பக்கத்து வீட்டுக்காரரின் நாய் தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த நபர், நாயை இரும்புக் கம்பியால் தாக்கியதோடு, தடுக்கச் சென்றவர்களையும் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி பஸ்சிம் விஹார் பகுதியில், தரம்வீர் தஹீயா என்பவர் மெதுவாக நடந்து சென்றுள்ளார். அவரை ரக்ஷித் என்பவரின் நாய் குரைத்துள்ளது. அந்த குரைப்பை கேட்டு எரிச்சலுற்றவர், நாயின் வாலை பிடித்து இழுத்து தள்ளி இரும்புக் கம்பியால் (rod ) அடித்துள்ளார். இதனை கண்ட நாயின் உரிமையாளர் தடுக்க வரவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து, உண்மை நிகழ்வை கண்டறிய சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் மனதை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
முதல் வீடியோவில் நாயை தலையிலேயே அடித்ததோடு, அதனை தடுக்க வந்த 53 வயதான பக்கத்து வீட்டுக்காரரையும் இரும்புக் கம்பியால் தாக்குகிறார் தஹீயா. மேலும் ஆத்திரமடைந்தவர், பக்கத்து வீட்டுக்குள் நுழைவதை தடுத்த அவ்வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை தொடர்ந்து தாக்குகிறார் இரண்டாவது வீடியோவில்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், ’காயப்பட்டவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாய் கடித்ததாகக் கூறப்படும் தஹியா மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்’ எனத் தெரிவித்துள்ளனர்.
நாயை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதால், அதற்கு ரத்த உறைவு (clot) ஏற்பட்டுள்ளது. இதற்காக கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளதாக நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.