Published:Updated:

`இந்தத் தருணத்தில் உன் மகனும் இருக்க வேண்டும்!’- பதவிப்பிரமாண நிகழ்வில் நெகிழ வைத்த நீதிபதி #Video

கையில் குழந்தையுடன் நீதிபதி ஒருவர் பெண் வழக்கறிஞருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீதிபதி
நீதிபதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஜூலியனா லாமர், பெல்மாண்ட் சட்டப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை நிறைவு செய்தார். ஜூலியனாவுக்குக் கடந்த சில தினங்களுக்கு டென்னிஸி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி ரிச்சர்ட் டின்கின்ஸ் வழக்கறிஞராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவுக்கு ஜூலியனா லாமர் தன் 1 வயதுக் குழந்தை பெக்காம் உடன் வந்திருந்தார். குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்ட நீதிபதி ஜூலியனாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நீதிபதி,  ஜூலியனா லாமர்
நீதிபதி, ஜூலியனா லாமர்

பல்கலைக்கழக நிகழ்வு என்பதால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். நீதிபதி குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததை அங்கிருந்தவர்கள் படம் பிடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீதிபதியின் கையில் இருக்கும்போது குழந்தை துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தது. நீதிபதி குழந்தையைக் கையாண்ட விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் ஒரு தாயாக புதிய பயணத்தைத் தொடங்கவிருக்கும் ஜூலியனாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

`பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து நின்றவன்!' - குழந்தைகள் தினத்தில் சிறுவன் பாஜியை நினைவுகூர்ந்த சேவாக்

இதுகுறித்து பேசிய ஜூலியனா லாமர், “பதவிப்பிரமாணம் நாளில் நீதிபதி என்னிடம் இந்த அருமையான தருணத்தில் பெக்காம் பங்கு பெற வேண்டும் என்றார். நீதிபதி அவ்வாறு செய்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணத்தில் என் மகன் என்னுடன் இருப்பது உண்மையில் மிகப்பெரிய ஆசீர்வாதமே. குழந்தையை வைத்துக்கொண்டு சட்டக்கல்லூரியில் படிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. ஏனென்றால் மாணவர்கள் எத்தனை வகுப்புகளில் பங்கேற்கின்றனர் போன்றவற்றில் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள்.

இந்தத் தருணத்தில் என் கணவர் ஜேவானுக்குதான் நன்றி கூற வேண்டும். அவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் பணியாற்றும் தளம் இங்கு அருகில்தான் உள்ளது. நான் கல்லூரிக்கு வந்த பின்னர் அவர்தான் குழந்தையைக் கவனித்து வந்தார். குழந்தையைக் கவனித்துக்கொண்டு படிப்பை தொடர்ந்தபோது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டேன். அந்த வலிகள் எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் சட்டக்கல்லூரிகளில் பயில வரும் தாய்மார்களுக்காகப் பல்கலைக்கழகம் தனது விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வரலாம்” என்றார்.