Published:Updated:

தவறான ரூட்டில் வந்த அரசு பஸ்; நடுரோட்டில் பெண் காட்டிய `தில்'!- தெறிக்கவிட்ட வீடியோ

``நீங்கள் சரியான பாதையில் இருப்பவராக இருந்தால், இந்த வீடியோ உங்களுக்கு வித்தியாசமான பலத்தைக் கொடுக்கும்.

women
women

`சமூக வலைதளங்கள் சூழ் உலகில்’தான், வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எப்போது, எது டிரெண்டாகும் என்பதெல்லாம் நெட்டிசன்களுக்கே வெளிச்சம். இங்கே, திடீரென நடிகர் கரண் டிரெண்டிங்கில் இருப்பார். அவரது புகைப்படங்கள் டிபிக்களாக வைக்கப்படும். அடுத்த சில நாள்களில், சம்பந்தமே இல்லாமல், சீரியல் இயக்குநர் கோபி லைம் லைட்டுக்கு வருவார். அவரது வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு மீம்களாக்கப்படும். `மீம் கன்டென்ட்டுகளின் கடவுள்’ என்று அழைக்கப்படும் வடிவேலுவின், `நேசமணி’ கதாபாத்திரம் வைரலாகும். மீம்களை ஷேர் செய்யும் நேரத்தில் ஏன் எதற்கு என்பதெல்லாம் ஆராய நேரம் இருக்காது.

video
video

இந்த வைரல் சம்பவங்கள், சமூக அக்கறையின் அடிப்படையிலும் அரங்கேறும். `தமிழர் வேலை தமிழருக்கே’ உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், டிரெண்டிங்கில் இந்தியாவுக்கு தமிழர்களின் குரலை ஒலிக்கச்செய்யும். அதேபோலத்தான் வீடியோக்களும். டிக் டாக்கின் வருகைக்குப் பிறகு, வீடியோக்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. டிக் டாக்கில் வீடியோ போட்ட காவல்துறையினர், கைதியுடன் போலீஸார் ஆடும் வீடியோ இப்படியாகப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். `பசிக்கும்ல’ `குணமா, வாயால சொல்லணும்’ உள்ளிட்ட வீடியோக்களும் எப்படியோ வைரலாகிவிடுகின்றன.

பொதுவெளியில் ஒரு சம்பவம் நடந்தால், உடனே அது வைரல் தான். அப்படியான ஒரு சம்பவம்தான் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. டிரெண்டிங்கிலும் இருக்கிறது. டிக்டாக், ஃபேஸ்புக், ட்விட்டர் என தெறிக்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள். அந்த வீடியோவில், `பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில், சாலையில் இடதுபுறம் வந்துகொண்டிருக்கிறார். அப்போது, அவருக்கு எதிர்புறமாக வந்துகொண்டிருந்த பேருந்து, விதிமீறி அந்த பெண் வரும்பாதையிலே வருகிறது. விதிமுறைகளை மீறி பேருந்து வருவதைக் கவனித்த அந்தப் பெண், எந்த சமரசமும் இல்லாமல், தான் செல்லும் பாதையில் நின்றுகொண்டிருக்கிறார்.

viral video
viral video

வேறு வழியில்லாமல் அந்த ஓட்டுநர், தன் பேருந்தை விதிப்படி செல்லவேண்டிய பாதைக்குத் திருப்புகிறார்'. ஆனால், அந்தப் பெண் எதுவும் பேசவில்லை. இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஒருவர், ``நீங்கள் சரியான பாதையில் இருப்பவராக இருந்தால், இந்த வீடியோ உங்களுக்கு வித்தியாசமான பலத்தைக் கொடுக்கும். இந்த பெண்ணைப் பாருங்கள், தவறாக வந்த அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு ஓர் அங்குலம்கூட இடம்கொடுக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்களை ஷேர் செய்யும் பலர், தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். அதில் ஒருவர், `வட இந்தியாவுல இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பேயில்லை. அப்படி நடந்தா, ஓட்டுநர் கீழே இறங்கி அந்தப் பெண்ணை தாக்கியிருப்பார்” என்று பதிவிட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.