Published:Updated:

திடீர் ரெய்டு; 6-வது மாடியிலிருந்து கொட்டப்பட்ட பணம்! -கொல்கத்தாவை அதிரவைத்த தனியார் நிறுவனம்

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் கட்டடத்திலிருந்து நேற்று திடீரென பணமழை பொழிந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பண மழை
பண மழை

கொல்கத்தாவில் பதிவான வீடியோ ஒன்று நேற்று முதல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்த வீடியோவில், ‘ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் ஜன்னல் வழியாக வெளியில் வீசப்படுகின்றன. அதில் சில கட்டுகள் பிரிந்து 2000, 500, 100 ரூபாய் நோட்டுகள் என வானத்தில் பறக்கின்றன. அதைப் பார்ப்பதற்கு வானத்திலிருந்து பணமழை பொழிவதைப்போல உள்ளது.

பணம்
பணம்

மாடியிலிருந்து கொட்டும் பணத்தைக் கீழே உள்ள சிலர் அவசர அவசரமாகப் பொறுக்கிச் சேமித்து வைக்கின்றனர். கட்டடத்துக்குச் சிறிதுதூரத்தில் உள்ள சிலர் பணம் கொட்டுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்’ -சுமார் 55 விநாடிகள் ஓடும் இந்த வீடியோதான் நேற்று முதல் மேற்கு வங்கத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

அட்லான்டாவில் பொழிந்த பண மழை!- அள்ளிய மக்கள்; கெஞ்சிய அதிகாரிகள்

`மாடியிலிருந்து எப்படிப் பணம் கொட்டியது, யார் அதைத் தூக்கி எறிந்தனர்?' என பிடிஐ ஊடகத்தினர் விசாரித்தபோது, அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் (Bentinck) தெருவில் தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகள் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

அந்த அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் வரிஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வருவாய் புலனாய்வு இயக்குநகரத்துக்குத் (DRI) தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து டி.ஆர்.ஐ அதிகாரிகள் நேற்று அந்தத் தனியார் அலுவலகக் கட்டடத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில்தான் கட்டடத்தின் ஆறாவது மாடியிலிருந்து பணக்கட்டுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. பணம் வீசப்பட்டத்துக்கும் டி.ஆர்.ஐ ரெய்டுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் `திடீர்' பண மழை பொழிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.