Published:Updated:

`காட்டு யானையுடன் செல்ஃபி!' - `வீபரீத ஆசை' இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய லாரி டிரைவர்

ஆக்ரோஷமடைந்த காட்டுயானை இவர்களின் வாகனத்தைத் தாக்கி சில விநாடிகளில் இவர்களையும் தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாகப் பின்னே வந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி இவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.

காட்டு யானை
காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை அடர்ந்த வனத்தின் ஊடாக அமைந்துள்ளது இந்தச் சாலை. அந்தி மாலை முதல் அதிகாலை வரை இந்தச் சாலையில் யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாள்களாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையையொட்டியே ஒற்றைக் காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் உலவி வருகிறது.

காட்டு யானை
காட்டு யானை

இன்று காலை குஞ்சப்பனை அருகில் சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாத அந்தக் காட்டு யானை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், சாலையில் நடந்து வந்த யானையைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுக்க முயன்றனர்.

Vikatan

அதுவரை அமைதியாகச் சென்று கொண்டிருந்த காட்டுயானை, திடீரென அவர்களின் அருகில் வந்து இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியது. அப்போது, அதேசாலையில் பின்னே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி ஓட்டுநர் யானையைப் பார்த்து உடனடியாக இளைஞர்களின் அருகில் சென்று வாகனத்தை நிறுத்தினார். உடனே, அந்த இளைஞர்கள் டிப்பர் லாரியின் மறைவில் நின்றுகொண்டனர். லாரியைக் கண்டதும் அந்த யானை, இருசக்கர வாகனத்தை மட்டும் சாய்த்துவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கியது. லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், அதிர்ஷ்டவசமாக இளைஞர்கள் உயிர் தப்பினர்.

காட்டு யானை
காட்டு யானை

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில் ``சாலையில் நடந்து கொண்டிருந்த யானையைப் பார்த்த இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு புகைப்படமோ செல்ஃபியோ எடுக்க முயன்றுள்ளனர். இதனால் ஆக்ரோஷமடைந்த காட்டுயானை, இவர்களின் வாகனத்தைத் தாக்கி சில விநாடிகளில் இவர்களையும் தாக்க முற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பின்னே வந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி இவர்களின் உயிரைக் காப்பாற்றினார். யானை நடமாட்டம் உள்ள இந்தச் சாலையில் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்க வேண்டும்" என்றார்.