Published:Updated:

`சீக்கிரமே என் குழந்தையை தூக்கிக் கொஞ்சுவேன்!'- கை தானம் பெற்ற திண்டுக்கல் நாராயணசாமி

மனைவி மற்றும் குழந்தையுடன் நாராயணசாமி
மனைவி மற்றும் குழந்தையுடன் நாராயணசாமி

``சட்டைப் போட்டுக்குவேன். ஆனா, யாராச்சும் பட்டன் போட்டுவிடணும். இப்போ மீண்டும் டூ வீலர் ஓட்ட முயற்சி செய்யறேன். படிப்படியா கைகளுக்குப் பலம் கிடைச்சிருச்சுன்னா, ஒவ்வொரு வேலையா நானே செய்ய ஆரம்பிச்சுடுவேன்"

மின் விபத்தில் இரண்டு கைகளையும் பறிகொடுத்தவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி. அந்த விபத்தே இவரின் காதலுக்கும் எதிரியானது. எனவே, கை தானம் பெறுவதற்கு சில ஆண்டுகள் இடைவிடாமல் போராடினார். இந்த நிலையில், மூளைச் சாவு ஏற்பட்ட சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் கைகள், நாராயணசாமிக்குப் பொருத்தப்பட்டன. பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு காதல் மனைவியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் தற்போது பெற்றோராக புரமோஷன் பெற்றிருக்கிறார்கள். 

குழந்தையுடன் நாராயணசாமி
குழந்தையுடன் நாராயணசாமி

விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் இருக்கும் நாராயணசாமி, ``அந்தக் கை மாற்று அறுவை சிகிச்சை தொடர்ந்து 12 மணிநேரத்துக்குமேல் நடந்துச்சு. அதுக்குப் பிறகு தமிழகத்துல இன்னொரு கை மாற்று அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவேயில்லை. அந்த ஆபரேஷன் நடந்து ரெண்டு வருஷம் ஆகுது. இப்போ என் கைகளின் செயல்பாடுகளில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு.

தொடந்து தினமும் ரெண்டு வேளை மாத்திரைகள் சாப்பிட்டு வர்றேன். கைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறேன். அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்க முடியாது. சட்டைப் போட்டுக்குவேன். ஆனா, யாராச்சும் பட்டன் போட்டுவிடணும். இப்போ மீண்டும் டூ வீலர் ஓட்ட முயற்சி செய்யறேன். படிப்படியா கைகளுக்குப் பலம் கிடைச்சிருச்சுன்னா, ஒவ்வொரு வேலையா நானே செய்ய ஆரம்பிச்சுடுவேன். 

குழந்தையுடன் நாராயணசாமி
குழந்தையுடன் நாராயணசாமி

சமீபத்துல எங்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தான். குழந்தையை என் மடியில வைக்கச் சொல்லித்தான் கொஞ்சுறேன். குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியாததுதான் பெரிய வருத்தம். அதுவும் சீக்கிரமே நடக்கும்.

குழந்தையுடன் நாராயணசாமி
குழந்தையுடன் நாராயணசாமி

அந்த ஆபரேஷனுக்குப் பிறகு வெங்கடேசன் சாரின் குடும்பமும் எங்க குடும்பமும் அன்பாகப் பழகுறோம். சீக்கிரமே குழந்தையைப் பார்க்க வர்றதா அவங்க குடும்பத்துல சொல்லியிருக்காங்க" என்கிறார், மனைவியைப் பார்த்துச் சிரித்தவாறு.

`` `உங்க காதல்ல ஜெயிச்சுட்டீங்க’னு ரெண்டு வீட்டுலயும் பாராட்டுறாங்க. வாழ்க்கை ரொம்பவே அழகா மாறியிருக்கு. அந்த மின் விபத்துக்குப் பிறகு எனக்கு இப்படியொரு வாழ்க்கை அமையும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. அதை நிகழ்த்திக் காட்டியது என் மனைவி நதியாதான். என் மனைவியும் குழந்தையும் கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு. இவங்க இருவரையும் காலம் முழுக்க சந்தோஷமா பார்த்துப்பேன்" என்று மனைவியை கரங்களைப் பற்றியவாறு கூறுகிறார், நாராயணசாமி.

மனைவியுடன் நாராயணசாமி
மனைவியுடன் நாராயணசாமி

ஆனந்த விகடன் இதழில் வெளியான நாராயணசாமி - நதியா தம்பதியின் முழுப் பேட்டி மற்றும் காதல் கதையைப் படிக்க, இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு