Published:Updated:

`சர்வாதிகார டிரான்ஸ்ஃபர்; 60 கி.மீ ஓட்டம்!'- இன்ஸ்பெக்டருக்கு நூதன எதிர்ப்பைக்காட்டிய எஸ்.ஐ

உத்தரப்பிரதேசத்தில் சாலையில் போலீஸ்காரர் ஒருவர் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் பிரதாப்
விஜய் பிரதாப்

உத்தரப்பிரதேச சாலையில் காவலர் சீருடையுடன் ஓடிக்கொண்டிருந்த அதிகாரி ஒருவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது பெயர் விஜய் பிரதாப் என்பதும் உத்தரப்பிரதேச காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

பிரதாப்புக்குத் தான் பணியாற்றிய இடத்திலிருந்து வேறொரு மாவட்டத்துக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பணிமாறுதலாக இல்லாமல் உயர் அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரில் இந்த டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.

விஜய் பிரதாப்
விஜய் பிரதாப்

இதையடுத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ராவுக்குப் பணிமாறுதல் செய்யப்பட்ட காவல்நிலையத்துக்கு நடையும் ஓட்டமுமாகச் செல்ல முடிவெடுத்துள்ளார். சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடக்க முடிவு செய்தவர் பாதி வழியில் மயங்கியுள்ளார். மருத்துவமனையில் பிரதாப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

பதுங்கிப் பாய்ந்த சிறுத்தை; நூலிழையில் தப்பிய இளைஞர்கள் - வைரல் வீடியோ!

இதுகுறித்து பேசிய விஜய் பிரதாப் , ``ரிசர்வ் போலீஸ் இன்ஸ்பெக்டரின் சர்வாதிகாரத்தால் நான் மாற்றப்பட்டுள்ளேன். உயர் அதிகாரிகளிடம் இதுதொடர்பாக முறையிட்டேன். தற்போது பணியாற்றும் காவல் சரகத்துக்குள்ளே இருக்க விரும்புவதாகக் கூறினேன். இருந்தும் வலுக்கட்டாயமாக எனக்கு பணிமாறுதல் ஆணை வழங்கியுள்ளார். இதை நீங்கள் என்னுடைய கோபம் அல்லது அதிருப்தி என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நான் ஆக்ராவில் உள்ள Bitholi காவல்நிலையத்தை ஓடியே அடைவேன்" என்றார்.

பிரதாப்பின் பயணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல்துறையினர் மௌனம் காக்கின்றனர்.