Published:Updated:

சமயோசிதம்.. மனிதாபிமானம்.. மக்கள் பாராட்டும் போக்குவரத்துக் காவலர் ராஜதீபன்!

DSP appreciates Rajadeepan
DSP appreciates Rajadeepan

``நான் என் கடமையைத்தான் செய்தேன். எனது பணியை நான் முழுமனதாக விரும்பிச் செய்கிறேன்” என்கிறார், பாராட்டு மழையில் நனையும் பண்ருட்டி போக்குவரத்துக் காவலர் ராஜதீபன்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் ராஜதீபன். பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகவே காணப்படும்.

Rajadeepan
Rajadeepan

தற்போது அங்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அது நான்கு முனைச் சந்திப்புக்குச் சற்று முன்பகுதியில் இணைகிறது. இதனால் மேம்பாலத்திலிருந்து வேகமாக வரும் வாகனங்களால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த 9-ம் தேதி பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு ரோட்டில், காவலர் ராஜதீபன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈட்டுபட்டிருந்தார். அப்போது மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து வேகமாக வந்தது.

Traffic police
Traffic police

அந்த லாரி ஒரு காரின்மீது மோதியதில் முதியவர் ஒருவர் பலியானார். எனினும், ராஜதீபன் மக்களை எச்சரித்தபடியே கத்திக் கூச்சலிட்டு ஓடிச்சென்று மேலும் உயிர்ச் சேதம் ஏற்படாத வகையில் சிறப்பாகப் பணியாற்றினார். இது, அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாக, அதைப் பார்த்த அதிகாரிகள் ராஜதீபனின் துணிச்சலைப் பாராட்டினர்.

Vikatan

இதேபோல் கடந்த 14-ம் தேதி அதே நான்கு முனைச் சந்திப்புச் சாலையில் போக்குவரத்துப் பணியில் ராஜதீபன் இருந்தபோது, லாரி வருவதைப் பார்க்காமல் பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். வேறுபுறம் திரும்பியிருந்த ராஜதீபன் சட்டென்று சுதாரித்து சைக்கிளை இடதுகையால் பற்றி இழுத்துப் பிடித்துள்ளார்.

Rajadeepan saves cyclist
Rajadeepan saves cyclist

இதனால் ஒரு விபத்து சமயோசிதமாகத் தடுக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால், ராஜதீபனுக்கு பாராட்டுகள் குவிந்தது. மேலும், பண்ருட்டி டி.எஸ்.பி நாகராஜன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கிப் பாராட்டினார்.

அதே பாராட்டுகளோடு நாமும் ராஜதீபனைச் சந்தித்தோம். "அன்று, நான் பணியிலிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி ஒன்று பாலத்திலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிரில் வந்த கார்மீது லாரி மோதி அந்த காரையும் இழுத்தபடி சென்றது. அந்த விபத்தின்போது பெரியவர் ஒருவர், கார் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்.

Rajadeepan
Rajadeepan

எப்படியாவது லாரியை நிறுத்தி பெரும் விபத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சத்தம் போட்டுக்கொண்டே லாரி பின்னால் ஓடினேன். என் சத்தத்தைக் கேட்டும், நான் பதறியபடி ஓடி வருவதைப் பார்த்தும் பலர் வேகமாகச் சாலையிலிருந்து விலகினார்கள். லாரியும் கார் மீது மோதியதால் சற்றே வேகம் குறைந்து நின்றது. அதேபோல் 14-ம் தேதி நான்கு முனைச் சந்திப்பில் பணியிலிருந்தபோது, பள்ளி மாணவன் விஷயத்திலும் சட்டென்று சுதாரித்ததால் விபத்து ஏற்படாமல் காப்பாற்ற முடிந்தது.

அந்தச் சிறுவன் இதுவரை யார் என்று தெரியாது. இரண்டு முறை நான் பணியில் இல்லாதபோது என்னைப் பார்க்க வந்துள்ளார். நான் இன்னமும் அவரைச் சந்திக்கவில்லை. இந்தச் சம்பவங்களுக்காகப் பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நிறைய பேர் பாராட்டினார்கள். எங்கள் டி.எஸ்.பி-யும் பாராட்டினார். நான் என் கடமையைத்தான் செய்கிறேன். எனது பணியை நான் முழுமனதாக விரும்பிச் செய்கிறேன்.

Rajadeepan
Rajadeepan

நம் நாட்டில் பெரும்பாலான விபத்துகள் குடிப்பழக்கத்தால் ஏற்படுகின்றன. குடிப்பதால் என்ன கிடைக்கப்போகிறது? அதனால் உயிரிழப்புகளையும் பிரச்னைகளையும்தான் சந்திக்கிறோம். எத்தனை பேர் விதவையாகி உள்ளனர்? கஷ்டப்பட்டு சம்பாதித்து அந்தப் பணத்தில் குடிக்கச் செலவழிக்கின்றனர். என்னைக் கேட்டால், 'தயவுசெய்து குடிக்காதீர்கள்' என்றுதான் சொல்வேன். நாங்கள் பணியில் இருக்கும்போது சிலர் போக்குவரத்து விதிகளையும் மதிக்காமல், எங்களையும் மதிக்காமல் செல்கின்றனர். இது, மிகவும் வருத்தமாக இருக்கும். ஆனாலும், இது எங்கள் வேலை என நினைத்துக்கொள்வேன்.

ஹெல்மெட்டும் போடாமல், வேகமாகவும் செல்லும் போக்கை இளைஞர்கள் சாகசமாக நினைக்கிறார்கள். உங்களால் ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால், அதுதான் சாகசம். அதுதான் பேசப்படும். வேகமாகச் செல்வதும், ஹார்ன் அடித்துக்கொண்டே பறப்பதும் எந்த வகையிலும் ரசனையான செயல் அல்ல.

Rajadeepan regulates traffic
Rajadeepan regulates traffic

போக்குவரத்து குறித்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் பொதுமக்களில் ஒரு சாராருக்குத்தான் இருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். ‘விபத்து ஏற்படுத்தி யாரோ ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு உருவாக நான் காரணமாக இருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொண்டாலே போதும்” என்று தன் மனதில் இருப்பதைப் பகிர்ந்தார்.

சல்யூட் ராஜதீபன்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு