Published:Updated:

`காதல்’ உடல் சார்ந்தது அல்ல... கேரளாவை மெய்சிலிர்க்கவைத்த டுட்டுமோன் - சஹானா!

பிரணவ் - சஹானா
பிரணவ் - சஹானா ( facebook )

எதிர்பாராத விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது.

காதலை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பார்கள்... ஆம், இரு மனங்களுக்கு இடையேயான உரையாடல்களையும் உணர்ச்சிகளையும் யாராலும் காட்சிப்படுத்த முடியாது, வார்த்தைகளால் வர்ணிக்கவும் முடியாது. அது, காதலின் பாஷையல்ல. அதுதான் காதலின் சுவாசம். நிறம், மதம், ஏற்றத்தாழ்வு, இவற்றையெல்லாம் கடந்து நிற்பதால்தான் காதல் இன்றும் நிலைத்து நிற்கிறது. இதோ அதற்கு மீண்டும் சாட்சியாகி நிற்கிறது, இரிஞ்சாலக்குடாவில் நடந்த காதல் திருமணம்.

பிரணவ் - சஹானா
பிரணவ் - சஹானா
facebook

திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் நல்லபதி பிரணவ். 27 வயதான அவர், சில வருடங்களுக்கு முன் மற்றவர்களைப் போல துறுதுறுவென அந்தப் பகுதியில் வலம்வந்தவர். நண்பர்களால், ஊர்க்காரர்களால் டுட்டுமோன் என அன்பாக அழைக்கப்பட்டு வந்த பிரணவ், அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். ஆனால், ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் அவரை முற்றிலும் முடக்கியது. ஆம், எதிர்பாராத விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது.

எனினும், அவரது வீட்டில் அவரை சும்மா இருக்க விடவில்லை. அவரை ஒதுக்காமல், தேவையானதைச் செய்து அன்புடன் கவனித்துவந்துள்ளனர். பிரணவ்வும் முடங்கிவிடாமல் இருந்துள்ளார். எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார். தற்போது, பிரபல கட்சியின் ஐடி விங்கில் பணிபுரிந்துவருகிறார். இதற்கிடையே, பிரணவ் தனது வாழ்வின் இரண்டாம் இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அது, தற்போதைய வைரல் டாப்பிக்காக மாறியுள்ளது. பிரணவ், சில வருடங்களாக சஹானா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். எனினும் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு தனது காதலை முறித்துவிடுமோ என்ற பயந்தவண்ணம் இருந்துள்ளார். ஆனால், உண்மையான காதல் தோற்காது என்பதற்கு ஏற்ப, அவரது காதலி பிரணவ்வைக் கைவிடவில்லை. விபத்தால் முடங்கியாலும் பிரணவ்வைக் கரம்பிடிக்க சஹானா முன்வர, இருவரது திருமணமும் இன்று கோயிலில் வைத்து நடந்துள்ளது.

வீல்சேரில் அமர்ந்தபடி மணமகளின் கரம்பிடித்து பிரணவ் வர, இருவரும் மாலை மாற்றி திருமணப் பந்தத்தில் இணைந்தனர். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிய ஒருசில நிமிடங்களில், வைரலாகின. `காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை. இரு மனங்களினுடயது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது, இந்தத் திருமணம். அன்பின் வார்த்தைகள் இன்று நிறைவேறியது...' என்று வலைதளங்களில் நெட்டிசன்கள், பிரணவ் என்ற டுட்டுமோனுக்கும் சஹானாவை வாழ்த்து மழையில் நனையவைத்து வருகின்றனர்.

காதல் இன்றி அமையாது உலகு. வாழ்த்துகள் பிரணவ் - சஹானா!

அடுத்த கட்டுரைக்கு