Published:Updated:

`தங்கத்துக்கு நிகரான டாய்லெட் பேப்பர்கள்; அடித்துக்கொள்ளும் மக்கள்‘ - ட்விட்டரை திணறடிக்கும் படங்கள்

டாய்லெட் பேப்பர்
டாய்லெட் பேப்பர்

வெளிநாடுகளில் மிகவும் அத்தியாவசியமாகக் கருதப்படும் டாய்லெட் பேப்பர்களின் பற்றாக்குறையால் பெரும்பாலான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை 3,500-ஐ தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எளிதாகப் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வுகள் என பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இருந்தும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் கொரோனாவை முன்னிறுத்தி பல்வேறு புதிய கஷ்டங்களும் அரங்கேறி வருகின்றன.

பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி, சுற்றுலா பாதிப்பு, விமானச் சேவைகள் நிறுத்தம், இறைச்சி தொழில் முடக்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. இது இப்படி என்றால் ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் மக்கள், கொரோனாவுக்குப் பயந்து தங்களின் அத்தியாவசிய பொருள்களை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கத் தொடங்கிவிட்டனர். சீனாவின் வுகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டதுபோல கொரோனாவால் தங்களின் நகரமும் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

டாய்லெட் பேப்பர்
டாய்லெட் பேப்பர்

இதில் குறிப்பாகப் பல நாடுகளில் டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட சில நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் டாய்லெட் பேப்பர் என்பது அத்தியாவசிய உபயோகப் பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மூட்டை மூட்டையாக டாய்லெட் பேப்பர்களை வாங்கி தங்கள் வீடுகளில் அடுக்கி வைத்து வருகின்றனர். இதனால் அந்த நாடுகளில் டாய்லெட் பேப்பரின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. தங்கம் மற்றும் வைரத்துக்கு நிகராக டாய்லெட் பேப்பர்கள் உள்ளதாக மீம்ஸ்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

`பயணத்தை மறைத்த குடும்பம்... கோபப்பட்ட அமைச்சர்..!' - கேரளாவில் மீண்டும் கொரோனா வந்தது எப்படி?!

அண்மையில் கூட ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக கடுமையாகச் சண்டை போட்டுக்கொண்ட வீடியோவும் சூப்பர் மார்க்கெட்களில் உள்ள டாய்லெட் பேப்பர்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இடங்கள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ எலான் மஸ்க் தன் ட்விட்டரில், `ஒரு ரோல் டாய்லெட் பேப்பரின் விலை 3999 டாலர்கள் அது வாங்கினால் ஒரு கேரட் வைர மோதிரம் இலவசம் என்ற வாசகங்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது உலக அளவில் அதிக பேசுபொருளாக இருந்தது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்.டி நியூஸ் என்ற செய்தித்தாள் நிறுவனம் தங்களது தினசரி செய்தித்தாளில் செய்திகள் எதுவும் அச்சிடாமல் வெறும் வெள்ளைக் காகிதங்கள் கொண்ட 8 பக்கங்களை வைத்து விற்பனை செய்து வருகிறது. அதற்கான காரணத்தையும் தங்கள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். அதில், `எங்கள் வாசகர்களாகிய உங்களுக்கு டாய்லெட் பேப்பர் பற்றாக்குறை இருப்பது தெரிந்தே இதைச் செய்துள்ளோம். உங்களிடம் இருக்கும் டாய்லெட் பேப்பர் தீர்ந்தால் நாங்கள் வழங்கிய அச்சிடப்படாத கூடுதல் பக்கங்களைக் கிழித்து டாய்லெட் பேப்பர்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தி நிறுவனத்தின் செயலை ஆஸ்திரேலிய மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

கொரோனாவுக்கும் டாய்லெட் பேப்பர்களுக்கும் என்ன தொடர்பு, இந்த பேப்பருக்காக மக்கள் எதற்கு இப்படி அடித்துக்கொள்கிறார்கள் என எதுவும் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர். #toiletpapercrisis என்ற ஹேஸ்டாக் கடந்த நில நாள்களாக ட்விட்டரில் அதிக டிரெண்டாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு