Published:Updated:

ஜீரோ ஆங்கில் கோல் அடித்து வைரலாகும் 10 வயது கேரளச் சிறுவன் டேனி! #viralvideo

Dani
Dani

`என் மகனுக்கு கால்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்தை ஆத்மார்த்தமாக நேசிப்பதால்தான் இப்படியான ஒரு கோலை அவனால் அடிக்க முடிந்துள்ளது’

கேரள மாநிலம் கோழிக்கோடுப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் டேனி, சமீபத்தில் வயநாடு மாவட்டம் மினாங்காடியில் நடந்த, மாநில அளவிலான குழந்தைகளுக்கான கால்பந்துப் போட்டியில் `ஜீரோ ஆங்கில் கோல்' அடித்துள்ளார். கார்னர் கிக்கை சக வீரர்களின் துணையின்றி நேரடியாக கோலாக மாற்றுவதையே ஜீரோ ஆங்கில் கோல் என்பர்.

ஏனெனில், கார்னரில் இருந்து உதைக்கும் பந்தை கோல் போஸ்ட்டுக்கு முன்னே நிற்கும் வீரர்கள் தலையால் முட்டியோ அல்லது காலால் உதைத்தோதான் கோல் அடிப்பார். ஆனால், கார்னர் கிக் எடுக்கும் வீரரே, ஒரே டச்சில் கோல் வலைக்குள் பந்தை அடிப்பது என்பது அபூர்வம். சர்வதேச அளவிலான போட்டிகளிலேயே அரிதினும் அரிதாகவே `ஜீரோ ஆங்கில் கோல்’ அடிக்கப்படும். அதனால்தான், டேனி அடித்த இந்த கோல் பெரிதாகப் பேசப்படுகிறது.

கோல் அடித்த அந்த வீடியோவை டேனியின் தாய் நோவியா அஷ்ரப் தனது ஃபேஸ்புக்கில் பதிந்துள்ளார். அதை இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஐ.எம்.விஜயன் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

விஜயன் பகிர்ந்த வீடியோ இதுவரை 2,53,000 வியூஸைக் கடந்துள்ளது. 5,000 பேருக்கும் மேலாக இது ஷேர் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டேனியின் தந்தை அபு ஹாஷிம் அளித்திருந்த பேட்டியில், ``என் மகனுக்கு கால்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. கால்பந்தை ஆத்மார்த்தமாக நேசிப்பதால்தான் இப்படியான ஒரு கோலை அவனால் அடிக்க முடிந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Dani, ஜீரோ ஆங்கில் கோல்
Dani, ஜீரோ ஆங்கில் கோல்
Mathurubhumi english

மேலும், ``நாங்கள் அவருக்கு எத்தனை கால்பந்துகளை வாங்கிக் கொடுத்திருந்தாலும் திரும்பத் திரும்ப பந்துகளையே எங்களிடம் விரும்பிய பொருளாகக் கேட்பான். காலையில் 6 மணிக்குப் பயிற்சிக்குச் செல்லவோ கால்பந்து உடைகளை அணிந்து கொண்டு தயார்படுத்திக்கொள்ளவோ எங்களின் உதவி எப்போதும் அவனுக்குத் தேவைப்பட்டது இல்லை. கடிகார அலாரமும் இன்றி தினமும் அதிகாலையில் எழுந்துகொள்ளும் லயோனில் டேனி, அவனுக்கான ஒட்டுமொத்த வேலைகளையும் தானே செய்துகொள்வான்" என்றார்.

கோழிக்கோடு பிரசென்டேஷன் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் டேனி, மாநில அளவிலான கேரள சிறுவர்களுக்கான டோர்னமென்ட்டில் 13 கோல்கள் அடித்து தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். கேரள கால்பந்து உலகம் வியந்து பார்க்கும் டேனி, சர்வதேச வீரர் மெஸ்ஸியின் ரசிகன். விடுமுறையில் ஸ்பெயினுக்குச் சென்று மெஸ்ஸியைச் சந்திக்க வேண்டும் என்பது அவன் கனவு.

கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படும், Aanaparambile World Cup என்ற மலையாள படத்திலும் டேனி நடித்து வருகிறான். கால்பந்து வீரராகும் ஒரு சிறுவனின் சூழலே படத்தின் கதைக்களம். மே மாதம் படம் திரைக்கு வரவுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு