Published:Updated:

``எப்படி வந்ததோ, அப்படியே திரும்பிப்போனது"- குப்பை சேகரிப்பவருக்குக் கிடைத்த லாட்டரியும் பாடமும்!

மைக்கேல் கரோல்
மைக்கேல் கரோல்

யாரும் என் பின்னால் இருந்து தாக்கி என்னைக் கொள்ளையடிக்கப் போவதில்லை. நான் உயிருடன் இருப்பதே அதிர்ஷடம்தான்

மனித வாழ்க்கையில் பணம் மட்டும் இருந்தால் போதும் எதையும் செய்துவிடலாம் என்ற மனநிலை தற்போது நம்மில் பலருக்கும் வந்துவிட்டது. இப்படி ஒரே நாளில் உலக கோடீஸ்வரர் ஆகவேண்டும் என நினைப்பவர்கள் அதிகமாக நம்பும் விஷயங்களில் லாட்டரி டிக்கெட்டுகளும் ஒன்று. லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பலரின் கதைகளை நாம் கேட்டுள்ளோம். ஆனால் அதே லாட்டரி மூலம் ஒரே இரவில் ஏழையாக மாறியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். முதலில் பழைய கதையைப் பார்ப்போம்....

மைக்கேல் கரோல்
மைக்கேல் கரோல்

1983-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் மைக்கேல் கரோல் (Michael Carroll). இவருக்கு பத்து வயது இருக்கும்போதே இவரின் தந்தை உயிரிழந்துள்ளார். பின்னர் தாயின் அரவணைப்பில் வளர்ந்த மைக்கேல், பதினைந்து வயதுக்குப் பிறகு சாலைகளில் குப்பைகள் சேகரிக்கும் பணிகளைச் செய்து தன் தாயைக் காப்பாற்றி வந்துள்ளார். மற்றவர்களைப் போல இவருக்கும் தன் வாழ்வில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

2002-ம் ஆண்டு மைக்கேல் எதிர்பார்த்ததைப் போலவே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தான் வாங்கிய லாட்டரில் 9.7 மில்லியன் பவுண்ட்( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 89 கோடி ரூபாய்) விழுந்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரனான மைக்கேலுக்கு அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துள்ளார். தன் தாய்க்குச் சிறிய அளவிலான தொகை, வீடு, நண்பர்கள், பயணம், மது, சொகுசு கார் என ஆடம்பரமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் மைக்கேல். தனக்கு லாட்டரியில் கிடைத்த மொத்த தொகையையும் 10 வருடங்களில் தன் விருப்பப்படி செலவழித்துவிட்டார். தற்போது மைக்கேல் ஒரு சுரங்க நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 மது
மது

``கடிகாரத்தை திருப்பிப் பார்க்க விரும்பவில்லை. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அந்த 10 வருட வாழ்க்கையை நான் வருத்தத்துடன் திரும்பிப் பார்க்கமாட்டேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். என் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி வந்துள்ளேன். இப்ப சுதந்திரமா இருக்கேன். எதிரிகள் இல்லை. அந்த 10 வருடம் ஒரு அழகான மாயாஜாலம். அந்த ஜாலங்கள் எல்லாம் என் நினைவில் எப்போதும் இருக்கும். அந்த நாள்களில் மதுவுடன்தான் என் வாழ்க்கையைக் கழித்தேன். தினமும் குறைந்தது இரண்டு பாட்டில் காலி செய்துவிடுவேன். கண்ணில் கண்டதை எல்லாம் பருகினேன். நான் கண் விழிக்கும் போது எங்கு இருக்கிறேன் என்றேன் எனக்கு தெரியாது.

மது மீது இருந்த மயக்கம் அதன்பின் மாதுவின் மீது திரும்பியது. நிறைய பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டேன். அது சாண்ட்ராவுக்கும் எனக்குமான வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியது. சாண்ட்ரா என் மனைவி. அவர் 7 மாத கர்ப்பமாக இருந்த போது லாட்டரியில் அதிர்ஷடம் அடித்தது. என்னுடைய இந்தப் பழக்கங்கள் எங்களின் திருமண வாழக்கையை விரைவிலே முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயிரம் பெண்களுடன் ஊர் சுற்றினால் எந்த மனைவிதான் கூட இருப்பாள். நான் அவளை ஏமாற்றி விட்டேன்.

மைக்கேல் கரோல்
மைக்கேல் கரோல்

முடிசூடா மன்னனைப்போல் வாழ்ந்தேன். போதை பொருள்களுக்கு அடிமையானேன். ஆடம்பர கார்கள், பங்களாக்கள் வாங்கினேன். எல்லாம் என் கையை விட்டுப் போனது. உங்களிடம் பணம் கொட்டிக்கிடந்தால் நண்பர்களும் எதிரிகளாக மாறுவார்கள். எனக்கான எதிரிகள் தானாக உருவானார்கள். ஒரு கொடூரமான கொள்ளைக் கும்பல் என் குடும்பத்தினரைக் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டினர். என் குடும்பத்தின் புகைப்படத்தை அனுப்பினர். என் மகளை துண்டு துண்டாக வெட்டுவேன் என்றனர். எனக்கு சில ஆபத்தான நண்பர்கள் இருந்தனர். அவர்களுக்கு சில தொகையைச் செலவழித்து குடும்பத்தை மீட்டேன். 30 முறை சிறை வாசம் அனுபவித்துள்ளேன். வேகமாக கார் ஓட்டியது, போதை பொருளுடன் சுற்றியது என என் மீது வழக்குகள் பாய்ந்தன. இந்த ஆடம்பர வாழ்க்கை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. என்னிடம் இருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோனது.

அதன்பின் மூன்று மாசம் தங்குவதற்குக் கூட இடம் இல்லை. எப்படி வந்ததோ எல்லாம் அப்படியே திரும்பிப்போனது. சரின்னு ஒரு பிஸ்கெட் கம்பெனியில் வேலை. அதுவும் கொஞ்சம் நாள்தான். அதன்பின் கறிக்கடையில் வேலை செய்தேன். 5 வருஷம் நிம்மதியான வாழ்க்கை. அந்தச் சூழல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. அந்த இடத்தை மூடும் வரை அங்குதான் இருந்தேன். சரி இப்ப என்ன நிலக்கரி நிறுவனத்தில் வேலை. வாரத்தில் 7 நாள்களும் வேலை இருக்கும். நான் லாட்டரியில் ஜெயித்தவன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இப்போ ஒரு வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கேன். என் தோள்பட்டைக்கு மேல் யாரையும் பார்க்கப் போவதில்லை. யாரும் என் பின்னால் இருந்து தாக்கி என்னைக் கொள்ளையடிக்கப் போவதில்லை. நான் உயிருடன் இருப்பதே அதிர்ஷடம்தான். பணம்தான் எல்லா தீமைக்கும் மூலதனம்.

``எப்படி வந்ததோ, அப்படியே திரும்பிப்போனது"- குப்பை சேகரிப்பவருக்குக் கிடைத்த லாட்டரியும் பாடமும்!

நான் மீண்டும் லாட்டரி வாங்குகிறேன். நான் மீண்டும் வெல்வேன் அனைவரையும் தோற்கடிப்பேன். நான் மீண்டும் வென்றால் ஒரு வீடு வாங்குவேன். சிறுது நாள்கள் வெளிநாட்டில் செலவழிப்பேன். வெற்றியாளர்களுக்கு என் சிறிய அறிவுரை யாரையும் நம்பாதீர்கள், உங்கள் குடும்பத்தையும்தான்.” என்கிறார் மைக்கேல் கரோல்.

அடுத்த கட்டுரைக்கு