Published:Updated:

`எனக்கு நேர்ந்தது, யாருக்குமே நடக்கக் கூடாது!'- `மைம் கலைஞன்' வீரமணியின் சமூக சேவை

வீரமணி
வீரமணி

``ஹெல்மெட் அணிந்திருப்பவர்களைப் பார்த்து, தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்பேன்"

சென்னையைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பலருக்கும் வீரமணியைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இவரால் கேட்கவோ பேசவோ முடியாது. ஆனாலும், தனக்குத் தெரிந்த மைம் கலையைப் பயன்படுத்தி, சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிமையிலும் விடுமுறை தினங்களில், சென்னையிலுள்ள ஏதாவதொரு சிக்னலில் ஆஜராகிவிடுகிறார். 

வீரமணி
வீரமணி

``ஒருமுறை என் மகளுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எங்களுக்குச் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது. அந்த நிகழ்வுதான் இப்போதைய என் பணிகளுக்கான விதை. அந்தத் தருணத்தில் சென்னையிலுள்ள `தோழன்' என்ற அமைப்பில் இணைந்தேன். இந்த அமைப்பினர், பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துவருகின்றனர். குறிப்பாக, அந்த அமைப்பின் `விபத்தில்லாத தேசம்' என்ற பணி என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கு ஏற்கெனவே தெரிந்த மைம் கலையின் மூலம், விபத்தில்லாத வாகனப் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த முடிவெடுத்தேன்.

நாணயத்தின் இரு பக்கங்களைப்போல, அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் சாலை விபத்துகளைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள்தாம் சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வீட்டுக்கும் நாட்டும் அவசியம் தேவை. எனவே, சாலை விபத்துகளைக் குறைக்க பல ஆண்டுகளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு ஏற்பட்ட சிறு சாலை விபத்துகூட பிறருக்கு ஏற்படக் கூடாது என்பதே என் இலக்கு.

வீரமணி
வீரமணி

ஹெல்மெட் அணிந்திருப்பவர்களைப் பார்த்து, தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்பேன். பின்னர், ஹெல்மெட் அணிவது, மிதமான வேகத்தில் செல்வது, டூ வீலரில் மூவர் இணைந்து பயணம் செய்யக் கூடாது, காரில் சீட் பெல்ட் அணிவது, மது குடித்து வாகனம் ஓட்டக் கூடாது, பஸ்ஸில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்லக் கூடாது என 15 விஷயங்களைக் குறிக்கும் பதாகைகளுடன் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்வேன்.  

வீரமணி
வீரமணி

அந்த ஒவ்வொரு விஷயத்தையும் மைம் கலையின் மூலம் உணர்வுபூர்வமாகச் சொல்வேன். அது, வாகன ஓட்டிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று தனது விழிப்புணர்வுப் பணிகளை எளிமையாக முன்வைக்கிறார், வீரமணி.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார், வீரமணி. ஐ.டி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து மைம் கலையின் மூலம் விழிப்புணர்வு செய்கிறார். தோழன் அமைப்பின் மூலம், தூய்மைப்பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொடுத்துவருகிறார், வீரமணி.

அடுத்த கட்டுரைக்கு