Published:Updated:

`நல்ல உணவு கொடுக்க வழியில்லை, அதனால்தான்!' - கேரள போலீஸாரை நெகிழவைத்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி

காவலர்களுக்கு உதவும் கிரீஷ்
காவலர்களுக்கு உதவும் கிரீஷ் ( photo courtasy: ANI )

தென்னை மரம் ஏறுவதன் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை, கொரோனா அச்சத்தையும் மீறி வெயிலில் பணியாற்றும் காவலர்களுக்கு உதவி செய்வதற்கு செலவிடுகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா அச்சம் மட்டுமல்லாமல் கொளுத்தும் வெயிலில் பணியாற்றும் போலீஸாருக்கு மருத்துவத் துறையினருக்கு இணையாகப் பாராட்டு கிடைத்து வருகிறது. 

தென்னை மரம் ஏறும் தொழிலாளி கிரீஷ்
தென்னை மரம் ஏறும் தொழிலாளி கிரீஷ்

இந்த நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கலாவூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனிதாபிமானச் செயல், நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. தென்னை மரம் ஏறும் தொழிலாளியான கிரீஷ் என்பவர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள்முதலாகத் தினமும் போலீஸாருக்கு உதவி செய்து வருகிறார்.

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

காவல்துறையினரின் செயல்பாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கிரீஷ் தினமும் இளநீர், வாழைப்பழம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வருகிறார். தினமும் குறைந்தது 50 போலீஸாருக்காவது இத்தகைய உதவியைச் செய்கிறார். 

ஓசி சைக்கிள்.. இரவில் பயணம்! -கேரளா டு கொல்கத்தா பயணமான கட்டுமானத் தொழிலாளி

இதுகுறித்து கலாவூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் டெல்சன் ஜோசப் கூறுகையில், ``கலைந்த மற்றும் அழுக்கான உடையுடன் இரு சக்கர வாகனத்தில் தினமும் வரக்கூடிய ஒருவர், பணியில் இருக்கும் போலீஸார் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி வந்தார்.

அவரைப் பற்றி எங்களுடைய போலீஸாரிடம் விசாரித்தபோது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இந்த உதவிகளைச் செய்து வருவதாகக் கூறினார்கள். யாராவது வாங்க மறுத்தால்கூட அருகில் வைத்து விட்டுச் சென்றுவிடுவதாகச் சொன்னார்கள். அவரது மனிதாபிமானச் செயல் பாராட்டுக்குரியது” என்றார் நெகிழ்ச்சியாக.

உணவுப் பொருள்களுடன் செல்லும் கிரீஷ்
உணவுப் பொருள்களுடன் செல்லும் கிரீஷ்

பெண் காவலரான குஞ்சுமோள் கூறுகையில், ``கொரோனா பாதிப்பு காலத்தில் பணியாற்றும் எங்களை அனைவருமே பாராட்டுகிறார்கள். கிரீஷ் எங்களுக்கு தன்னால் முடிந்த உணவுப் பொருள்களைக் கொடுக்கிறார். கொளுத்தும் வெயில் மட்டுமல்லாமல் கடைகள் மூடிக் கிடக்கும் சூழலில் அவர் கொடுக்கும் பழங்கள், இளநீர், தண்ணீர் ஆகியவை பயனுள்ளதாக இருக்கிறது” என்றார்.

தென்னை மரம் ஏறும் தொழிலாளியான கிரீஷ், ஒரு மரம் ஏறினால் 100 ரூபாய்க்கும் குறைவாகவே பணம் கிடைக்கும் சூழலில் தன் வருவாயின் ஒரு பகுதியை போலீஸாருக்கு உதவப் பயன்படுத்துகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ``கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நம்மைப் பாதுகாக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். 

உதவும் கிரீஷ்
உதவும் கிரீஷ்

போலீஸாரின் பணியைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் நல்ல உணவு கொடுக்கும் அளவுக்கு எனக்கு வருமானம் இல்லை. அதனால்தான் என்னால் முடிந்த வகையில் வாழைப்பழம், இளநீர், சோடா, தண்ணீர் பாட்டில்களைக் கொடுக்கிறேன்” என்கிறார். 

அவரது இந்த மனிதாபிமான உதவி இணையத்தில் வைரலாகப் பரவியதால் பலரும் கிரீஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு