Published:Updated:

ராஜஸ்தான்: `என்னது ஆட்டுக்கிடா பால் கொடுக்குமா?’ - ஆச்சர்யத்தில் கிராம மக்கள்

பால் கொடுக்கும் ஆட்டுக்கிடா
பால் கொடுக்கும் ஆட்டுக்கிடா ( ANI )

``முதன்முறையாக ஆட்டுக்கிடா ஒன்று பால் கொடுப்பதைப் பார்க்கிறேன். நானும் அந்த ஆட்டுக்கிடா பால் கொடுக்கிறதா என்பதைப் பரிசோதிக்க பால் கறந்தேன். உண்மையாகவே, அதன் மடியில் இருந்து பால் வந்தது.”

உலகத்தில் அவ்வப்போது அதிசயங்கள் நிகழ்வது உண்டு. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆனால், அறிவியலுக்கு உட்பட்ட அந்த அதிசயங்கள் எப்போதும் மனிதர்களுக்கு பிரம்மிப்பையே கொடுக்கும் எனலாம். அவ்வகையில், தற்போது வேடிக்கையான, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆனால், அறிவியலுக்கு உட்பட்ட சம்பவம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் அந்தச் சம்பவம் என்னவென்று தெரியுமா? வாங்க பார்ப்போம்!

ஆடு
ஆடு
மாதிரிப்படம்

ராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூர் அருகில் உள்ள குர்ஜா எனும் கிராமத்தில் ராஜீவ் குஷ்வாஹா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு இரண்டரை வயதில் இருந்த ஆட்டுக்கிடா ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். ஆடு வளர ஆரம்பித்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பெண் ஆடுகளுக்கு இருப்பதைப் போல பால் சுரக்கும் மடி இந்த ஆட்டுக்கிடாக்கும் உருவாவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுள்ளார். அவர்கள் பால் கறக்க முயன்றபோது அவர்களுக்கு ஆட்டுப்பாலும் கிடைத்துள்ளது. ஆச்சர்யத்தில் இருந்து மீளாத ராஜீவ் இதுதொடர்பாக பேசும்போது, ``ஆட்டுக்கிடாவிடம் இருந்து தற்போது எங்களுக்கு ஒவ்வொரு நாளும் 200 முதல் 250 மி.லி பால் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Kame Gowda: 16 ஏரி, குளங்களை வெட்டிய ஆடு மேய்க்கும் தொழிலாளி... வியக்கவைத்த `லேக்மேன்’!

ஆட்டுக்கிடா ஒன்று பால் கறக்கும் சம்பவம் ராஜஸ்தானில் பல பகுதிகளிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. பலரும் ஆச்சரியத்துடன் இந்த ஆட்டுக்கிடாவைப் பார்த்து செல்கின்றனர். ராஜீவின் அண்டை வீட்டின் வசிக்கும் ரூக்மகேஷ் என்பவர், ``முதன்முறையாக ஆட்டுக்கிடா ஒன்று பால் கொடுப்பதைப் பார்க்கிறேன். நானும் அந்த ஆட்டுக்கிடா பால் கொடுக்கிறதா என்பதை பரிசோதிக்க பால் கறந்தேன். உண்மையாகவே, அதன் மடியில் இருந்து பால் வந்தது” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தால் இது எப்படி நிகழ்ந்தது எனப் பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆடு
ஆடு
மாதிரிப் படம்

கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரான கியான் பிரகாஷ் சக்சேனா இந்த ஆச்சர்யமூட்டும் கிடாவுக்கு பின்னால் உள்ள அறிவியலை விளக்கியுள்ளார். அப்போது அவர் பேசும்போது, ``கர்ப்பமாக இருக்கும் தாய் ஆட்டின் உடலில் ஆண் மற்றும் பெண் ஹார்மோன்கள் சம அளவில் இருக்கும். இந்த ஹார்மோன்களைப் பொறுத்தே பிறக்கும் குட்டிகள் ஆணா அல்லது பெண்ணா என்பது உறுதியாகும். பால் கறக்கும் இந்த ஆட்டுக்கிடாவின் ஹார்மோன்களின் சமநிலை தவறியுள்ளது. இதனால்தான், அந்த ஆட்டுக்கிடா பால் கறக்கிறது. இப்படியான ஆட்டுக்கிடாக்கள் மிகவும் அரிதானது. மில்லியனில் ஒரு ஆட்டுக்கு இவ்வாறான மாற்றங்கள் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

`20 வீடுகளுக்குப் பூட்டு; ரூ.62 லட்சம் கொள்ளை!’ - சென்னை ஆடு வியாபாரிகள் அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு