மூலமாக சொல்கிறது இந்தத் திரைப்படம்.

'மேக்ஸ்' என்கிற நாயைத் தெருவில் கண்டெடுத்து வளர்க்கிறாள் கேட்டி என்கிற பெண். இருவரும் பரஸ்பரம் அன்புடன் பழகுகிறார்கள். கேட்டி தன்னை விட்டு வெளியில் செல்வது மேக்ஸுக்குப் பிடிக்காது. தடுக்கப் பார்க்கும். குதிக்கும்; முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும். கேட்டி எப்படியோ அதை தாஜா செய்துவிட்டுக் கிளம்பிவிடுவாள். மேக்ஸுக்கு துக்கமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அக்கம்பக்கத்து வீடுகளில் இதேபோன்று வீட்டில் விடப்பட்டிருக்கும் விலங்குகள்தான் மேக்ஸூக்கு துணை. கொழுகொழு பூனை, புல்டாக் வகை நாய், கிளி, எலி என்று பல நண்பர்கள். கூட்டு சேர்ந்துகொண்டு வீட்டுக்குள் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். இது தவிர, கிட்ஜெட் என்கிற பாமரேனியன் பெண் நாய். இதற்கு மேக்ஸின் மீது ரகசியக் காதல். அவ்வப்போது மேக்ஸை 'சைட்' அடிக்கும்.

மேக்ஸின் வாழ்க்கை இப்படி சுவாரஸ்மாக போய்க்கொண்டிருக்கும்போது, 'டியூக்' என்கிற பெயரில் வில்லனாக அதன் வாழ்க்கையில் நுழைகிறது. பெரிய சைஸ் நாய் அது. மேக்ஸைப் போலவே எவராலோ கைவிடப்பட்ட அதை, வீட்டுக்கு அழைத்து வருகிறாள் கேட்டி. தன்னுடைய சுதந்திரமும் கேட்டியின் மூலம் கிடைக்கும் அன்பும் பங்கு போடப்படுவதை மேக்ஸால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. டியூக் தந்திரக்கார நாயாக இருக்கிறது. கேட்டியின் எதிரில் ஒழுங்குப் பிள்ளை போல் நடந்துகொள்கிறது. அவள் இல்லாதபோது, 'யேய்.. மவனே யாருகிட்ட' என்று மேக்ஸை உண்டு இல்லை என வம்பு செய்கிறது.

இரண்டு நாய்களும் எலியும் பூனையுமாக இருக்கின்றன. மேக்ஸ் சமாதானமாக வெள்ளைக் கொடியைக் காட்டினாலும், அந்த உத்தி சிறிதுதான் பலன் அளிக்கிறது. மேக்ஸ் அழாக்குறையாக தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்கிறது. 'உன் உரிமையை நிலைநாட்டு' என்கிறார்கள் நண்பர்கள்.

மேக்ஸ் தனது நண்பர்களுடன் ஒருநாள் உலா செல்கிறது. கூடவே, வில்லன் டியூக்கும். தன் நண்பர்களின் எதிரில் டியூக்கிடம் பந்தா காட்டுகிறது மேக்ஸ். வெறுப்புறும் டியூக், அதைத் தனியான இடத்துக்கு அழைத்துச் சென்று 'கவனிக்க' முயற்சிக்க, மேக்ஸ் தப்பியோடுகிறது. இருவருக்கும் நடக்கும் ஓட்டப்பந்தயத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் விழுகிறார்கள். அங்கு இரண்டுப் பூனைகளைப் பார்த்ததும் டியூக் தனது பலத்தைக் காட்ட முயல்கிறது. ஆனால், அந்த இடத்தைச் சுற்றியும் உள்ள பல பூனைகள் ஒன்று கூடி வர, டியூக் அலறியபடி தப்பியோடுகிறது. 'கைப்புள்ள' மாதிரி தனியாக மாட்டிக்கொள்ளும் மேக்ஸை பூனைகள் ரவுண்டு கட்டிச் சாத்துகின்றன.

இந்தச் சமயத்தில் விலங்குகளைப் பிடித்துச் செல்லும் அமைப்பாளர்களிடம் இரண்டு நாய்களும் மாட்டிக்கொள்கின்றன. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று கவலை அடைகின்றன. அந்த வண்டிக்குள் இன்னொரு பெரிய நாயும் இருக்கிறது. ஆனால், அது தனியாள் அல்ல. அதை மீட்பதற்காக ஒரு பயங்கரவாதக் குழு வருகிறது. சிறிய முயல்தான் அந்தக் குழுவின் தலைவன். அந்தக் குழு காவலர்களைத் திசை திருப்பி வண்டியை விபத்தில் சிக்கவைத்து தங்கள் கூட்டாளியைக் காப்பாற்றுகின்றன.

மேக்ஸூம் டியூக்கும் தங்களையும் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சுகின்றன. "நீங்கள் மனிதர்களை வெறுக்கும் குழுவைச் சார்ந்தவர்களா?" என்று முயல் கேட்கிறது. அந்தக் கேள்வி இவர்களுக்குப் புரியவில்லை. ''மனிதர்களால் தெருவில் துரத்தப்பட்ட விலங்குகளாகிய நாங்கள் எல்லாம் இணைந்து ஒரு ரகசியக் குழுவை ஏற்படுத்தியிருக்கிறோம். மனிதர்களைப் பழிவாங்குவதுதான் எங்கள் நோக்கமும் லட்சியமும். நீங்கள் மனிதர்களைப் பழி வாங்கியிருந்தால் எங்கள் குழுவில் சேர்த்துக்கொள்கிறோம். உங்களையும் காப்பாற்றுகிறோம்" என்று முயல் விளக்குகிறது.

'எப்படியாவது தப்பித்தால் போதும்' என்கிற நோக்கில் இரண்டு நாய்களும் அதை ஒப்புக்கொள்கின்றன. முயல் மற்றும் கலகக் குழுவின் கூட்டாளிகள் அவர்களை தங்களின் ரகசிய இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கே இதுபோல மனிதர்களைப் பழி வாங்கும் நிறைய விலங்குகள் இருக்கின்றன. பயங்கரமான வில்லன்களின் நடுவே, 'காமெடியன்கள்' மாதிரி மாட்டிக்கொள்ளும் இரண்டு நாய்களின் சாயமும் உடனே வெளுத்துப்போகிறது. 'ஹேய்.. இவை வீட்டில் வளரும் விலங்குகள். நம்மை ஏமாற்றிவிட்டன. கொல்லுங்கள்' என்று முயல் கூப்பாடு போட, எல்லா விலங்குகளும் துரத்துகின்றன.

ஒருபுறம் இப்படி விபரீதமான சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்க, மறுபுறம் மேக்ஸை காப்பாற்றுவதற்கான 'ஆப்ரேஷன்' ஒன்று திட்டமிடப்படுகிறது. மேக்ஸை சைட் அடித்துக்கொண்டிருக்கும் பெண் நாய், மேக்ஸை காணாமல் கவலையுறுகிறது. நண்பர்களிடம் இதைப் பற்றிச் சொல்லி, 'அவர்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்' என்கிறது. மேக்ஸின் நண்பர்கள் இணைந்து ஒரு படையாக கிளம்புகின்றன.

பயங்கரவாதக் குழுவிடம் இருந்து மேக்ஸூம் டியூக்கும் தப்பித்தார்களா? மேக்ஸின் காதலி படை எவ்வாறு அவர்களுக்கு உதவியது என்பதை ஆக்‌ஷன் படத்துக்கான சாகசக் காட்சிகளுடன் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

பொதுவாக, டிஸ்னி ஸ்டுடியோ தயாரிக்கும் அனிமேஷன் திரைப்படங்கள்தான் வசூலில் சாதனை செய்யும்.. அந்த மரபை உடைத்து, இல்லுமினேஷன் எண்டர்மெயின்ட் உருவாக்கிய இந்தத் திரைப்படம், வசூலில் பட்டையைக் கிளப்பி இருக்கிறது. 2016-ம் ஆண்டு அதிகம் வசூலான திரைப்படங்களில் ஆறாம் இடத்தைப் பெற்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் அடிப்படையாக என்னவெல்லாம் சுவாரசியம் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இந்தத் திரைப்படத்தில் இருக்கின்றன. மேக்ஸூக்கும் டியூக்குக்கும் இடையில் நிகழும் பங்காளிச் சண்டையும், ஆபத்தில் சிக்கிக்கொண்ட பிறகு ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு நட்பாவதும் சுவாரசியமான காட்சிகள். அழகான குட்டி முயல் ஒன்றை, கர்ணகடூரமான வில்லனாகச் சித்தரித்திருப்பது நகைச்சுவையாக இருந்தாலும், அந்த வித்தியாசமே அந்தப் பாத்திரத்துக்கு சுவையைக் கூட்டுகிறது. 'வெசம் வெசம்' என்று நம்மை நினைக்கவைப்பது போல குட்டி உருவத்துக்குள் இருக்கும் ஒரு குட்டிச்சாத்தான்.

மேக்ஸை 'ஒன்சைடாக' லவ்வடித்து வெட்கப்படுவதும், தன் காதலனைக் காப்பாற்ற 'பூவொன்று புயலானது' கணக்காக வீரத்துடன் கிளம்பும் பெண் நாய் பாத்திரமான 'கிட்ஜெட்' சாகசங்கள் படு ரகளை. அழுகாச்சி சீரியல் பார்த்து காதலனின் நினைவு வருவது, கொழுகொழு பூனை செய்யும் சேட்டையை எதிரணியினர் வீடியோ எடுத்து வெளியிடுவது, பிறகு அதை விளம்பரத்தில் பார்த்து பூனை அலறும் காட்சிகல் ஆகியவை மனிதர்களின் நடவடிக்கைகளை நினைவுபடுத்திச் சிரிக்கவைக்கின்றன. பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் குரல் தந்து உயிரூட்டி இருக்கிறார்கள்.

வீட்டின் செல்லப் பிராணிகள் தனிமையில் விடப்படும்போதோ, துரத்தப்படும்போதோ அவற்றின் உணர்வுகள் எவ்வாறெல்லாம் காயப்படுகின்றன என்பதைச் சிரிக்கவைக்கும் காட்சிகளின் இடையே, சிந்திக்கவைக்கும்படி இந்தத் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் இயக்குநரான Chris Renaud வீட்டில் செல்லப் பிராணிகள் நிச்சயம் இருக்கும் என்றுதான் தோன்கிறது. அவற்றின் தனிமையை உணர்ந்ததால்தான் இந்தத் திரைப்படத்தை உருவாக்கி இருப்பார்.

குழந்தைகளுடன் பார்த்து ரசிப்பதற்கேற்ற ரகளையான அனிமேஷன் திரைப்படம் இது. குறிப்பாக, வீட்டுப் பிராணிகளை வளர்ப்பவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். 'வீட்டைவிட்டு வெளியே போ நாயே' என்று மனிதர்களை மட்டுமல்ல, நாயைக்கூட சொல்லக் கூடாது என்கிற படிப்பினையை இந்தத் திரைப்படம் தருகிறது.

- சுரேஷ் கண்ணன்.

அடுத்த கட்டுரைக்கு