`சச்சின் யார்?' எனக் கேட்ட ஷரபோவாவிடம் `மன்னித்துவிடு மரியா' என உருகும் மலையாளிகள் - என்ன காரணம்?

``நீங்கள் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும். திருச்சூர் பூரம் பண்டிகையில் கலந்துகொள்ள வேண்டும்'' - மலையாளிகள்.
கடந்த 2014-ம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில், இந்தியர்கள் பலரும் அவரைக் கண்டபடி வசைபாடி கமென்ட்டுகளைப் பதிவிட்டிருந்தனர். குறிப்பாக, மலையாளிகள் பலரும் அந்தச் சமயத்தில் அவருக்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவுகளை இட்டிருந்தனர்.

ஆனால், தற்போது ஷரபோவாவை புகழ்ந்து ஏராளமான கமென்ட்டுகளை மலையாளிகள் பதிவிட்டுவருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் என்ன தெரியுமா?
வசைபாடக் காரணம் என்ன?
2014-ம் ஆண்டு நடந்த நேர்காணல் ஒன்றில், `சச்சின் டெண்டுல்கர் யாரென்று எனக்குத் தெரியாது' என்று கூறியிருந்தார் மரியா ஷரபோவா. அதன் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில், அவரை ஏகத்தும் திட்டி பதிவுகள் போடப்பட்டிருந்தன.

மன்னிப்புக் கேட்கக் காரணம்?
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேச பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகக் கடந்த புதன்கிழமை அன்று கருத்து பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர். இதனால் சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் மரியா ஷரபோவாவிடம் தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
சில பதிவுகள்!
மரியா ஷரபோவா தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்ட கடைசி இரண்டு புகைப்படங்களின் கமென்ட் செக்ஷனில் அவரிடம் மன்னிப்புக் கேட்டு ஆயிரக்கணக்கான கமென்ட்டுகள் போடப்பட்டுவருகின்றன. கமென்ட் செய்பவர்களில் அநேகம் பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.
ஷரபோவாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு கமென்ட்டில், ``மன்னித்துவிடுங்கள் மரியா. சச்சினை எங்களுக்கு வீரராகத்தான் தெரியும். மனிதராகத் தெரியாது. நீங்கள் கணித்தது சரிதான். நீங்கள் லெஜண்ட்!'' என்று பதிவிட்டிருக்கிறார்.

மற்றொருவர், ``லாரி முழுவதும் உங்களுக்காக மன்னிப்பு ஏற்றி வருகிறேன்'' என்று பதிவிட்டிருந்தார். இன்னொரு கமென்ட்டில், ``சரியான புரிதல் இல்லாத காலகட்டத்தில் சச்சினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உங்களைத் திட்டிவிட்டேன். மன்னித்துவிடுங்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் சிலர், ``நீங்கள் கடவுளின் சொந்த நாடான கேரளாவுக்கு வர வேண்டும். திருச்சூர் பூரம் பண்டிகையில் கலந்துகொள்ள வேண்டும்'' என்றெல்லாம் கமென்ட்டுகளைத் தட்டியிருந்தனர்.