Published:Updated:

''ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடிக்கும் இடையே ரகசிய பேச்சு என்பது நாடகம்'' - கொதிக்கிறார் நிர்மலா பெரியசாமி

''ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடிக்கும் இடையே ரகசிய பேச்சு என்பது நாடகம்'' - கொதிக்கிறார் நிர்மலா பெரியசாமி
''ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடிக்கும் இடையே ரகசிய பேச்சு என்பது நாடகம்'' - கொதிக்கிறார் நிர்மலா பெரியசாமி

ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர் அ.தி.மு.க, ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிளவுபட்டது. இதற்கிடையில் சசிகலா அணிக்குத் தாவுவதும், ஓ.பி.எஸ் அணிக்கு மாறுவதுமாக அரசியல் காட்சிகள் சாதாரண மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்தக் கட்சி அதிக பணம் தரும் என்கிற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி, இறுதியில் தேர்தலையே நிறுத்த காரணமாகிவிட்டார்கள் ஒட்டுமொத்த அதிமுக அணியினர். இச்சூழலில் பிரிந்து போன பன்னீர்செல்வத்தோடு சேருவதற்கான முயற்சிகளை எடப்பாடி அணியினர் மேற்கொண்டதன் விளைவு... கட்சியில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் தினகரன். நடப்பதெல்லாம் நாடகமா, ஒரிஜினலா என்று அடிக்கிற வெயிலில் மண்டை காய வைத்துக்கொண்டிருக்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்மலா பெரியசாமியிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே மனுஷி கொதிப்பாகிவிட்டார்.

'' ஓ.பி.எஸ் அணியுடன், எடப்பாடி  அணி பேச்சுவார்த்தை என்பது தினகரன் நடத்தும் நாடகம். இரண்டு புறமும் உட்கார்ந்து பேசினால்தானே பேச்சுவார்த்தை என்பதெல்லாம் நடக்கும். ஆனால் இதுவரை எங்கள் (ஓ.பி.எஸ். அணி) அணியுடன் யாரும் பேசவில்லை என்பதுதான் நிஜம். இரண்டு அணியும் இணைந்தால் வரவேற்கிறோம்.

ஓ.பி.எஸ் இரண்டு நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒன்று ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த  வேண்டும். மற்றொன்று சசிகலாவின் ஒட்டு மொத்தக் குடும்பமும் சட்டபூர்வமாக கட்சியை விட்டு விலக வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பார்த்ததும், தினகரன் விலகுவதாக அறிக்கை விடுகிறார். பெயருக்கு விலகிவிட்டு இரண்டு அணிகளும் சேர்ந்ததும், இரட்டை இலைச் சின்னம் கைப்பற்றப்பட்ட பின்னர், ஆட்சியை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதே அக்குடும்பத்தினருடைய திட்டம். அந்தத் திட்டத்தை பக்காவாகச் செயல்படுத்திவருகிறார் தினகரன்.

ஓ.பி.எஸ்க்கு மக்கள் மற்றும் தொண்டர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பயன்படுத்திக்கொள்ள தினகரன் தீட்டும் புதிய திட்டம்தான் இப்போது நடக்கும் அரசியல் காமெடி. இச்சூழலால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் குழம்பிப்போகிறார்கள். அவர்களுக்கான திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்தவர்மீது நமக்கு சந்தேகத்தின் நிழல் விழுந்திருக்கக்கூடாது. ஆனால், அதற்குக் காரணமாகத் தன்னை ஆக்கிக்கொண்டவர் சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும். தற்போது  ஜெயலலிதா மரணத்தின் மீதான சந்தேகம் ஆலமரம் போல் வளர்ந்துள்ளது. அம்மா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் யாருமே  உள்ளே நுழைந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வலிமையான சக்தியாக சசிகலா குடும்பம் செயல்பட்டது. கவர்னர்கூட பார்க்க முடியவில்லை. அந்த வலிமையான சக்தியே, அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்தியது. அச்சமயத்தில் எல்லோரும் வெளியில் புலம்பிக் கொண்டு சசிகலா அணியினர் சொல்கிறபடி, உள்ளே சென்று கையெழுத்திட்டதைக்  கண்கூடாக நான் பார்த்தேன். அந்த சக்தியின் கட்டுப்பாட்டில்தான் அண்ணன் ஓபிஎஸ்ஸும் இருந்தார் என்பது எனக்குத் தெரியும். 

அம்மா இட்லி சாப்பிட்டாங்க. உப்புமா சாப்பிட்டாங்க எனச்  சொல்லிச்சொல்லி மற்றவர்களை திசை திருப்பினார்கள். பதவிக்காக அந்தர்பல்டி அடிக்கும் இவர்கள் அம்மாவையும் பலத்தக் கட்டுப்பாட்டில்தான்  வைத்திருந்தார்கள் என்பதை உணரும்போது வேதனையாக உள்ளது. அம்மாவின் உண்மையான விசுவாசிகளாக அமைச்சர்கள், எம்.பி.க்கள் இருந்திருந்தால்.. அம்மாவின் உண்மையான விசுவாசி ஓ.பி.எஸ் ஜெயித்திருப்பார். 

மத்திய அரசு ஓ.பி.எஸ்ஸை இயக்குவதாக தினகரன் கூறுவதெல்லாம்  வடிகட்டிய முட்டாள்த்தனம். தினகரன் தப்பான படுகுழியை தனக்குத்தானே படுவேகமாக தோண்டிக் கொண்டே போகிறார்.  ஒட்டுமொத்தக் கட்சியும் 'வெளியே போ' எனச் சொல்லிய பின்னும், தான் தியாகச் செம்மலைப் காட்டிக்கொள்கிறார் தினகரன். தன்னுடன் இருக்கும் ஜால்ராக்களை பெரிய சக்தியாக நினைத்துக்கொள்கிறார்.   வாய்வார்த்தை சொல்லி அரசியல் செய்தவர்கள் போதும். இனி புது அரசியல் ஓ.பி.எஸ் தலைமையில் வெகுசீக்கிரம் அமையும். அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொடுப்போம். நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய , மக்கள் விரும்புகின்ற அரசியலாக இருக்கும் என நம்புகிறேன்’ என்று சொல்லி முடித்தார் நிர்மலா பெரியசாமி.