Published:Updated:

திருப்பத்தில் திறந்த கதவு; ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை! - கேரள அதிர்ச்சி #ShockingVideo

கேரளாவில் ஓடும் காரில் இருந்து குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

`காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் மீது கவனம் இருக்க வேண்டும்’ என ஐபிஎஸ் அதிகாரியான பங்கஜ், தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காரில் இருந்து குழந்தை ஒன்று தவறிவிழும் வீடியோ அது. இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், கேரள சாலையில் வேகமாகப் பயணிக்கும் வெள்ளை நிற கார் ஒரு திருப்பத்தில் திரும்புகிறது. காரின் பின்பக்க கதவு திறந்த நிலையில் குழந்தை ஒன்று சாலையில் தவறி விழுகிறது. காரின் பின்னால் வந்த சிறிய டெம்பா வாகன ஓட்டுநர், குழந்தையைக் கவனித்ததால் வாகனத்தை நிறுத்திவிட்டார். சாலையின் எதிர்புறம் வந்த பேருந்து ஓட்டுநரும் வண்டியை நிறுத்தியதால் குழந்தை பெரிய விபத்திலிருந்து தப்பியது. பரபரப்பான சாலையில் நடந்த இந்தச் சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

``காரில் பயணிக்கும்போது குழந்தையின் இருக்கைகள் மற்றும் காரின் லாக்குகள் மீது கவனம் இருக்க வேண்டும். எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். எல்லா குழந்தைகளும் இதைப்போல் அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள்” என பங்கஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

கேரள வனப்பகுதியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஜீப்பில் பயணம் செய்யும்போது குழந்தை ஒன்று தவறி விழுந்தது. குழந்தை விழுந்ததுகூட தெரியாமல் அந்த வாகனம் சென்றுவிட்டது. வனப்பகுதிக்கு அருகில் சுங்கச்சாவடி இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது.