Published:Updated:

விபத்தில் காயமடைந்த பெண்ணை முதுகில் சுமந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போலீஸ்! #ViralVideo

2006-ல் நடந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து, அவரது வலது கையில் காயம் ஏற்பட்டு சிக்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட தனது கைவலியையும் பொருட்படுத்தாமல், விபத்தில் காயமடைந்த பெண்ணை முதுகில் சுமந்து சென்று மருத்துவச் சிகிச்சையளிக்க உதவிய காவல்துறை அதிகாரிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரில் நேற்று (செவ்வாய்கிழமை) மினி லாரியில் சிலர் பயணம் செய்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி லாரி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக் கேள்விப்பட்ட ஜபல்பூர் காவல்துறை குழுவினர், அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிக் காயமடைந்த 35-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்குச் சென்ற பிறகுதான் அந்த மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லை என்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. காவல்துறையினர் சற்றும் தாமதிக்காமல் அவர்களை மருத்துவமனைக்குள் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சென், எல்.ஆர்.படேல் மற்றும் கான்ஸ்டபிள்கள் அசோக், ராஜேஷ், அங்கித் ஆகியோர் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையின் அவசர விபத்துப் பிரிவு வரை கொண்டு சென்றனர்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் காவல்துறை அதிகாரி 57 வயது சென், காயமடைந்த ஒரு வயதான பெண்ணை முதுகில் சுமந்துகொண்டு ஓடிச் சென்று மருத்துவமனைக்குள் நுழைந்ததும், மற்றொரு போலீஸ்காரர் அந்தப் பெண்ணை சிகிச்சைக்குத் தயார்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியான பின்னர் பல்வேறு தரப்பினரும் காவல்துறை அதிகாரி சென்னுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

தஞ்சை ஹோட்டலைப் பதறவைத்த நாட்டு வெடிகுண்டு வீச்சு! - பைக்கில் தப்பிய இருவரைத் தேடும் போலீஸ்

காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் சென், 14 ஆண்டுகளுக்கு முன்பு நர்சிங்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது, தலைமறைவு குற்றவாளி ஒருவரைக் கைதுசெய்யும் முயற்சியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது அவரது வலது தோளில் துப்பாக்கிக்குண்டுபட்டு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு 2006-ல் நடந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து, அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் காவல்துறையினருக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கை குறித்துப் பாராட்டிய ஜபல்பூர் ரேஞ்ச் காவல்துறை பொது ஆய்வாளர் பகவத் சிங் சௌகான் ஊக்கத்தொகை அளித்ததுடன், போலீஸாரை ``ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறீர்கள்’’ என்று பாராட்டியும் இருக்கிறார்.

``மினி லாரி விபத்தில் சுமார் 35 பேர் காயமடைந்தனர். எங்கள் குழு அந்த இடத்தை அடைந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அவர்களின் நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். காவல்துறையினர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதால், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்’’ என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு