Published:Updated:

`பிரேக்கிங்.. திரையில் தனது பெயர், புகைப்படம்; நேரலையில் செய்தி தொகுப்பாளர்!'- இது கேரள வைரல் #Video

செய்தி தொகுப்பாளர் ஸ்ரீஜா ஷியாம்
செய்தி தொகுப்பாளர் ஸ்ரீஜா ஷியாம் ( Facebook/sreeja.shyam )

வழக்கம்போல் தனக்கு முன் இருக்கும் திரையைப் பார்த்து செய்தி வாசித்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா ஷியாமுக்கு நேரலையில் ஒரு இன்ப அதிர்ச்சி.

செய்தி தொகுப்பாளர் ஒருவர் தனது பெயரையும் படத்தையும் நேரலை திரையில் பார்க்க நேர்ந்து, அந்தச் செய்தியை அவரே உலகுக்குச் சொல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.. அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.

மலையாள ஊடகமான மாத்ருபூமி தொலைக்காட்சியில் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தித் துளிகளை வழங்கிக்கொண்டிருந்தார், அந்த ஊடகத்தின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாம். செய்தித்துளிகளின் நடுவே ஒரு பிரேக்கிங் நியூஸ். அதாவது கேரள அரசின் ஊடக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அந்த பிரேக்கிங் நியூஸ்.

ஸ்ரீஜா ஷியாம்
ஸ்ரீஜா ஷியாம்
Facebook/sreeja.shyam

வழக்கம்போல் தனக்கு முன் இருக்கும் திரையைப் பார்த்து செய்தி வாசித்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா ஷியாமுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவரால் ஒரு சில விநாடிகள் எதுவும் பேச முடியவில்லை. பின்னர் சுதாகரித்துக்கொண்டு அந்தச் செய்தியை அவர் வாசிக்கிறார். திரையில் ஸ்ரீஜா ஷியாமின் படம் தோன்றுகிறது. கேரள அரசின் 2018-ம் ஆண்டின் சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது மாத்ருபூமி ஊடகத்தின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்திதான் அது. தனக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பதை தானே அறிவித்தார் ஸ்ரீஜா.

Sreeja Shyam അല്പസമയം മുൻപ് വാർത്തവായിക്കുന്നതിനിടയിൽ: മികച്ച വാർത്താ അവതാരകയ്‌ക്കുള്ള സംസ്ഥാന സർക്കാർ പുരസ്കാരം...

Posted by Habeeb Anju on Tuesday, February 11, 2020

முடிவில், அவர் முகத்தில் ஒரு புன்னகை. தன்னுடைய மனமகிழ்ச்சியை அவரால் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. விரும்பிச் செய்யும் பணிக்காக விருது கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது சிரமம்தானே. ஆனாலும் ஒரு சில விநாடிகளில், வழக்கமான அடுத்தடுத்த செய்திக்குச் சென்றுவிட்டார் ஸ்ரீஜா. இவர் 2007-ம் ஆண்டில் ஊடகத் துறையில் நுழைந்தார். கடந்த 6 ஆண்டுகளாக மாத்ருபூமி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். எப்போதும் அமைதியாக, பொறுமையை இழக்காத ஒரு செய்தி தொகுப்பாளராக அறியப்படுபவர் ஸ்ரீஜா. நேற்று முதல் இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதன்கீழே, கமென்ட்டில் ஸ்ரீஜாவுக்கு வாழ்த்து மழையும் பொழிந்து தள்ளினர் நெட்டிசன்கள். வாழ்த்துகள் ஸ்ரீஜா!

அடுத்த கட்டுரைக்கு