Published:Updated:

`சூச்சின்' டெண்டுல்கர்... `டொலாண்ட்' ட்ரம்ப்..! - வைரலாகும் `நமஸ்தே ட்ரம்ப்’ உரைகள் #TrumpInIndia

Modi, Trump
Modi, Trump

கிரிக்கெட் வீரர்கள், விவேகானந்தர், பாலிவுட் என இந்திய மக்களைக் கவர்வதற்கான எல்லா பாக்ஸ்களையும் டிக் அடித்தது ட்ரம்ப்பின் உரை.

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு புறப்பட்ட ட்ரம்ப் இன்று காலை அகமதாபாத் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்
ANI

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதையைச் செய்துவிட்டு அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் மைதானத்துக்கு வந்தடைந்தனர் மோடியும் ட்ரம்ப்பும். இந்தப் புதிய மைதானம் மக்கள் வெள்ளத்தில் மிதக்க `நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி தொடங்கியது. மோடியினது அபார வளர்ச்சி பற்றியும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பற்றியும் பேசிய அவர் கிரிக்கெட் குறித்தும் பேச மறக்கவில்லை.

`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate

``பிரதமர் மோடியை நாங்கள் அமெரிக்காவில் பிரமாண்டமான கால்பந்து மைதானத்தில் வைத்து வரவேற்றோம். இன்று இந்தியா என்னை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி. உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இங்கிருந்தே வந்திருக்கின்றனர்" எனப் பேசிய அவர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி பெயர்களையும் குறிப்பிட்டார். சொல்லப்போனால் கிரிக்கெட் வீரர்கள், விவேகானந்தர், பாலிவுட் என இந்திய மக்களைக் கவர்வதற்கான எல்லா பாக்ஸ்களையும் டிக் அடித்தது ட்ரம்ப்பின் உரை.

ஆனால் சச்சினை 'சூச்சின்' என அவர் உச்சரிக்க, அது எப்படி நெட்டிசன்கள் கண்களில் படமால் இருக்கும்? சட்டென அதை வைத்து 'யாருப்பா அது சூச்சின்?' எனக் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது வைரல். எந்த அளவுக்கு வைரல் என்றால் ஐசிசியின் அதிகாரபூர்வ பக்கமே தங்களது ரெகார்டில் சச்சின் பெயரை சூச்சின் என மாற்றுவதாக ஜாலியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. இந்த உரையிலேயே இன்னும் பல பெயர் மாற்றங்களும் இடம்பெற்றன. ட்ரம்ப் இதுபோன்று பேசி அது வைரலாவது இது முதல்முறையும் கிடையாது. ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்கை அவர் டிம் ஆப்பிள் எனக் குறிப்பிட தனது சமூக வலைதள ஹேண்டில்களின் பெயர்களை அப்படியே மாற்றி விளையாடினார் டிம் குக்.

பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்ப்பை விடவும் ஒரு படி மேலே சென்று ட்ரம்ப் பெயரையே 'டொலாண்ட் ட்ரம்ப்' என்று உச்சரிக்க மீண்டும் நெட்டிசன்களுக்கு வேலை வந்தது.

அடுத்த கட்டுரைக்கு