Published:Updated:

`பயிர்களை காக்கும் பட்ஜெட் புலி...!'- குரங்குகளை துரத்த விவசாயியின் `பலே' திட்டம்!

விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களை பாதுகாப்பது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றாகும். பறவைகள் குரங்குகள், யானைகள் என பயிர்களை காலி செய்ய துடிக்கும் விலங்குகள் கிராம புறங்களில் மிக அதிகம்.

பட்ஜெட் புலி
பட்ஜெட் புலி

விவசாயிகள் தங்கள் பயிர்களை நாசம் செய்யும் விலங்குகளை விரட்ட பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். விளைநிலங்களில் குச்சிகள் நட்டு அதில் துணிகளைப் பறக்க விடுவதுக், காய் கறிகளில் மிளகு பொடி தூவி குரங்குகளிடம் இருந்து காய்கறிகளைப் பாதுகாப்பது இன்னும் சில ஊர்களில் பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை விஷம் வைத்துக் கொள்ளும் பழக்கமும் நடைமுறையிலிருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலாகச் சென்று தன் விளை நிலத்தில் பயிர்களை நாசம் செய்யும் குரங்கு கூட்டத்தினை விரட்டியடிக்கக் கர்நாடக விவசாயி ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு டை அடித்து புலியாக மாற்றியுள்ளார். புலி தோற்றத்தில் உலா வரும் அந்த நாயினை பார்த்து குரங்கு கூட்டமும் தலைதெறித்து ஓடுகின்றன.

பட்ஜெட் புலி
பட்ஜெட் புலி

கர்நாடகா மாநிலம், தீர்தஹலி தாலுகாவில் அமைந்திருக்கும் நல்லுரு கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஸ்ரீகந்த கவுடா தன் விளை நிலங்களில் தான் பயிரிடும் காய்கறிகளைக் குரங்குகள் புகுந்து நாசம் செய்வதால் மிகுந்த வேதனை அடைந்தார். குரங்குகளை விரட்டப் பல்வேறு யுக்திகளை மேற்கொண்ட கவுடா எதுவும் பயனளிக்காமல் போனதால் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற போது, ஒரு முறை உட்டரா என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் தன் பயிர்களைச் சேதம் செய்யும் குரங்குகளை விரட்டப் புலி பொம்மை ஒன்றினை தன் விளை நிலங்களுக்கு இடையில் வைத்து குரங்குகளை விரட்டியது கவுடாவின் நினைவுக்கு வந்தது.

அந்த திட்டத்தை செயல்படுத்தி பார்த்த கவுடாவுக்கு திட்டம் கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து தன்னுடைய எல்லா விளை நிலங்களிலும் அதே பொம்மையை வைத்து விரட்டினார். ஆனால் பலன் சிறிது காலமே எனலாம். குரங்கிலிருந்து மனித இனம் தோன்றிய போது மனிதனுக்கு இருக்கும் அறிவில் அவற்றிற்கும் கொஞ்சம் இருக்கும் அல்லவா, ஆரம்பத்தில் புலி பொம்மையைப் பார்த்துப் பயந்த குரங்கு கூட்டம் போகப் போகப் அது வெறும் பொம்மை என்று கண்டுபிடித்து விட்டது. எனவே மீண்டும் தைரியமாகப் புகுந்து காய்கறி, பயிர்களை வேட்டையாடின.

பட்ஜெட் புலி
பட்ஜெட் புலி

எல்லா முயற்சிகளும் கவுடாக்கு வாய்க்காமல் போக வித்தியாசமான திட்டம் ஒன்றை தீட்டினார். இந்த முறை புலி பொம்மைகள் வைக்காமல் தன் வளர்ப்பு நாயை புலியாக மாற்றினார் கவுடா. தன் வளர்ப்பு நாய்க்கு புலியின் உடலில் இருப்பது போன்று வரிகளை நாயின் உடலெங்கும் அச்சு பிசுராமல் டை அடித்து நாயை பார்ப்பதற்கு புலி போன்று உருமாற்றினார் கவுடா.

மேலும் அந்த நாய்க்கு குரங்குகளை விரட்ட பயிற்சியும் அளித்துள்ளதால் அந்த நாய் விளை நிலங்களுக்குள் குரங்குகள் புகும் போதெல்லாம் விரட்ட சென்று விடுகிறது. சட்டென்று புலி உருவில் இருக்கும் அந்த நாயை பார்க்கும் குரங்குகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றன. சாயம் ஒரு மாதம் வரை மட்டுமே நீடிக்கும் என்பதால் மாதா மாதம் நாய்க்கு சாயம் பூச வேண்டியுள்ளதாக கூறுகிறார் விவசாயி கவுடா.

பட்ஜெட் புலி
பட்ஜெட் புலி

கவுடாவின் இந்த செயல் அப்பகுதி விவசாயிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதே போல் கர்நாடக மாநிலம் கக்கராசி பகுதியில் மற்றொரு விவசாயி ஒருவர் குரங்குகளை விரட்ட நாய் குரைப்பது போல் ஆடியோ ஒன்றை ஒலிக்க செய்து குரங்குகளை விரட்டுகிறார். ஆனால் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு கேரள மாநிலம் உடுப்பி பகுதியில் விவசாயி ஒருவர் தன் நாய்க்கு இதே போல் டை அடித்து குரங்குகளை விரட்டியது குறிப்பிடதக்கது. ஒரிஜினலை விட காப்பிகள் ட்ரெண்டாகும் இந்த காலகட்டத்தில், கவுடாவின் இந்த (காப்பியும்) செயலும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.