Published:Updated:

முதல் காதல் நினைவுகளை பெண் மனம் என்ன செய்யும்? - 'பவர் பாண்டி'க்கு ஒரு ஷேரிங்

முதல் காதல் நினைவுகளை பெண் மனம் என்ன செய்யும்? - 'பவர் பாண்டி'க்கு ஒரு ஷேரிங்
முதல் காதல் நினைவுகளை பெண் மனம் என்ன செய்யும்? - 'பவர் பாண்டி'க்கு ஒரு ஷேரிங்

மிழகத்தில் இப்போது 'பவர் பாண்டி' ஃபீவர். முதுமைக் கால தனிமையில் இருந்து வெளிவர, தன் முதல் காதலியைத் தேடிப்போகும் ராஜ்கிரண், மடோனா செபாஸ்டியனுடன் முதல் காதலை அனுபவித்து வாழ்ந்திருக்கும் தனுஷ், தன் முதல் காதலன் ராஜ்கிரணைச் சந்தித்து மென் உணர்வுகளை மீட்டிப் பார்ப்பதோடு எதார்த்தத்தை அவருக்கு காயம்படாமல் உணர்த்தும் ரேவதி என... 'பவர் பாண்டி' பாத்திரங்கள் படம் பார்ப்பவர்களின் மனசுக்குள்ளும் புதைந்து கிடக்கும் முதல் காதல் நினைவலைகளைத் தட்டி எழுப்புகிறார்கள். 

பொதுவாக, ஓர் ஆண், தன் காதல் கதைகளை மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என்று பேசிக்கதைக்க வாய்ப்பளிக்கும் இந்தச் சமூகம், பெண்ணுக்கு அப்படியான ஒரு சூழலை குற்றமாகவே சுட்டும். அதையும் தாண்டி, முகநூலில் சில நாட்களாக இப்போது பல பெண்கள் தங்களின் பால்ய காதலை, காதலனைப் பற்றிய நினைவுகளைப் பகிரும் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. பெண்களின் மனசுக்குள் புதைக்கப்பட்ட முதல் காதல் நினைவுகளை மூச்சின் சுவர்களில் முட்டி எழுப்பிவிட்டிருக்கிறது 'பவர் பாண்டி' எஃபக்ட்.  

ஆண், பெண் காதல் தருணங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் மிக இறுக்கமானது. கடிதத் தொடர்புகூட கடினமான காலமது. 'உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு' என்பதை ஊர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான கண்களுக்கு இடையில், கண்களால் மட்டுமே பகிர்ந்தாக வேண்டிய கட்டாயம். அவன் கண்கள் தன் மீது பொழியும் காதலின் வெப்பம் உணர்ந்த காதலி மகிழ்வு, பயம், பேரின்பம், சம்மதம் எல்லாவற்றையும் வெட்கம் தோய்ந்த பதில் பார்வையில்தான் வெளிப்படுத்த முடியும். ஆற்றங்கரைக்கு தண்ணீர் எடுக்கப் போகும்போது சில வார்த்தைகள்; கோயில் தீபாராதணைக்கு இடையில் ஒரு சிரிப்பு; மாலை வாசல் தெளித்து கோலமிடுகையில் ஒரு பார்வை என்று இரண்டு மனங்களிலும் காதல் துளிர் விட்டு வளரும். 

மனசும் மனசும் அன்பு நீர் ஊற்றி வளர்த்த அந்த முதல் காதல் வெளியில் சொல்ல முடியாமல், பெற்றோரை எதிர்த்துப் பேச முடியாமல் தவிக்கவைத்துக் கொல்லும். ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த ஆணும், பெண்ணும் தங்களது காதலை மனதுக்குள் புதைத்துக் கொள்வார்கள். வேறு வேறு இடங்களில் வாழ நேர்ந்தாலும் அந்தக் காதல் அவ்வப்பொழுது எழுந்து வந்து மனதைப் பிழியும். சந்தித்த இடங்கள் கண்ணீர் தளும்ப வைக்கும். ஆண், தன் முதல் காதலியின் பெயரை தன் மகளுக்கோ, பேத்திக்கோ வைத்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் தனது காதலின் நினைவுகளைக் கடத்துகிறான். அந்தப் பெண், அவனது நினைவாய் தான் பாதுகாக்கும் ஏதோ ஒரு பொருளில் அந்த அன்பை தன் கடைசி மூச்சு வரை எடுத்துச் செல்கிறாள்.  

நம் பாட்டிகள், அம்மாக்களின் முதல் காதலெல்லாம் இப்படித்தான் அவர்கள் மனதுக்குள் புதைந்து கிடக்கிறது. தன் கடைசி மூச்சு நிற்கும் வரை அவர்கள் தங்கள் முதல் காதலின் அன்பை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அந்த அன்பின் இன்பத்தையும் துன்பத்தையும் வார்த்தைகளாக அல்லாமல் மௌனங்களாகவே சுமக்கிறார்கள், மனம் மகிழ்கிறார்கள், கண்கள் கசிகிறார்கள். 

காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் சிலருக்கு, இணைந்து வாழத் துவங்கிய பின் அவர்களது சுய முகங்கள் வெளியில் வந்து மொத்தக் காதலும் தொலைந்து போயிருக்கும். காதல் காலத்தில் பகிர்ந்து கொண்ட பரிசுகள் அர்த்தம் இழந்து அலமாரியை நிறைத்திருக்கும். இருவர் மனதுக்குள்ளும் இருந்த காதலை தொலைத்து விட்டு ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் கொன்று குவித்திருப்பார்கள். காதல் வெளியேறிய மனதில் வாழ்வதற்கான நம்பிக்கைகள் பொய்த்துப்போயிருக்கும். அதன் பின் சேர்ந்து வாழ்வது, பிரிந்து போவது இரண்டும் ஒன்று தான் என்ற எண்ணம் துளிர்விட்டிருக்கும். சிந்தித்துப் பார்த்தால்... காதலில் வெற்றி பெறுவதற்காக காதலையே புதைத்துவிடுவதை விட, காதல் கைவிட்டுப் போனாலும் அந்தப் ப்ரியத்தை மனதுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு பேரின்பம்?! 

இன்னொரு பக்கம், ஒருவனின் காதலியாக இருந்து ஒருவனின் மனைவியாகும் வலி, பெண் சமூகத்தின் பொது வலி இல்லையா? பிரிவின் ரணத்தோடு அவள் திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைவாள்... எவ்வளவு சமாதானம் செய்து கொண்டபோதும் அடம்பிடித்து உள்ளுக்குள் அழுதபடியே. கழுத்தில் மங்கள நாண் அணிகையில் கசியுமே ஒரு கண்ணீர்த்துளி... அது மரண வலி. முதலிரவில் அவளை முழு உரிமையுடன் கணவன் கைப்பற்றும்போது, காதலனின் நினைவு வராத பெண் மனித அதிசயமாகத்தான் இருப்பாள். 

தாலி கட்டிய கணவன் அன்பில் சிறுமை ஆகும் போதெல்லாம், பெண் மனம் தன் காதலனைத் தேடும். 'நீ கொண்டாடிய ஒருத்தி இங்கு பந்தாடப்படுகிறாள் பார்' என்று தேம்பும். பெண்மைக்கே எழுதப்பட்ட, மனதில் அனைத்தையும் போட்டுப் புதைத்தபடி அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி நகரும் குணத்துக்குத் தானும் பழகிப்போவாள். இன்னொரு ஆணின் உடமையாகி, அவனுக்காக, அவன் குடும்பத்துக்காகத் தன்னியல்பில் மாறிக்கொள்வாள். 

புகுந்த வீடு மன உளைச்சல் தந்தால், தன்னவனிடம் சொல்லிக் கதறமாட்டோமா என்று மனம் ஏங்கும். உதாசீனமும், அவமானமும் மனதை உடைத்துச் சிதைக்கும் போதெல்லாம் அவன் மடியில் கிடந்து கதற மனம் துடிக்கும். காதலனுடன் சென்ற இடங்களுக்குப் பின்னாளில் செல்ல நேரும்போது, அந்நினைவுகள் மனதில் கல்லெறிந்து கலங்க வைக்கும். காலப்போக்கில் மகன், மகள் என வாழ்க்கை மனதை நிறைத்தாலும் அவள் காதலின் நினைவுகள் அவ்வப்போது அவள் கூந்தல் வருடியபடி, காது திருகியபடி அவளுனேயேதான் இருக்கும். தன் குழந்தையின் அணைப்பிலும், முத்தத்திலும் அவன் வாசம் வந்து மோதி கண்கள் நிறைக்கும். காதலின் நினைவாக அவள் ரகசியமாக அடைகாக்கும் பொருளோ, புகைப்படமோ, பரிசோ... அந்த அஃறிணைதான் அவள் ஆத்மாவுக்கு ஆறுதலாக இருக்கும். இப்படி எத்தனை எத்தனை அன்பின் கதறல்கள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்?!

மனைவியாகி, மருமகளான பின்னும், தலையில் வெள்ளை முடி பூத்து பேரன், பேத்தி எடுத்த பின்னரும், தன் காதலித்த தருணங்களில், தன் காதலனைப் பிரிந்த நொடியில் வாழும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள் பலரும். மனசுக்குள் அடைகாக்கும் முதலின் ஆயுள், அவள் ஆயுள் வரை. 

'பவர் பாண்டி' ராஜ்கிரன் தன் முதல் காதலியைத் தேடி பயணிக்கிறார். ஆனால், ஒரு பெண்ணுக்கு சினிமா கதாப்பாத்திரமாகக் கூட இது சாத்தியமில்லை. வாழ்வின் அச்சாணி உறவுகளை இழந்த பெண்கள்கூட, அதற்கு பின்னர் தன் முதல் காதலனை தேடிப் போக வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர்கள் தங்கள் பழைய நினைவுகளோடு வாழ்ந்து விடுவதிலேயே தங்களைச் சமாதானம் செய்து கொள்கிறாள். படத்தில் தன் முதல் காதலின் நினைவுகளோடு வாழ்ந்து வரும் ரேவதி, காதலன் ராஜ்கிரணைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும், அவரைத் தேடிப் புறப்படவில்லை. அவரை முகநூலில்  சந்தித்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டாலும், அவரோடு தன் தனிமைக் காலங்களை கடக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. அந்த சமூக, பண்பாட்டு, கலாச்சார அழுத்தம்தான் ஆண், பெண் நேசத்தின் இயல்பை வெவ்வேறாக்குகிறது. 

முதல் காதலில் தொடங்கி, விவாகரத்துக்குப் பின் கிடைக்கப்பெறும் ஓர் ஆணின் அன்பு, கணவனை இழந்த பின் தேடி வரும் ஒரு ப்ரியம் என இந்த நேசங்களை, அன்பின் உறவுகளை எல்லாம் ஏன் பெண் உடனே ஏற்றுக்கொள்வதில்லை? அப்படி அவள்  ஏற்றுக்கொண்டாலும் அதுவரை அவள் வாழ்ந்த வாழ்வை இந்தச் சமூகம் ஏன் கேள்விக்குள்ளாக்குகிறது? ''இன்னும் சில நாட்களில் நானும், உன் பேத்தியும் என் கணவனோடு சென்று விடுவோம். அப்போது நீ தனியாகத்தான் இருக்கப் போகிறாய். இனி வரும் உன் தனிமைக் காலத்தை... உன் முதல் காதலரோடு கடக்கலாம்'' என்று படத்தில் ரேவதிக்கு அவர் மகளே பச்சைக் கொடி காட்டிய பின்னும் அந்தத் தாய்மனம் ஏன் தவியாய் தவிக்கிறது? காரணம்... தங்கள் தேவை என்பதைவிட, தங்கள் உறவுகளின் தேவையின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கிறார்கள் பெண்கள். இது ரேவதிக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றி வாழும் எல்லாப் பெண்களுக்கும் திணிக்கப்பட்டுள்ள நிர்பந்தம். 

'வயதான பெற்றோருக்கு என்று வாழ்க்கை இல்லையா? பேரன், பேத்திகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டுக்கு காவல் இருப்பதுதான் அவள்கள் வாழ்வின் தேவையா?' என்று 'பவர் பாண்டி' தன் மனதில் கொந்தளிக்கும் உணர்வுகளை கேட்டு விடுகிறார். ஆனால், நிறைவேறாத காதலின் வலியை எந்தக் காலத்திலும் பகிர்ந்துகொள்ள முடியாத பெண்கள், கணவன், குடும்பம், பிள்ளைகளுக்காக வாழும் தங்களின் தியாக வாழ்வில் தங்களுக்கே தங்களுக்காகச் சேமித்துக்கொள்வது, அக்காதலின் நினைவுகளையே! 


- யாழ் ஸ்ரீதேவி