Published:Updated:

ரூ.2,000 நோட்டுகள் செல்லாதா; புதிய ரூ.1,000 நோட்டு வெளியாகிறதா..? உண்மை என்ன?!

புதிய 1000 ரூபாய் நோட்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலியான 1000 ரூபாய் நோட்டின் புகைப்படம்
போலியான 1000 ரூபாய் நோட்டின் புகைப்படம்

கடந்த 2016-ம் ஆண்டில், நாட்டில் புழக்கத்திலிருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு 2000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன. வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது.

500, 2000 ரூபாய் நோட்டுகள்
500, 2000 ரூபாய் நோட்டுகள்

அதற்குப் பின்னர், புதிய 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால், ஏற்கெனவே இருந்த 1000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக, புதிய நோட்டு அறிமுகப்படுத்தப்படுமா என்பதைப் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. ரிசர்வ் வங்கியும் இது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடாமலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நடப்பு நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதனால், 'ரூ.2000 நோட்டுகள் கூடிய விரைவில் செல்லாமல் போகும். எனவே, உடனடியாக வங்கிக்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்’ என்பது போன்ற தகவல்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்
சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்

அது மட்டுமல்லாமல் கூடிய விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்றும் அதன் புகைப்படங்கள் எனச் சில 1000 ரூபாய் நோட்டின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்ற போதும்கூட இந்தப் போலியான தகவலைப் பலர் பகிர்ந்து வருகிறார்கள். அந்த நோட்டை உற்றுப் பார்த்தால் அது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெரிய வரும். நோட்டின் வலது பக்கம் இது கற்பனையாக உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ‘artistic imagination’ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை அந்தப் புகைப்படத்தில் பார்க்க முடியும். அது மட்டுமன்றி ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையொப்பம் இருக்கும் இடத்தில் மகாத்மா காந்தியின் கையொப்பம் இருப்பதையும் பார்க்கலாம்.

போலியான ரூ.1000 நோட்டு
போலியான ரூ.1000 நோட்டு

தற்போது வைரலாகும் இந்தப் போலி 1000 ரூபாய் நோட்டின் புகைப்படம் பல மாதங்களுக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களில் உலவியதுதான். இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற தகவலால் மீண்டும் பலரால் பரப்பப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுகள் செல்லாமல் போகப்போகின்றன என்பதும், கூடிய விரைவில் 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்ற இரண்டு தகவல்களுமே பொய்யானவைதான். புதிய 1000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பதும் வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதும்தான் தற்போதைய நிலையாக இருக்கிறது.