Published:Updated:

Onsite கிளம்பும் தம்பிக்கு அண்ணனின் ஜாலி மடல்! #MyVikatan

அண்ணனின் மடல்

Representative Image
Representative Image

Onsite கிளம்பும் தம்பிக்கு ஒரு மடல். வளர்க நலம்! அஞ்சா நெஞ்சனே, பகுத்தறிவுப் பகலவனே, பாசறைத் தம்பியே...நீ வேலைக்காக வெளிநாடு கிளம்புவதை கேள்விப்பட்டேன். உள்ளம் பேருவகை அடைந்தது! அதுவும் நான் இருக்கும் அதே நாட்டிற்கு வருகிறாய் என்றதும் இதயம் இனித்தது... கண்கள் பனித்தன..! காரணம், நீ எனக்கு கொண்டு வரப்போகும் தக்காளி ஊறுகாய்க்காக அல்ல... பள்ளிப்படிப்பு வரை ஜெயமங்கலம் கூட்ரோடு தாண்டாத நீ உலகை வெல்ல புறப்பட்டுவிட்டதை எண்ணியே புளங்காகிதம் அடைகிறேன். இது உனக்கு முதல் பயணமாதலால் சில சூட்சுமங்களைத் தெளிவுபடுத்தவேண்டிய கடமை எனக்குண்டு.

Representative Image
Representative Image

பயணம் கிளம்ப முதல் படி, 'முடி' வெட்டுவது... கல்லூரி காலம் தொட்டு நீ வளர்க்கும் அந்த ஆறடி கூந்தலை அரை அடியாகக் குறைத்து, குறைந்தபட்சம் மனிதனைப்போல காட்சி அளிக்க முயற்சி செய். அடுத்தது, உன் உடமைகளை மூட்டை கட்ட ஒரு புதிய பெட்டியை வாங்கு. அதுதான் சரவணா ஸ்டோர்ஸ் பை இருக்கிறதே என அண்ணனை எதிர்க் கேள்வி கேட்காதே. purchase-ன்போது எது வாங்குகிறாயோ இல்லையோ, socks கண்டிப்பாக வாங்கிவிடு. நீ மூன்றாண்டுகாலமாக துவைக்காமல் இருக்கும் socks ஐ கழட்டி விட இந்த சந்தர்ப்பம் போல் வேறொன்று வாய்க்காது.

பயண நாள் நெருங்கியதும் ஊரிலுள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் தகவல் சொல்லிவிடு - நீ சொல்லவில்லையென்றாலும் உன் அப்பா செய்துவிடுவார். கிளம்புவதற்கு முதல் நாள், மறந்தும் உன் நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்றுவிடாதே. விமானம் ஏறவிடாமல் உன்னை மட்டையாக்கிவிடுவார்கள், பொல்லாதவர்கள். கிளம்பும் நாள் ஏர்போர்ட்டில் இருந்து 'Heading To US' என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய். செக்-இன் எல்லாம் முடிந்து விமானம் நோக்கி செல்லும்பொழுது, அண்ணனைப்போலவே வாய் வலிக்க, வாய் பிளந்து..."எவ்வளவு பெருசு... இது எப்படித்தான் பறக்குதோ" என வானூர்தியை வியந்துகொண்டே... மிட்டாய் கொடுத்து "Welcome aboard sir " எனச் சொல்லும் அந்தப் பேரழகிக்கு ஒரு நன்றி சொல்லி உன் இடம் சேர்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

உட்கார்ந்ததும் வேறொரு விமான பணிப்பெண் வந்து, 'குடிக்க என்ன வேண்டும்' என்று கேட்பார். Water please என safe ஆக play பண்ண வேண்டும். ஒரு உறக்கம் முடிந்ததும் நாடு வந்து சேரும். எழுந்து வெளியில் வந்து உன்னுடைய செக்-இன் பெட்டியை baggage claiming area வில் தேடு. இருக்காது! எதிர்பார்த்தது போலவே..."அது வந்து சேரவில்லை" என்பார்கள். அங்கேயே தரையில் உருண்டு புரண்டு அழாமல், கண்ணைத் துடைத்துக்கொண்டு "What should I do now" என தைரியமாகக் கேள்.

உன்னுடைய அட்ரஸ் கேட்பார்கள் . நீ என்னுடையதை குடுத்துவிட்டு கையில் இருக்கும் சின்ன பெட்டியை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர். (தக்காளி ஊறுகாயை இந்த பெட்டியில் pack செய்ய மறந்துவிடாதே!) வீடு சேர்ந்த பின் நீ சென்னை விமானநிலையத்தில் போட்ட "Heading To US " ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு "Like" போட்டவர்களை குறித்துவைத்துக்கொள். அவர்கள் அனைவரும் நீ ஊர் திரும்பியதும் கைமாத்து கேட்க தயார் ஆகிவிட்டார்கள் எனப்பொருள்! இனி இந்த நாட்டு நிலவரம்! எப்படி shampoo அளவிற்கு conditioner நுரைக்காதோ அது போல நம் ஊரை போல வெளிநாடு இருக்காது! நம்மூரில் மறைத்தே வைக்கப்பட்டிருக்கும் சில வளங்கள் இங்கு கடலளவு பொங்கிக்கொண்டிருக்கின்றன! சாமானியத்தில் கிடைக்காததென்றால் அது புவ்வா தான்! காலை எழுந்தவுடன் பருப்பு (cereal) பின்பு பெரிய glass-ல் நல்ல பால்... இன்னும் பசித்தால் ரெண்டு பன்னு என உன் வாழ்வை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்று வேலை சாப்பிடுவதெல்லாம் ஊரோடு சரி. இங்கு நீ இரு வேளை லட்சியம் - ஒரு வேளை நிச்சயம் எனக் கொள்ள வேண்டும். முடிந்த வரை ஊரைச் சுற்று... அழகை ரசி. ஆனால், வேறெதுவும் முயலாதே! போலீஸுடன் பேசி உன்னை காப்பாற்றும் அளவுக்கு எனக்கு ஆங்கிலம் வராது! ரயில்வே ஸ்டேஷனில் உன்னைக் கவர்ந்த அழகி உன்னை தாண்டிச் சென்று திரும்பிப் பார்ப்பாள் என எதிர்பார்க்காதே. ஏனெனில், பாக்யராஜ், பாரதிராஜா-வின் heroin இங்கு ஒருவர்கூட கிடையாது! கடைசியாக ஒன்று, வந்த இடத்தில் முடிந்தால் சிறிதேனும் வேலை செய்துவிட்டுப் போ. அப்பொழுதுதான் உன்னை அடுத்த முறை Onsite அனுப்புவார்கள். அன்புடன் அண்ணன்!

-அசோக்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/