Published:Updated:

‘தடுமாறிய ஓட்டுநர்... காரில் இருந்த ஹூக்கா!’- ஹரியானாவை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஹரியானா சாலையில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

ஹரியானா சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த வாகனங்களில் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சனிக்கிழமையன்று ஹோண்டா சிட்டி கார் ஒன்று ஹரியானாவின் யமுனா நகர் பகுதியில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில் அதிவேகமாக திரும்பிய கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தவர்களின் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

யமுனா நகர் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதில் “சாலையில் அதிவேகமாக பயணிக்கும் கார் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தவர்களின் மீது மோதுகிறது. அதேவேகத்தில் காரை திருப்ப முயற்சிக்கின்றனர். சாலையின் இடதுபக்கத்தில் இருந்து நடைப்பாதையின் மீது கார் ஏறியது. அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதி வாகனம் நின்றது.” இந்தக்காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

`அந்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்!’- ஜே.என்.யூ மாணவி ஆயிஷி கோஷ்

வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அதில் பயணித்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “விபத்துக்குள்ளான காரில் இருந்து ஹூக்கா கைப்பற்றியுள்ளோம். காரை ஓட்டிவந்த நபர் ஹூக்காவை புகைத்துவிட்டு வாகனத்தை இயக்கியிருக்கலாம். இதுவே விபத்துக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். விபத்துக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்வோம்” என்றனர்.