Published:Updated:

சென்னை அதிர்ச்சி: `யாருக்கு தில் அதிகம்?' - 23-வது மாடிச் சுவரில் சாகசம் செய்த சிறுமி!

சிறுமி சாகசம் செய்த அடுக்குமாடி குடியிருப்பு
சிறுமி சாகசம் செய்த அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை அருகே, நாவலூரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்ணன், தங்கைக்கு இடையே ஏற்பட்ட பந்தயத்தால் 23-வது மாடியின் வெளிப்புற விளம்பில் 15 வயது சிறுமி நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

எவ்வளவு உயரமான கட்டடமாக இருந்தாலும், அதில் அசால்ட்டாக ஏறி ஸ்பைடர்மேன் உதவி செய்வது போன்ற காட்சியை சினிமாவில் பார்த்திருப்போம். அதைப்போல சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலை, நாவலூர் பகுதியில் 25 மாடிகளைக்கொண்ட பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் 15 வயது சிறுமி 23-வது மாடியின் வெளிப்புற விளிம்பில் நடந்து சென்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடி குடியிருப்பு

பட்டப்பகலில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 23-வது மாடியிலுள்ள வெளிப்புற விளிம்பில், ஸ்பைடர் மேன்போல தலைமுடியை விரித்தபடி ஓர் உருவம் நடந்து செல்வதை சிலர் பார்த்திருக்கிறார்கள். நீளமான தலைமுடி இருந்ததால் `அது ஒரு பெண்’ என்று தோன்றியிருக்கிறது. அந்தப் பெண் வெளிப்புற விளிம்பில், சுவரைப் பிடித்தபடி நடந்து செல்வதை அருகிலுள்ள அடுக்குமாடியில் குடியிருக்கும் ஒருவர், யதேச்சையாகப் பார்த்திருக்கிறார்.

`இப்படி நடந்து செல்வது யார்?’ என்று யோசித்த ஒருவர், அந்தக் காட்சியைத் தன் செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகிவருகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது. அந்தக் குடியிருப்பில் குடியிருக்கும் ஓர் அண்ணன், தங்கைக்கு இடையே பந்தயம்... அதன் காரணமாக 15 வயது சிறுமி ஸ்பைடர் மேன்போல 23-வது மாடியின் பக்கவாட்டுச் சுவரில், ஸ்பைடர் கேர்ளாக நடந்து சென்றது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவரின் பெற்றோரிடமும், சம்பந்தப்பட்ட சிறுமியிடமும் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிறுமியின் பெற்றோர், வருத்தம் தெரிவித்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

சிறுமி நடந்துச் செல்லும் காட்சி
சிறுமி நடந்துச் செல்லும் காட்சி
சென்னை: கொள்ளை புகாரால் வெளிவந்த மனைவியின் சீக்ரெட்! - அதிர்ச்சியில் கணவர்

என்ன நடந்தது என்று கேளம்பாக்கம் போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர்,``சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் சிறுமியும் அவரின் அண்ணனும் ஊரடங்கால் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டிலிருந்த அவர்கள், இருவரில் `யாருக்கு தில் அதிகம்?’ என்று சோதிக்கப் பந்தயம் கட்டியிருக்கிறார்கள். `தில்’லை நிரூபிக்க அடுக்குமாடிக் குடியிருப்பின் 23-வது மாடியில், வெளிப்பக்கமாக உள்ள தடுப்பில் சுவரைப் பிடித்தபடி நடந்து செல்ல வேண்டும் என்று இருவரும் பேசி முடிவெடுத்தனர்.

இதையடுத்து, ஜன்னல் வழியாக வெளியில் வந்த சிறுமி, குறைந்த அடி அகலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலாப் வழியாக நடந்து சென்றார். 23-வது மாடி என்பதால், கீழேயிருந்து பார்த்தவர்களுக்கு சிறுமி நடந்து சென்றது ஏதோ ஓர் உருவம்போலத் தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்த ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்தபோதுதான் அது சிறுமி என்பது தெரிய வந்திருக்கிறது. இது போன்ற விபரீத சாகசங்களில் யாரும் ஈடுபடக் கூடாது.

சென்னை: `பைக் பஞ்சர்; துண்டு சீட்டில் செல்போன் நம்பர்'- ஏமாற்றியவரைக் காட்டிக் கொடுத்த குழந்தை
சிறுமி நடந்துச் செல்கிறார்
சிறுமி நடந்துச் செல்கிறார்

நல்லவேளை அந்தச் சிறுமிக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. 23-வது மாடியிலிருந்து விழுந்திருந்தால் அவர் நிச்சயம் உயிரிழந்திருப்பார். இது போன்ற விபரீதச் செயல்களை அனுமதிக்கக் கூடாது" என்றார்

`ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில் வீட்டிலிருக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது’ என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு