Published:Updated:

`உழைப்பின் வலி; நிம்மதிப் பெருமூச்சு!’ -இணையத்தைக் கவர்ந்த சீன மருத்துவரின் புகைப்படம் #CoronaVirus

வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம் ( People's Daily, China / Lai Xinlin )

சீனாவில் வைரஸின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு மருத்துவரின் புகைப்படம் இணையத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ், தற்போது 123 நாடுகளுக்குப் பரவி மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வைரஸ் உருவானதாகக் கூறப்படும் சீனாவில், வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, வைரஸால் பாதிக்கப்பட்ட 80,000 - க்கும் அதிகமான மக்களில் 70% பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா

சீனாவில் பரவத்தொடங்கிய வைரஸுக்கு, அங்கு மட்டும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த கடுமையான சூழ்நிலையில், சீனா முழுவதும் உள்ள மருத்துவர்கள், தங்கள் வீடுகள் மற்றும் உறவினர்களைப் பார்க்காமல், இரவு பகல் பார்க்காமல் நோயாளிகளைக் காக்கப் போராடினர். இந்தப் போராட்டத்தில், சில மருத்துவர்களும் ஊழியர்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

`செர்னோபில் ஹீரோக்கள்; தற்கொலைப் படை!’ - உயிரைப் பணயம் வைக்கும் சீன மருத்துவர்களின் பயணம் #corona

இந்த மோசமான சூழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீனா மீண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, சீனாவில் கொரொனா வைரஸுக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளை மூட, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வுஹான் நகரில் இருக்கும் 16 மருத்துவமனைகளை மூடும் வேலைகளில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்ததை அடுத்தும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வுஹான் நகரில் உள்ள ஒரு தற்காலிக மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படம், இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது. அதில் , 'வுஹானின் தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கடைசி கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, மருத்துவர் ஷியான் லாயிங், காலியாக இருக்கும் படுக்கைகளில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில், மருத்துவரின் நிம்மதியும் அவரது உழைப்பின் வலியும் பதிந்திருப்பது வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படத்துக்குக் கீழே, பலரும் தங்களின் கருத்துகளையும் பாராட்டுகளையும் குவித்துவருகின்றனர். ‘இந்தப் படம் வலி மிகுந்ததாக உள்ளது’, ‘மிகவும் மோசமான சூழ்நிலைகளில் மக்களுக்காக உழைக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எங்களின் மரியாதைகள்’, ‘நிம்மதிப் பெருமூச்சின் பதிவு’, ‘உழைப்பின் வலி’ என்றும் பதிவிட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் உறுதியான பிறகு, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், தாங்களாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக சிகிச்சை அளித்தனர். தங்கள் உயிரைப் பற்றி கவலைகொள்ளாமல், மக்களுக்காகக் கஷ்டப்பட்டு அதில் வெற்றியும்பெற்றுள்ளனர்.

கொரோனாவை எதிர்த்து சீனா நடத்திய போரில் மருத்துவர்களின் பங்கும் அபரிமிதமானது. அவர்களுக்கு நமது பாராட்டுகளையும் பதிவுசெய்வோம்.

அடுத்த கட்டுரைக்கு