Published:Updated:

''பெண்ணின் பேய் மழை பிரியத்துக்கு என்ன மதிப்பு!?’’ 'காற்று வெளியிடை' மணிரத்னத்துக்கு ஒரு கேள்வி #VikatanExclusive #MustRead #NeverMissStory

''பெண்ணின் பேய் மழை பிரியத்துக்கு என்ன மதிப்பு!?’’  'காற்று வெளியிடை' மணிரத்னத்துக்கு ஒரு கேள்வி #VikatanExclusive #MustRead #NeverMissStory
''பெண்ணின் பேய் மழை பிரியத்துக்கு என்ன மதிப்பு!?’’ 'காற்று வெளியிடை' மணிரத்னத்துக்கு ஒரு கேள்வி #VikatanExclusive #MustRead #NeverMissStory

'

"காற்று வெளியிடை"'- மணிரத்னத்தின் மற்றுமோர் காதல் களம். ஏர் ஃபோர்ஸ் பைலட் கார்த்தி, டாக்டர் அதிதி... இவர்களுக்கு இடையேயான காதலில், ஆணின் ஆதிக்கமும் பெண்ணின் பேரன்பும் மாறி மாறி ஒன்றை ஒன்று வீழ்த்திக்கொள்கின்றன. என்றாலும் மொத்தத்தில், தன்மானம் உள்ள ஒரு பெண்ணை காதலின் அடிமையாக்கி, அபலையாக்கியிருப்பது... 'என்ன மணி சார்?' காற்று வெளியிடை  ஏமாற்றம்தான் தருகிறது. 'பெண்ணின் சுயமரியாதை காதலின் விலையா?' என்ற கேள்விக்கு, அதிதியை 'ஆம்' என்ற பதிலுடன் நிற்கவைத்திருப்பது வருத்தம். 

ஃபிலிம் மார்க்கெட்டிங் கவர்ச்சி மெட்டீரியலாக ஹீரோயின்கள் பயன்படுத்தப்படும் தமிழ் சினிமா சூழலில், ஒரு கதாநாயகியின் உருவாக்கம் பற்றி 'ஏன் இப்படி' என்று கேள்வியெழுப்பும் அவசியம் என்ன? அந்த நாயகியின் பிரம்மா மணிரத்னம் என்பதால். சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கான உலகைக் கொண்டுவர உரமாக உருவாக்கப்பட்ட 'அஞ்சலி' ரேவதி, நெல்லை ஆங்கிலத்தில்(!) கேஷ்மிர் மிலிட்டரி கேம்ப்பில் படபடக்கும்  'ரோஜா' மதுபாலா, கண்களில் தேக்கியிருக்கும் புதிரை நம்மை அவிழ்க்க அனுமதிக்காமல் படம் முழுக்கக் கடக்கும் 'உயிரே' மனிஷா, மிடில் க்ளாஸ் பெண்ணின் அழகு மனசை,  உணர்ச்சிகளைச் சொன்ன 'அலைபாயுதே' ஷாலினி, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்த 'குரு' ஐஸ்வர்யாராய், 'தைரியம் கொடு' என்று கேட்டுக் கலங்கவைக்கும் 'ராவணா' ஐஸ்வர்யாராய், 'நான் ஜென் ஸி டைப்' என்ற ஸ்டன்னிங் 'ஓ.கே. கண்மணி' நித்யா மேனன்... இப்படி மணிரத்னத்தின் கதாநாயகிகள் பலரும் வலிமையான திரைப் படைப்புகள். அதனால்தான், அதிதியிடமும் அந்த வலிமையைத் தேடுவதைத் தவிர்க்கமுடியவில்லை. 

'காற்று வெளியிடை'க்கு வருவோம்.  தன்னை மீண்டும் தேடவைக்கும் அழகு, கண்கள் குறுகுறுக்கும் புன்னகை, ரசிக்கவைக்கும் பேச்சு என மற்றுமொரு காதல் பெண்ணாக  அறிமுகமாகிறார் 'லீலா' அதிதி. பனிச்சிகரத்தில் இருந்து வெளியேற 'வருண்' கார்த்தி வலுக்கட்டாயப்படுத்தி அழைக்கும்போது மறுத்து, 'பொண்ணுகிட்ட பலத்தைக் காட்டும் ஆணை எனக்குப் பிடிக்காது', 'ஆபத்துன்னா அப்போ அப்படி விளக்கமா சொல்லு... ஏன் மக்குனு திட்டுற?' என்று சீறித் திமிறும்போது, 'ஓ... இவர் வேற லெவல் பெண்' என லீலாவின் மீது 'எக்ஸ்ட்ரா நைஸ்' ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அவரின் அந்தத் தன்மானத்தை வருண் பின்வரும் காட்சிகளில் காயப்படுத்திக் கதறவிட்டுக்கொண்டே இருப்பதும், ஒவ்வொரு ஊடலின்போதும் வலிமையான பதில் வினை எதுவும் இல்லாமல் லீலா, வருணின் வழிக்குக் கொண்டுவரப்படுவதும்... ஏமாற்றம். 

நண்பர்கள் சூழ இருக்கும் ஒரு காட்சியில் கார்த்தியும் அதிதியும் தங்கள் கருத்துகளில் வேறுபட, அதிதியின் வாயை அடக்கச் சொல்கிறார் கார்த்தி. 'நான் பொம்பளைங்கிறது  பிரச்னையா, இல்ல ஒரு சிவிலியன் டாக்டர்ங்கிறது பிரச்னையா?' என்று இயல்பாகக் கேட்கும் அதிதியை, கைகள் முறுக்கி, கோபத்தில் தள்ளிவிட்டு என பலவந்தமாகக் கையாளும் கார்த்தி, 'ஆம்பள ஆம்பளதான், பொம்பள பொம்பளதான்' என்று வசனம் பேசும்போது, அதிர்ந்துதான் போகிறோம். மசாலா படங்களில்கூட இப்போதெல்லாம் இதுபோன்ற வசனங்கள் தவிர்க்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், 'எழுத்து - இயக்கம்' மணிரத்னம் படத்தில் நிச்சயம் இது அதிர்ச்சியே. 'பொம்பளைன்னா...' என்று கார்த்தி சொல்ல, 'உனக்குப் பெத்துப்போட...' என்று அதிதி மூக்கு சிவக்க, 'ம்ம்ம்... அதுக்கும்தான்...' என்று கார்த்தி சொல்ல, தழும்பிய கண்களுடன் அங்கிருந்து அதிதி வெளியேறும்போது... இந்தக் காதல்(!) காட்சி சகிக்க முடியாத ஒரு சீற்றம் தருகிறது. கண்ணீரும் கோபமும் சரிவிகிதத்தில் இருந்திருந்தால் அதிதியை நாம் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், மானமுள்ள அந்தப் பெண்ணை காட்சிகள் நகர நகர கண்கள் மட்டுமே கசியவிட்டிருப்பதுதான் கொடுமை. 

தொடரும் காட்சி, அடுத்த ஆற்றாமை. மனம் புண்பட்டுச் சென்ற அதிதியை சமாதானப்படுத்தத் தேடி வருகிறார் கார்த்தி. செல்ஃப் டிக்னிஃபைடு பெண்ணான அதிதிக்கு, நியாயமாக அப்போது கோபம் வெடித்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் அழுகிறார். 'ஆஃபீஸர் டாக்டருக்கு சமமில்ல. ஆஃபீஸர் கீழ, டாக்டர் மேல' எனும் கார்த்தி, காதலால் கர்வம் அழிக்கப்பட்ட ஆணாக அதிதியின் கரங்கள் பற்றுகிறார். ஆனால் அடுத்த நொடிக் காட்சியிலேயே, 'பார்த்தீங்களா... லீலா வர மாட்டான்னு சவால் விட்டீங்களே... கூட்டிட்டு வந்துட்டேன் பாருங்க' என்று நண்பர்களிடம் தன் ஆண்தனத்தின் வெற்றியைக் கூவுகிறார். அவர் அணைப்புக்குள் சமாதானமாகவும்,  தன்னைக் கொடுக்கவும் என்ன அவசியம் அதிதிக்கு? எவ்வளவு ரோஷமுள்ள பெண்ணையும் எமோஷனலாகக் கையாண்டு அடக்கிவிடுவான் ஆண் - இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டுமா இதை?  

'வருண் அவங்கப்பா மாதிரி' என்கிறார்கள் அவன் குடும்பத்தார். அவன் அப்பா, ஒரு முரட்டுப் பிடிவாதக்காரர் என்று காட்டப்படுகிறார். 'விசி-க்கு விசி மட்டும்தான் பிடிக்கும்' என்கிறார் வருணின் தோழி ருக்குமணி. இப்படியாக, கார்த்தி ஒரு சுயநலமிக்க, ஆணாதிக்கவாதி என்பது அழுந்தச் சொல்லப்படுகிறது. 'அப்புறம் ஏன் லீலா மறுபடியும் விசி-கிட்டயே போறா?' என்ற நம் கேள்வியை ஆர்.ஜே. பாலாஜியை கேட்கவைக்கும் இயக்குநர், 'ஏன்னா அவன் விசி-ஐ லவ் பண்றா' என்று ருக்குமணியின் மூலம் விளக்கம் தருகிறார். காதலுக்குக் கண்ணில்லை என்பதில் இருந்து, எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் வரை... சமமான அறிவில், அழகில், அந்தஸ்தில் இல்லாத இருவர் காதலிக்கும் கதைக்களங்களை நாம் பார்த்திருக்கிறோம்தான். ஆனால், அவர்கள் எல்லாம் அன்பில் சமமாக இருப்பார்கள், ஒருவருக்கு ஒருவர் சளைக்காத நேசத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இங்கே, அதிதியின் பேய் மழை ப்ரியமும், கார்த்தியின் பொழுதுபோக்குக் காதல் போக்கும் மனதுக்குச் சமாதானமாக அமையவில்லை. பெண்ணின் அபரிமிதமான அன்பு ஏன் ஆணால் அவளை அடிமைப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது? 

'என்னை ராணி மாதிரி நடத்துற... இல்ல கீழ போட்டு மிதிக்கிற' - தொண்டைக்குள் அடைத்து வைத்த அழுகையுடன் ஒரு காட்சியில் சொல்கிறார் லீலா. இது லீலாவின் பிரச்னை மட்டுமா? ஆண்கள் அனைவருமே தன்னவளை ஒரு சந்தர்ப்பத்தில் கோபுரத்தில் வைத்துக் கொண்டாடுபவர்களாகவும், பல சமயங்களில் தங்கள் அலட்சியத்துக்கு இரையாக்குபவர்களுமாகவே இருக்கிறார்கள். அதையும் மீறித்தான், மழையுடன் சேர்த்து இடியையும் இறக்கும் வானின் ஈரத்தை வாங்கிக்கொள்ளும் நிலத்தாள் போல, ஆண்களின் அன்பைப் பெற்றுக்கொள்கிறார்கள் பெண்கள். லீலாவின் விரிந்த கண்களில் நிரம்பிக்கொண்டே இருக்கும் நீர், ஆண்களின் அலட்சியத்தியத்தால் காயப்பட்டுக் கதறும் பெண்களின் தொகுப்புக் கண்ணீர். சரிதான். ஆனால் அதை சரிசெய்ய வேண்டிய ஆணின் பொறுப்பைச் சொல்லாமல், 'டிசைனே அப்படித்தான். பெண்களுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை இதையெல்லாம் தவிர வேற வழியே இல்லை' என்று சொல்லும் திரைக்கதைக்குக் கண்டனங்கள். 

திருமணத்துக்குப் பதிவு செய்ய லீலாவை ரெஜிஸ்டர் ஆபீஸ் வரச்சொல்லிவிட்டு, 'ஸாரி... மறந்துட்டேன்' என்று வருண் எந்த வருத்தமுமின்றிச் சொல்வது, மருத்துவமனையில், ஒரு பொது இடத்தில், தன் குடும்பத்தார் முன்னிலையில், 'இதுல நீ தலையிடாத' என்று லீலாவை வாயை மூடச் சொல்லிக் கத்துவது, திருமணத்துக்கு முன் உருவான கருவை, 'நான் சரியான தகப்பனா இருக்க மாட்டேன்' என்று சொல்லி மறுப்பது, லீலாவின் பெற்றோரிடம் சரிசெய்ய வாய்ப்பில்லாத அளவுக்கு ஓர் அணுகுமுறையை வெளிப்படுத்துவது என... இந்த முரட்டு முட்டாள் ஆணுக்கு தன் மென்மையான காதலை லீலா தருவதற்கான எந்த வலிமையான காரணங்களும் வருணின் கேரக்டர் உருவாக்கத்தில் இல்லை. எனில், 'அவன் ஆண், இவள் பெண்' என்பதையே காரணமாகக் கொள்ள வேண்டுமா? 

கதை... பாலே டான்ஸ், டிரிங்க்ஸ் பார்ட்டி என்றிருக்கும் மேல்தட்டு மக்களின் களம். படம் நடப்பது, 1999.  அந்தக் காலகட்டத்திலேயே திருமணத்துக்கு முன் உறவு, சிங்கிள் மதர் முடிவு என்று புரட்சிகரமான சிந்தனை கொண்ட கதாநாயகி. ஆனால், மேல்வர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும்,  'முதல் புள்ளை பிறந்ததுக்கு அப்புறம் கல்யாணம்' என்று முற்போக்காகப் பேசினாலும், 'பொம்பள பொம்பளதான்' என்று டயலாக் பேசும் கதாநாயகன். ரொமான்ஸைவிட, கார்த்தியின் கதாப்பாத்திர வடிவமைப்பில் நெருடல்தான் தூக்கல்.

போர் முனையில் கொல்லுதலையே அறமாகக்கொண்ட ஃபைட்டர் பைலட் கார்த்தி, போராடி உயிர் மீட்டுக் கொடுக்கும் மருத்துவர் அதிதி... பணி இயல்பில் மட்டுமன்றி குணத்திலும் இரண்டு நேரெதிர் துருவங்களின் காதல் இது என்ற கரு புரிகிறது. கார்த்தி, ராவல்பிண்டி சிறைச்சாலைக் காலத்தில் தன் ஈகோவில் இருந்து விலகிக் கரைந்து, தன் ஜீவித்தலுக்கான அவசியமாக தன் காதலியையே கொள்வது புரிகிறது. ஓர் ஆண், தன் பெண்ணின் நேசமே உலகின் உன்னதம் என்று உணர்ந்து, ஒருமுறை அவள் முகம் பார்த்துவிடத் தேடி அலையும் தவிப்பு புரிகிறது. இறுதியில் அவளைக் கண்டடைந்து சரணடையும்போது, படம் முழுக்க ஆண்மை ஆதிக்கம் செலுத்தினாலும், பெண்மையே காதலை வெல்வதும் புரிகிறது. ஆனால், லீலாவின் பக்கம் இருந்து இந்த க்ளைமாக்ஸை எப்படி ஏற்பது? அவளது கேரக்டரைசேஷன் எவ்வளவு நியாயமற்று முடிக்கப்பட்டிருக்கிறது?

உயிருடன் இருக்கிறானா, இல்லையா, தன்னைத் தேடி வருவானா, இல்லையா... இப்படி ஒரு நிச்சயமற்ற காதலுக்கும் காதலனுக்கும் ஏன் தன் வாழ்வையே விலையாகக் கொடுத்து, வருணின் குழந்தையைப் பெற்றுக்கொண்டு தனித்து வாழவேண்டும் லீலா? அந்தப் பனிச் சிகரத்தில் குளிரில் உடல் உறையும்போதும், 'மக்குனு சொல்லாத' என்று சூடான அந்தத் தன்மானக்காரி, தன் கருவை வேண்டாம் என்றவனிடம், 'உனக்காக இல்ல... எனக்காக, இந்தச் சின்ன உயிருக்காக இவளை நான் பெத்துக்கிட்டேன், வளர்க்கிறேன்' என்றிருந்தால், பெண்மையின் வலிமை அங்கு பதிவாகியிருக்கும். இறுதிக் காட்சியில், அவனின் சுயநல இயல்பு அவளுக்கு விட்டுச் சென்ற காயங்களை, இத்தனை ஆண்டுகளாகத் தனித்திருந்த தன் வாழ்வின் பாடுகளை,  ஊசிபோன்ற 'மணி ஸ்பெஷல்' ஓரிரு வார்த்தைகளில் சொல்லி உணர்த்திய பின்னர், 'ஸ்டில்... ஐ லவ் யூ' என்றிருந்தால், அந்த மருத்துவப் பெண்ணின் காதலுக்கு நியாயம் கிடைத்திருக்கும்.  ஆனால், 'என்னைத் துறவான்...' என்ற நம்பிக்கையை வருண் மீது வைத்திருந்தவளுக்கு, அதை வருண் எப்படி மாற்றியெழுதியிருந்தான்? 'நான் உயிரோட இருக்கேன்னு தெரிஞ்சும் மூணு வருஷமா ஏன் வரல?' என்ற அவன் கேள்விக்கு, 'என்னை உனக்குப் பிடிக்கலைன்னா? ரோஹினியை உனக்குப் பிடிக்கலைன்னா?' என்கிறாள் மீண்டும் பரிதாபமாக. 

அடி பெண்ணே... நிரந்தரப் பாவமடி நீ!  

- ஜெ. ஜனனி, யாழ் ஸ்ரீதேவி

அடுத்த கட்டுரைக்கு