Published:Updated:

`அப்பா கொடுத்த கடைசி பணம்; ஃப்ளாஷ்பேக்'- இன்டர்நெட்டால் சாத்தியமான எமோஷனல் நிகழ்வு!

``இது என் அப்பா எனக்கு கடைசியாக கொடுத்த பணம்” என்று தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு கடைசியில் ``நான் உங்களை நேசிக்கிறேன் அப்பா”

10 ரிங்கிட் பணம்
10 ரிங்கிட் பணம்

காணாமல் போன குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைப்பது, இழந்த பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் சேர்ப்பது, சாதாரண மனிதர்களை ஓவர் நைட்டில் பிரபலமாக்குவது என இந்த இன்டர்நெட் செய்யாத மேஜிக் என்னதான் இருக்கிறது. ஆம், என்னதான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளத்துக்கு நாம் அடிமையாகி நம்முடைய பல மணி நேரத்தை நமக்கே தெரியாமல் அதில் வீணடித்தாலும், அதில் நாம் சாதாரணமாக ஒருவரின் போட்டோவையோ அல்லது வீடியோவையோ அப்லோட் செய்யும் ஒன்று, அது அவர்களது வாழ்க்கையையே மாற்றும் பல நிகழ்வுகள் சமீபகாலமாக நிகழ்ந்துவருகிறது.

10 ரிங்கிட் நோட்
10 ரிங்கிட் நோட்

அப்படியொரு எமோஷனலான நிகழ்வு ஒன்று மலேசியாவில் சென்ற வாரம் நடந்துள்ளது. கடந்த நவம்பர் 30-ம் தேதி ஹைசா எசானி (Hyza Ezany) என்ற பெண் தன்னிடம் வந்த ஒரு 10 ரிங்கிட் நோட்டில் ``இது என் அப்பா எனக்கு கடைசியாக கொடுத்த பணம்” என்று தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு கடைசியில் ``நான் உங்களை நேசிக்கிறேன் அப்பா” போன்ற வாசகங்கள் எழுதியிருப்பதைக் கண்டு எமோஷனல் ஆகியிருக்கிறார். இதை எழுதியவரிடம் இப்பணம் சென்றடைய வேண்டும் என்று தன்னால் முடிந்த காரியமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ``இப்பணம் அதன் உண்மையான உரிமையாளரிடம் சேரும் வரை ஷேர் செய்யுங்கள்" என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவை சுமார் இருபத்து நான்காயிரம் பேர் ஷேர் செய்யவே, இறுதியில் அந்த வாசகங்களை எழுதிய நபர் கண்டறியப்பட்டார். அன்னி மலர் யேசுதாஸ் என்ற அப்பெண் இது குறித்து, ``என் வாழ்வின் விலை மதிப்பில்லா பொருளை கண்டறிந்து என்னிடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார். அந்தப் பணம் குறித்தும் அவர் அதில் அப்படி எழுதியதற்கும் மிக சென்டிமென்டான ஃப்ளாஷ்பேக்கை நினைவுகூருகிறார் அவர்.

அன்னி மலர் யேசுதாஸ்
அன்னி மலர் யேசுதாஸ்

``எனக்கு பதினேழு வயது இருக்கும்போது என் அப்பா என்னை ஸ்கூலில் ட்ராப் செய்யும் முன்பாக பாக்கெட் மணியாக கொடுத்த பணம் இது. அதுதான் நான் அவரை கடைசியாக உயிரோடு பார்த்த தருணம். என்னை விட்டுச்சென்ற அவர் எதிர்பாராத விபத்தில் இறந்துபோனார். அவரின் ஞாபகமாக 2010-ம் ஆண்டு மே 21-ல் இருந்து இப்பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். ஆனால், சென்ற வருடம் செப்டம்பர் மாதம் இப்பணம் திருடு போனது. அப்போதிலிருந்து இப்பணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரொம்பவே கவலைப்படுவேன்” என்கிறார் அவர்.

தற்போது அப்பா கொடுத்த பணம் மீண்டும் கிடைத்துள்ள நிலையில் சொல்லமுடியாத மகிழ்ச்சியில் திளைக்கும் அவர் ``இதை சாத்தியமாக்கிய நெட்டிசன்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.