Published:Updated:

Lebanon:`வெடி விபத்தின்போது பிறந்த குழந்தை!' - ரத்தக் கறையுடன் அணைத்து நிற்கும் தந்தை #Viral

குழந்தையின் தந்தை
குழந்தையின் தந்தை

``மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். வெடிவிபத்து ஏற்பட்டபோது நாங்கள் அறையில் இருந்தோம். எங்களுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை."

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த மிகவும் பயங்கரமான வெடிவிபத்து பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வெளியாகும் புகைப்படங்கள் பலவும் கவலையை அளிக்கும் விதமாக உள்ளன. இந்த நிலையில் தற்போது பெய்ரூட் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து வெளியாகி இருக்கும் புகைப்படம் பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.

குழந்தையின் தாய்
குழந்தையின் தாய்

பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் அந்நகரத்தில் இருந்த பெரும்பான்மையான கட்டடங்கள் சேதமடைந்தன. அந்தக் கட்டடங்களில் அல் ரூம் மருத்துவமனைக் கட்டடமும் ஒன்று. வெடிப்பு நடந்தபோது மருத்துவமனையில் இருந்த கிறிஸ்டல் சவாயா என்பவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. புகைப்படத்தில், கண்ணாடிகள் உடைந்து சிதறிக்கிடக்கும் அறையின் நடுவே உருக்குலைந்து கிடக்கும் படுக்கையின் மீது கிறிஸ்டல் படுத்துள்ளார். படுக்கையிலும் கண்ணாடித் துண்டுகள் நிறைந்துள்ளன. மற்றொரு புகைப்படத்தில், அவரின் கணவர் ரத்தக் கறைப் படிந்த ஆடையை அணிந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் தன் குழந்தையை அணைத்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.

Lebanon:`போராட்டக்களமான வீதிகள்; வன்முறை!’- என்ன நடக்கிறது லெபனானில்?

குழந்தையின் தந்தை சவாயா இதுதொடர்பாகப் பேசும்போது, ``மிகவும் கடினமான சூழ்நிலையாக இருந்தது. வெடி விபத்து ஏற்பட்டபோது நாங்கள் அறையில் இருந்தோம். எங்களுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. எல்லாப் பொருள்களும் தங்களது இடத்தில் இருந்து விழுந்தன. எதுவும் அதனதன் இடத்தில் இல்லை. நான் என் குழந்தையைப் பாதுகாக்க வேகமாகக் கட்டியணைத்தேன். இரண்டாவது முறை வெடி விபத்து நிகழ்வதற்கு முன்பாக மறைந்து இருக்க ஒரு மூலையைக் கண்டுபிடிக்க ஓடினேன்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். குழந்தையுடன் இருக்கும் பெற்றோரின் புகைப்படங்கள் பலரது மனதையும் சற்று கவலைக்கு ஆளாக்கியுள்ளன. குழந்தைக்கு பெற்றோர்கள் நபில் என்று பெயர் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சவாயா பேசுகையில், ``நபில் தன் தாயின் படுக்கைக்கு அருகில் படுத்திருந்தான். விபத்தில் என் தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. கிறிஸ்டலுக்கும் தலை, நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. நபில் காயமடையாமல் கடவுள் காப்பாற்றிவிட்டார்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தக் கடுமையான நேரத்தில் அவர்களைப் பாதுகாத்த மருத்துவர்களுக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் காயங்களில் இருந்து மீண்டு வரவும் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருந்த நபிலுக்கும் வாழ்த்துக்களைக் கூறி நெட்டிசன்கள், உலகத்துக்கு வரவேற்றுள்ளனர்.

BeirutBlast: `வீடுகளை இழந்த 3,00,000 மக்கள்?!’ - கடும் பாதிப்பில் லெபனான்
அடுத்த கட்டுரைக்கு