Published:Updated:

உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி; அடிமையானவர்களை மீட்பது எப்படி? - நிபுணர் ஆலோசனை

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் கடந்த ஆண்டு வருமானம் 10,000 கோடி; அடுத்த ஆண்டில் 20,000 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூதாட்டத்தில், அதன் விளம்பரத்தில் தோன்றும் நடிகர்கள் முதல் அரசு வரை ஒவ்வொருவருக்குமான பங்கு முதல் தீர்வு வரை ஓர் அலசல்...

உயிர்பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி; அடிமையானவர்களை மீட்பது எப்படி? - நிபுணர் ஆலோசனை

ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் கடந்த ஆண்டு வருமானம் 10,000 கோடி; அடுத்த ஆண்டில் 20,000 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூதாட்டத்தில், அதன் விளம்பரத்தில் தோன்றும் நடிகர்கள் முதல் அரசு வரை ஒவ்வொருவருக்குமான பங்கு முதல் தீர்வு வரை ஓர் அலசல்...

Published:Updated:
ஆன்லைன் ரம்மி

சூது என்றுமே வஞ்சத்தில்தான் முடியும் என்பதற்கு மகாபாரத காலந்தொட்டு தற்போதைய டிஜிட்டல் உலகம்வரை உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சூது விளையாட்டின் நவீன வெர்ஷனாக உருவெடுத்திருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு, பொறியில் சிக்கும் எலியைப்போல, மக்களைத் தன் பக்கம் ஈர்த்துக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. சிறுவர் முதல் பெரியவர்கள்வரை பலரையும் பாதித்து, பெரும்பாலான குடும்பங்களின் நிம்மதியைச் சீரழித்துவரும் இந்த விளையாட்டினால் ஏற்படும் விபரீதங்கள் சொல்லி மாளாதவை.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வாரத்தில் மட்டுமே இரண்டு உயிர்களைப் பறித்திருக்கிறது இந்த விளையாட்டு. சென்னை, மணலியைச் சேர்ந்தவர் பவானி. இரண்டு குழந்தைகளின் தாயான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, தனது 20 பவுன் நகைகளை விற்று, லட்சக்கணக்கான பணத்தை இந்த விளையாட்டில் இழந்திருக்கிறார். இதனால், அதீத மன உளைச்சலுக்கு உள்ளானவர், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் செய்தி, மொத்த மீடியா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்த பேச்சுகள் அடங்குவதற்குள், கரூர் மாவட்டம், தாந்தோணிமலையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சஞ்சய்யும் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த மற்றொரு சம்பவம் கொடூரத்தின் உச்சம். லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், இளைஞர்கள் மத்தியில் சீரழிவை ஏற்படுத்திவரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியிருக்கிறான். இதைத் தட்டிக்கேட்ட தனது தாயை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றிருக்கிறான்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

வயது வித்தியாசமும், படித்தவர் மற்றும் படிக்காதவர் போன்ற எந்தப் பேதமும் இன்றி பலரையும் தன்வசப்படுத்தி, உயிர்பலிகளுக்குக் குழிதோண்டிக்கொண்டிருக்கும் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரசிகர்களின் உயிரைவிட, அவர்கள் இழக்கும் பணத்தின் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் கணிசமான வருமானமே முக்கியம் என்று ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான விளம்பரங்களில் நடித்துவரும் சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள், இந்த விளையாட்டினால் பறிபோகும் உயிர்களுக்குத் தாங்களும் மறைமுக காரணம் என்பதை உணர்வார்களா?

ஆன்லைன் ரம்மி ஆபத்து...
ஆன்லைன் ரம்மி ஆபத்து...

ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தினால் கடந்த ஆண்டில் மட்டுமே 10,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்திருக்கிறது. இதை உறுதிசெய்திருக்கும் இந்திய கேமிங் சம்மேளனமான பிக்கி, இந்த வருவாய் அடுத்த ஆண்டில் 20,000 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறது. வருமுன் காக்க வேண்டிய மத்திய அரசு, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேரிடும் பாதிப்புகளையெல்லாம் தெரிந்தும்கூட, இந்த விளையாட்டால் கிடைக்கும் வருமானமே முக்கியம் என்று நினைப்பதாகவும், அதனால்தான், இந்த விளையாட்டுக்கு எந்தத் தடையும் விதிக்காமல் அமைதி காப்பதுடன், 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்து தனது வருவாயைக் கூட்டுவதில் மட்டுமே முனைப்புக் காட்டிவருகிறது என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

திறன் சாராத போட்டிகளை ஊக்கப்படுத்துவது எங்கும், எப்போதும் தவறானதுதான். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடைவிதிக்கும் முன்னுதாரண முடிவு தமிழகத்தில் எடுக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தினால் அதிகமானோர் பணத்தை இழக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசும் மெளனமே காக்கிறது. 'விபரீதத்தை உணர்ந்து, திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்' என்று அறிக்கைகளை வெளியிடுகிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

இந்தப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நியாயமான, நிலையான முடிவை எடுப்பதற்குள் இன்னும் பல உயிர்கள் பறிபோகலாம் என்று ஆதங்கப்படுகின்றனர் நடுநிலையாளர்கள். அப்போது என்னதான் தீர்வு?

நம்மை நாம் தற்காத்துக்கொள்வதுதான் எந்த ஒரு பிரச்னைக்கும் நிரந்தர தீர்வாக அமையும். அதன்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு, பலரையும் தன்வசப்படுத்துவது எப்படி? பாதிப்பிலிருந்து எவ்வாறு விடுபடுவது? உளவியல் சிக்கலில் தவிப்பவர்களைக் குடும்பத்தினர் எப்படி மீட்டெடுக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குத் தீர்வு சொல்கிறார்,சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

"எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது உண்டு. அது எதுவானாலும், தன்னைக் கட்டுப்படுத்தும் ஆளுமை இல்லாதவர்கள் மட்டுமே விட்டில் பூச்சியைப் போல பிரச்னையிலோ அல்லது சபலத்திலோ சிக்குவார்கள். இந்த ஆன்லைன் ரம்மி விஷயத்தில், பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்கள், பொழுதுபோக்காக ஆரம்பித்து இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்கள், ஆபத்தின் வீரியம் தெரிந்தும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். போட்டியாளர்களை முதலில் ஜெயிக்க வைத்து ஆசையைத் தூண்டிவிட்டு, பின்னர் தோற்கடிக்கச் செய்வதே பெரும்பாலான சூதாட்டங்களின் சூட்சமம். அதைத் தாமதமாக உணர்ந்தாலும், சுதாரித்துக்கொண்டு விளையாடுபவர்கள் அல்லது அந்த விளையாட்டு மோகத்திலிருந்து விடுபடுபவர்கள் சூடு பட்ட பூனையாகப் பெரும் ஆபத்துக்குள் சிக்காமல் தப்பிக்கிறார்கள்.

கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதில்லை; நேர்வழியில் சம்பாதித்து தன்னால் முன்னேற முடியாது என்று நினைப்பவர்கள், இருந்த இடத்திலிருந்து சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று உழைக்கச் சோம்பேறித்தனப்படுபவர்கள், ரம்மி விளையாட்டில் நான் ஜெயித்துவிட்டேன் என்று பெருமிதப்பட நினைப்பவர்கள் பலரும்தான் இந்த விளையாட்டால் யதார்த்தம் புரியாமல் தங்களை இழக்கத் தயாராகிறார்கள். ஒரு ரவுண்டில் பெற்ற பணத்தைவிட, அடுத்த ரவுண்டில் கூடுதலாகப் பணம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பது அல்லது இழந்ததையெல்லாம் வட்டியும் முதலுமாக அடுத்த ரவுண்டில் எடுத்துவிட முடியும் என எந்நேரமும் இந்த விளையாட்டுச் சிந்தனையிலேயே மூழ்குபவர்களும் உண்டு.

உளவியல் சிக்கல்...
உளவியல் சிக்கல்...

சமூகத்தில் திறமையால் வெற்றியை நிரூபிக்க முடியாத சிலருக்கு, இந்த விளையாட்டில் கிடைக்கும் அர்த்தமற்ற வெற்றி பெரிதாகத் தோன்றலாம். பலர் எதிர்த்தாலும், எப்படியாவது இந்த விளையாட்டில் பெரிதாகச் சம்பாதித்து, மார்தட்டிக்கொள்ள வேண்டும் என்பதுபோன்ற சிந்தனைகள், இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களை அடிமைப்படுத்தி, உளவியல் சிக்கலுக்கு நகர்த்தும்" என்று பிரச்னைக்கான அடிப்படை காரணத்தைக் கூறுபவர், முள்ளில் சிக்கிய ஆடையைப் பக்குவமாக எடுப்பதுபோல, இந்தப் பிரச்னைக்கான தீர்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார்.

"ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாவதும், குடிபோதைக்கு அடிமையாவதைப்போலத்தான். இதனால், மேற்கொண்டு பணத்தையும் நிம்மதியையும் இழக்கலாம் என்று தெரிந்தும்கூட இந்த விளையாட்டின் மோகத்திலிருந்து விடுபட முடியாமல் பலரும் தவிப்பார்கள். பணம் இழந்த விஷயத்தைக் குடும்பத்தினரிடம் சொன்னால் விபரீதம் பெரிதாகுமோ, இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானம் ஏற்படுமே என்று தவிப்பில் தங்களுக்குள் புழுங்கித் தவிப்பவர்களும் உண்டு. அந்தக் குற்றவுணர்வே, ஒருகட்டத்தில் அவர்களைத் தவறான முடிவெடுக்கத் தூண்டும்.

உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்
உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்

இந்த விளையாட்டில் குழந்தைகள் ஈடுபடுகிறார்களா என்பதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய வேண்டும். பெரியவர்களில் யாராவது இந்த விளையாட்டில் ஈடுபட்டால், அவரின் வாழ்க்கைத்துணையோ, குடும்பத்திலுள்ள பெரியவர்களோ, நண்பர்களோ கண்காணிக்க வேண்டும். இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மற்றும் மன உளைச்சலில் இருப்பவர்கள் இயல்புக்கு மாறான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவார்கள். அவற்றைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவரிடம் மனம் விட்டுப் பேசினாலே பாதிப் பிரச்னையைச் சரிசெய்யலாம். சரி, அதை எப்படிச் செய்வது?

தவற்றைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவரை மேலும் காயப்படுத்தக் கூடாது. 'இது தவறான செயல்தான். ஆனாலும், இனி இதுபோல செய்யாமல் பார்த்துக்கொள்ளலாம்' என்று பாதிக்கப்பட்டவருக்கு முதலில் தன்னம்பிக்கையூட்ட வேண்டும். பின்னர், அவர் இழந்த பணம், பெற்ற கடன் குறித்து அறிந்து, எவ்வளவு பெரிய சிக்கல் நேர்ந்திருந்தாலும் அதைப் படிப்படியாகச் சரிசெய்வதற்கான வாய்ப்புகளைத் தேட வேண்டும். பின்னர், குற்றவுணர்விலிருந்து விடுபடும் வகையில், ஆக்கபூர்வமான வேலையில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விஷயங்கள், சம்பந்தப்பட்டவர் தான் செய்த தவற்றை உணர்ந்து சரிசெய்யும் வகையில் அமைய வேண்டுமே தவிர, அவரைக் குற்றவாளியாக நினைக்கத் தூண்டுவதாக இருக்கக் கூடாது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

குறிப்பாக, இந்த விளையாட்டால் தற்கொலை செய்துகொள்ளும் பலரின் குடும்பத்தினருக்கும், அவரின் இறப்புக்குப் பிறகுதான் பிரச்னைக்கான காரணமே தெரிகிறது. குடும்பத்தில் ஒருவர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியிருப்பது, நகையை விற்று விளையாடுவது, கடன் பெறுவதுகூட தெரியாமல் இருப்பதெல்லாம் உறவுகளுக்குள் நம் நெருக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதை எல்லோருமே சுயபரிசோதனை செய்துகொள்வது, இதுபோன்ற சிக்கல் வருங்காலத்தில் நம் வீட்டில் ஏற்படாமல் தவிர்க்க உதவும்" என்பவர், எல்லோருக்குமான சுயபொறுப்புணர்வை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

"குடிமக்களின் உயிர், உடைமைக்கு அரசாங்கமும் பொறுப்புதான். ஆனால், மக்களைப் பாதிக்கச் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானமாக இருந்தாலும், அது அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இதற்கு, டாஸ்மாக், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்ளிட்ட பல உதாரணங்களைச் சொல்லலாம். சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் சொல்வதை வேதவாக்காக நம்பும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்தப் பிரபலங்களில் பலரும், தங்களுக்கான பொறுப்புணர்வை அறிந்து நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பதே நடைமுறைக்கு ஒத்துவராத தவறான எண்ணம்தான்.

ஆன்லைன் கேம்
ஆன்லைன் கேம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைசெய்யப்பட்டாலும், மற்றொரு விபரீத விளையாட்டு நிச்சயம் முளைக்கத்தான் செய்யும். அதனால், சுயக்கட்டுப்பாடு மட்டும்தான் நம்மை எல்லா விஷயத்திலும் காப்பாற்றும். ஆன்லைன் ரம்மி விளையாட்டானது, நெருப்பைத் தொட்டு விளையாடுவதுபோலத்தான். அது யாரை எப்போது சுடும் என சொல்ல முடியாது. அதனால், யாருமே இந்த விளையாட்டுக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இருப்பதே நல்லது" என்று எச்சரிக்கையுடன் முடிக்கிறார் சித்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism