Published:Updated:

உடல்நிலை சரியில்லாத குட்டி; மருத்துவமனைக்குத் தூக்கி வந்த தாய் பூனை! - வைரலாகும் படங்கள்

பூனை
பூனை

தாய் பாசத்தை விஞ்சியது எதும் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் துருக்கியில் ,ஒரு பூனை உடல்நிலை சரியில்லாத தனது குட்டியை தானாகவே மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு வந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தபோது அங்கு தனது குட்டியை கவ்வி கொண்டு வந்த பூனை, அதை அவர்களின் அருகில் போட்டுவிட்டு அமைதியாக நின்றது. இதனைக்கண்ட மருத்துவர்கள் உடனடியாக அப்பூனைக்கு சிகிச்சை அளித்தனர்.பூனையை பரிசோதிப்பதற்காக வெவ்வேறு அறைக்கு எடுத்து சென்ற போதிலும் தாய் பூனை சுற்றிசுற்றி வந்து குட்டியை தன் கண் பார்வையிலேயே வைத்துக்கொண்டது.

பூனை
பூனை

பரிசோதனையில், தற்போதுதான் குட்டியை ஈன்றுள்ளது என்பதை அறிந்து ,தாய் பூனைக்கு பால் மற்றும் உணவு அளித்து , அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தாய் மற்றும் குட்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், தாய் பூனையின் அறிவையும் பாசத்தையும் பார்த்து பலரும் நெகிழ்ச்சியான கருத்துகளை பகிருந்து வருகின்றனர்.

துருக்கியில் தான் மிக அதிகமான தெரு நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளன. அனைவரும் தமது வீடுகளின் முன்பு உணவு மற்றும் தண்ணீர் வைத்து விலங்குகள் மீது பிரியமுடன் இருந்து வருகின்றனர். மக்களுடன் மிக நட்பாக பழகும் இந்த விலங்குகளை அந்நாட்டு அரசும் தனி கவனத்துடன் பராமரித்து வருகிறது.

பூனை
பூனை

2018-ஆம் ஆண்டு கணக்கின்படி இஸ்தான்புல் நகரில் ஆதரவற்ற 1,62,970 பூனைகளும் 1,28,900 நாய்களும் உள்ளன. தற்போது கொரோனா வைரஸால் நாடே முடங்கி இருக்கும் இந்த சூழலிலும் அந்நாட்டு அரசு பூனைகளுக்கு தனியாக முகாம்கள் அமைத்து உணவு அளித்து வருகிறது. மேலும் மற்ற விலங்குகளுக்கு உணவு தண்ணீர் கிடைக்கும் வகையில் மைதானம் மற்றும் பூங்கா போன்ற இடங்களில் உணவு மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுடன் நண்பனாக இருக்கும் இந்த விலங்குகளை இது போன்ற அசாதாரண சூழலிலும் பராமரிக்க கவனம் செலுத்தும் அந்நாட்டு அரசிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு