யூடியூப் பிரபலமான ஃபர்மானி நாஸ் என்பவர் தனது யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து பாடல்கள் பாடி வருபவர். இவர் அண்மையில் இந்து கடவுள் சிவனைப் போற்றி 'ஹர் ஹர் ஷம்பு' எனும் பாடலைப் பாடியிருந்தார். இது 1.8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப் தளத்தில் வைரலானது. இந்நிலையில் ஒரு தரப்பு நெட்டிசன்கள் இப்படலைத் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுக் கொண்டாடி வந்தனர்.
மற்றொரு தரப்பினர், "இஸ்லாமியரான ஃபர்மானி நாஸ் பாடுவதும் ஆடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. என்றும் உருவ வழிபாடுகள் கொண்ட கடவுளைப் போற்றிப் பாடுவது தவறு" என்று கருத்து கூறிவருகின்றனர். பொதுவாக இஸ்லாம் மார்க்கம் இறைவன் (அல்லா) ஒருவன்தான் என்று கூறுகிறது. மேலும் இஸ்லாம் உருவ வழிபாடுகளை ஏற்பதில்லை. இதன் காரணமாக இஸ்லாமியரான ஃபர்மானி நாஸ் சிவனைப் போற்றிப் பாடியது இஸ்லாம் மார்க்கத்திற்குப் புறம்பான 'ஹராம்' செயல் என்று இஸ்லாமியர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
மேலும், மௌலானா முஃப்தி ஆசாத் காஸ்மி என்பவர், "பாடுவதும் ஆடுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
இந்நிலையில் பாடகி ஃபர்மானி நாஸ் தன் மீது வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசியுள்ளார். அதில் "இசை மதத்திற்கு அப்பாற்பட்டது. பிரபல பாடகர்களான மாஸ்டர் சலீம், முகமது ரஃபி சாப் போன்றவர்கள் நிறையப் பஜனைப் பாடல்கள் பாடியுள்ளனர். எனவே பாடுவதையும் பாடல்களையும் எந்த மதத்துடனும் இணைக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
