Published:Updated:

`டைவ் அடித்து அசத்திய இந்தியச் சிறுவர்கள்’ - வியந்து பாராட்டிய ஜிம்னாஸ்டிக் ஜாம்பவான்!

சத்யா கோபாலன்

இந்தியச் சிறுவர்கள் டைவ் அடிக்கும் வீடியோவைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா.

Viral video
Viral video

ரோமனை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி (Nadia Comaneci). இவர் 1976-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு மூன்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், ஜிம்னாஸ்டிக்கில் 'பர்ஃபெக்ட் 10' என்னும் இலக்கை அடைந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றவர் நாடியா. இந்த இலக்கை அடையும்போது நாடியாவுக்கு 14 வயது. தற்போது இவர் உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகக் கருதப்படுகிறார்.

Nadia Comaneci
Nadia Comaneci

இவ்வளவு பெருமைகள் கொண்ட ஜிம்னாஸ்டிக் ஜாம்பவான் நம் இந்தியக் குழந்தைகளின் ஜிம்னாஸ்டிக் திறமையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். கடந்த சில நாள்களாக இரண்டு சிறுவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், இந்திய பள்ளிச் சீருடை அணிந்த ஒரு சிறுவன், சிறுமி சாலையில் நடந்து செல்கிறார்கள்.

முதலில் சிறுவன் ஒரு டைவ் அடித்து நிற்கிறான். அவனுக்குப் பின்னால் வந்த சிறுமி இரண்டு முறை கச்சிதமான டைவ் அடித்து அசத்துகிறார். இவர்களைத்தான் நாடியா பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாடியா அதனுடன், ‘ இது அற்புதம்’ என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார். சிறுவர்களின் ஜிம்னாஸ்டிக் வீடியோவை பல லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இந்த சிறுவர்கள் யார் போன்ற எந்த விவரமும் இன்னும் தெரியவில்லை. ஆனால், சிறுவர்களின் உடையை வைத்து இது இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடியாவின் வீடியோ பதிவை டேக் செய்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ``நாடியாவின் ட்வீட்டை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. 1976-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் 'பர்ஃபெக்ட் 10' என்னும் இலக்கை அடைந்து மூன்று தங்கப் பதக்கம் வாங்கியவர். இவரின் பாராட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீடியோவில் உள்ள சிறுவர்களை யாரேனும் அடையாளம் கண்டால் என்னிடம் அழைத்து வாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.