Published:Updated:

``வதந்திகளைத் தவிர்த்துட்டு மக்கள் இதைத்தான் செய்யணும்!" - `கொரோனா'வுக்கு எதிரான தம்பதியின் பாடல்

மணிமாறன் - மகிழினி
மணிமாறன் - மகிழினி

'இதனால்தான் இந்த நோய் வந்தது; இதையெல்லாம் சாப்பிட்டால் நோய் பரவும்' என்று உறுதிசெய்யப்படாத வதந்திகளைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.'

சீனாவில் பரவிய கொரோனா பாதிப்பு, உலக நாடுகள் பலவற்றையும் அச்சுறுத்தியிருக்கிறது. கொரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய்ப் பாதிப்பு விரைவாக மற்றவர்களிடம் பரவக்கூடியது என்பதால், கூட்டமாகக் கூடுவதைத் தவிர்ப்பது மற்றும் இந்தப் பாதிப்பு வராமல் தற்காத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இப்போதைக்கான முதல் தீர்வு.  

மணிமாறன் - மகிழினி
மணிமாறன் - மகிழினி

அந்த வகையில், கொரோனாவிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக விழிப்புணர்வு பாடல் ஒன்றைத் தற்போது வெளியிட்டிருக்கின்றனர், கிராமிய இசைக் கலைஞர்களான மணிமாறன் - மகிழினி இணை. மது ஒழிப்பு, சாலை பாதுகாப்பு உட்பட 10-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தப் பாடலை மணிமாறன் எழுதி, மகிழினி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உருவாக்கம் குறித்து மகிழினியிடம் பேசினோம்.

``மக்களின் இசையான நாட்டுப்புற இசையை, மக்களுடன் இணைந்துதான் பிரபலப்படுத்துகிறோம். மக்களைப் பாதிக்கும் எல்லா விஷயங்களிலும் நாங்கள் பக்கபலமாக இருக்க வேண்டியது எங்கள் கடமை. தற்போது நம் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் பொருளாதாரச் சூழலில், மக்களைக் காக்க எங்களால் பண உதவி செய்ய இயலாது. எனவேதான், நாட்டுப்புற இசை வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம்.

மகிழினி
மகிழினி

அரசும் மருத்துவர்களும் சொல்லக்கூடிய அறிவுரையைச் சரியாகக் கடைப்பிடித்தால், கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். அதை வலியுறுத்தித்தான், நேற்று இந்தப் பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான தேவையற்ற அச்சங்களைத் தவிர்த்து, மக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தற்காத்துக்கொள்ள இந்தப் பாடல் உதவினால் மிகவும் சந்தோஷப்படுவோம்" என்றவர்...

'தானா தானத்தந்தானா தாண்டவம் ஆடுது கொரோனா

வீணா புரளிகளை வீசிப்பல வாரானா

வதந்திகள் வேண்டாம்; வம்படிகள் வேண்டாம்;

அலட்சியம் வேண்டாம்; அச்சப்பட வேண்டாம்!'

என்று தொடங்கும் அந்தப் பாடலின் சில வரிகளைப் பாடிக்காட்டினார் மகிழினி.

மணிமாறன்
மணிமாறன்

இந்தப் பாடலை எழுதிய 'புத்தர் கலைக்குழு'வைச் சேர்ந்த மணிமாறன், "கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்வதைக் கடைப்பிடிக்காமல், 'இதனால்தான் இந்த நோய் வந்தது; இதையெல்லாம் சாப்பிட்டால் நோய் பரவும்' என்று உறுதிசெய்யப்படாத வதந்திகளைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். அதையெல்லாம் நம்பாமல், அரசு சொல்லும் விஷயங்களை மட்டும் நம்பி மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை வழியுறுத்தி, எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் புரியும்படி நாட்டுப்புற இசை வடிவில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் கடமை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு