Published:Updated:

"வீட்டைக் கட்டிக்கொடுத்த அன்புள்ளங்கள்!" - அரக்கோணம் தம்பதியின் அசத்தல் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

புதுமனை புகுவிழா அழைப்பிதழ் - காமராஜன் குடும்பம்

‘‘வீட்டைக் கட்டிக்கொடுத்த அன்புள்ளங்கள்’’ என்று புதுமனை புகுவிழா அழைப்பிதழில் மேஸ்திரி, கொத்தனார், கம்பி கட்டுபவர் உள்ளிட்டோரின் பெயர்களை அச்சிட்டு அசத்தியிருக்கிறார்கள், அரக்கோணத்தைச் சேர்ந்த தம்பதியர்.

"வீட்டைக் கட்டிக்கொடுத்த அன்புள்ளங்கள்!" - அரக்கோணம் தம்பதியின் அசத்தல் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

‘‘வீட்டைக் கட்டிக்கொடுத்த அன்புள்ளங்கள்’’ என்று புதுமனை புகுவிழா அழைப்பிதழில் மேஸ்திரி, கொத்தனார், கம்பி கட்டுபவர் உள்ளிட்டோரின் பெயர்களை அச்சிட்டு அசத்தியிருக்கிறார்கள், அரக்கோணத்தைச் சேர்ந்த தம்பதியர்.

Published:Updated:
புதுமனை புகுவிழா அழைப்பிதழ் - காமராஜன் குடும்பம்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த காமராஜன், திருத்தணி கிளைச்சிறையில் தலைமைக் காவலராக (ஏட்டு) பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி இந்துமதி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார். இந்த இணையருக்கு 2-ம் வகுப்புப் பயிலும் தியானேஷ்மாறன், எல்.கே.ஜி படிக்கும் ரிஷிமாறன் என 2 சுட்டிப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அன்பான அந்தத் தம்பதியர் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த பணத்தில், சொந்தமாக வீடு ஒன்றைக் கட்ட முடிவு செய்தனர். அதன்படி, அரக்கோணம் சுவால்பேட்டை மேட்டுத்தெருவில், மனை வாங்கி கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். ‘கனவு’ வீட்டை நிஜத்தில் கட்டி முடித்த நிலையில், அடுத்த மாதம் 4-ம் தேதி ‘புதுமனை புகுவிழா’வைக் கொண்டாடத் தயாராகிவருகிறார்கள்.

இந்த நிலையில், புதுமனை புகுவிழாவிற்காக காமராஜன் - இந்துமதி தம்பதியர் அச்சிட்டிருக்கும் வித்தியாசமான அழைப்பிதழ்தான் சமூக வலைதளங்களில் ‘வாழ்த்து மழை’ பொழியும் அளவிற்கு தற்போது பேசுப்பொருளாகியிருக்கிறது.
காமராஜன் குடும்பம்
காமராஜன் குடும்பம்

வழக்கமாக எல்லோரும் புதுமனை புகுவிழா அழைப்பிதழில், தாத்தா, பாட்டி, மாமன், மாமியார், மைத்துனர், சித்தப்பா, பெரியப்பா, பங்காளி என ஒட்டுமொத்த உறவினர்களின் பெயர்களையும் சேர்ப்பார்கள். ஆனால், இந்தத் தம்பதியரோ, மேஸ்திரி தொடங்கி கேட்டுக்கு வெல்டிங் வைத்த தொழிலாளர்கள் உட்பட வீட்டிற்காக வியர்வை சிந்தி உதவிய அனைவரின் பெயர்களையும் அழைப்பிதழில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், உறவினர்கள் ஒருவரின் பெயர்க்கூட இடம்பெறவில்லை.

‘‘பால் காய்ச்சப் போறோம்’’ என்று தொடங்கியிருக்கும் அவர்களின் அழைப்பிதழில், ‘‘கல்யாணத்தைப் பண்ணிப் பாருங்க... வீட்டைக் கட்டிப் பாருங்கன்னு சொல்லுவாங்க. நாங்க கல்யாணமும் பண்ணிட்டோம். இப்போ, வீட்டையும் கட்டிவிட்டோம். 04-12-2022 அன்று காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் புகுவிழா நடக்கப் போகிறது. எல்லோரும் வந்துவிடுங்கள். விடியற்காலை வரமுடியாது என்பதற்காகத்தான் விடிந்ததற்குப் பிறகு வைத்திருக்கிறோம். வந்து எங்களுடன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசையுடன் அழைக்கின்றோம். உங்களை வரவேற்க வாசலில் நானும், என் மனைவியும் எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம். வருவீங்கல்ல..?’’ என்று சுவாரஸ்யமாக வரவேற்று முடித்திருக்கிறார்கள்.

மறுபக்கத்தில், ‘‘என் வீட்டிற்காக வியர்வை சிந்தி உதவிய அன்புள்ளங்கள்’’ என்று குறிப்பிட்டு, ‘‘தலைமை மேஸ்திரி ஜெயராமன், மேஸ்திரிகள் முனுசாமி, பாபு, தட்சிணாமூர்த்தி, வேலு, தயாளன், கோபி, மாரி, சேட்டு, ராஜீவ்காந்தி, கொத்தனார்கள் ராமு, நீலா, சாந்தி, காந்தா, அலமேலு, பில்டர், வஜ்ஜிரவேல், கம்பி கட்டுனர் சரவணன், அப்பு, வர்ணக் கலைஞர் முரளி குழுவினர், வெல்டிங் ஒர்க்ஸ் அருள் என்று நீள்கிறது பட்டியல். அதில், மற்றொரு சுவாரஸ்யமே ‘நிதியுதவி’ என்று குறிப்பிட்டு, ‘பாரத் ஸ்டேட் வங்கி’ என்றும் கூடவே நகைகளை அடகு வைத்திருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

புதுமனை புகுவிழா அழைப்பிதழ்
புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

அழைப்பிதழை இப்படி வித்தியாசமாக அச்சிட்டதற்கான காரணம் குறித்து சிறைத்துறை ஏட்டு காமராஜனிடமே கேட்டோம். ‘‘வழக்கமாக எல்லோரும் சொந்தக்காரர்கள் பெயரைத்தான் போடுவார்கள். அதில் ஏதாவது ஒரு பெயர் விடுபட்டுவிட்டாலும் அவ்வளவுதான். ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்பட்டுவிடும். நாங்கள் அப்படி எந்தவொரு சிக்கலிலும் சிக்கக்கூடாது என்பதால்தான், இப்படி அச்சிட்டோம். மேஸ்திரி, கொத்தனார்கள் பெயர்களைப் போட்டதற்கான காரணம், எங்கள் கனவு இல்லத்தை அவர்கள்தான் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு செங்கல்லிலும் அவர்களின் வியர்வை படிந்திருக்கிறது. அவர்களின் பெயர்களைப் போடாமல் வேறு யார் பெயரைப் போட்டாலும் சரியாக இருக்காது. அழைப்பிதழில் பெயர் போட்டதால், தொழிலாளர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களின் உழைப்பு மட்டுமன்றி, அவர்களின் அன்பும் வாழ்த்தும் வேண்டும்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்!

உள்ளம் மகிழட்டும்!