Published:Updated:

வித்தியாச தோற்றம்; சோஷியல் மீடியா நாயகன் `லில் பப்'! - வைரல் பூனை மறைவால் கலங்கும் நெட்டிசன்கள்

லில் பப்பின் புகைப்படத்தை அதன் உரிமையாளர் இன்ஸ்டாவில் பதிவேற்ற, அதன் தனித்தன்மைகளுக்காக சோஷியல் மீடியாவில் லில்லுக்கு ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

லில் பப்
லில் பப்

`லில் பப்' - இது பாப் சிங்கரின் பெயரோ அல்லது வேறொரு துறையில் பிரபலமாக இருக்கும் நபரின் பெயரோ இல்லை. தனது வித்தியாசமான தோற்றத்தால் பலரின் மனதை கொள்ளைகொண்ட சிறிய பூனைக் குட்டியின் பெயரே இது! இதற்கென்று ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராமில் தனிப்பக்கமும் அதற்கு லட்சக்கணக்கில் ஃபாலோயர்களும் இருக்கிறார்கள்.

லில் பப்
லில் பப்

`ஒரு சாதாரண பூனைக்கு லட்சக்கணக்கில் ரசிகர்களா' என்று வியப்பாக இருக்கலாம். ஆனால், லில் பப்பைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால் இதற்கு விடை கிடைக்கலாம்.

லில் பப்பை வளர்த்தவர் அமெரிக்கவைச் சேர்ந்த மைக் பிரிடாஸ்சி. இந்த லில் மற்ற பூனைகளைப் போல இல்லை. பிறவியிலேயே பல குறைபாடுகளுடன் பிறந்த லில், மற்ற பூனைகளைவிட குள்ளமாகவும், கை கால்களில் அதிக விரல்களுடனும், வித்தியாசமான கண்களுடனும் காணப்பட்டது. தவிர, இதற்குப் பற்களும் கிடையாது என்பதால் நாக்கு எப்போதும் வெளியில் நீட்டிக்கொண்டேதான் இருக்கும்.

லில் பப்
லில் பப்

லில் பப்பின் புகைப்படத்தை அதன் உரிமையாளர் இன்ஸ்டாவில் பதிவேற்ற, அதன் தனித்தன்மைகளுக்காக சோஷியல் மீடியாவில் லில்லுக்கு ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்ட லில்லின் ஓனர் பிரிடாஸ்கி, தன் பூனைக்குட்டியைப் போலவே ஊனமுற்ற பிற பூனைகளுக்காக நிதி திரட்டி, அதை அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் விலங்குகளைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிவந்தார்.

உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு உடம்பு சரியில்லையா?- `கோரோனா வைரஸ்’ டெஸ்ட் பண்ணுங்க

இந்த வகையில் தன்னைப்போலவே உடல் குறைபாடுகளுடன் இருக்கிற மற்ற விலங்குகளுக்காக 7 லட்சம் டாலர்வரை நிதி திரட்டியுள்ளது இந்தக் குட்டிப்பூனை.

லில் பப்
லில் பப்

தற்போது எட்டு வயதாகும் லில், பிறவிக்குறைபாடுகளுடன், பிறந்ததிலிருந்தே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுடனும் அவதிப்பட்டு வந்தது. தவிர, கடந்த சில நாள்களாக எலும்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பப், சென்ற ஞாயிற்றுக்கிழமை தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளது. இந்தத் தகவலை சோகத்துடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார் பிரிடாஸ்கி. பூனைப் பிரியர்களின் செல்லமாக இணையதளத்தில் வலம் வந்துகொண்டிருந்த இந்த `லில் பப்'பின் மரணம், அதன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.