Published:Updated:

`கொஞ்சம் ஆம்புலன்ஸ்ல ஏறுங்க சார்!' -திருப்பூர் இளைஞர்களைத் திகிலில் ஆழ்த்திய போலீஸார்

இளைஞர்களை ஆம்புலன்ஸில் ஏற்றும் போலீஸார்
இளைஞர்களை ஆம்புலன்ஸில் ஏற்றும் போலீஸார்

ட்ரோனை வைத்து கேரம் போர்டு விளையாடிய இளைஞர்களை விரட்டியடித்த திருப்பூர் போலீஸார், அடுத்ததாக ஆம்புலன்ஸை வைத்து இளைஞர்கள் மூன்று பேரை அலறவிட்டுள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் எனப் பலரும் ‘கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே இருங்கள், தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்’ என வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

இப்படியான வீடியோக்களுக்கு மத்தியில் ஒற்றை ட்ரோனை வைத்து கேரம் விளையாடிய இளைஞர்களைத் துரத்தியடித்த திருப்பூர் போலீஸாரின் விழிப்புணர்வு வீடியோ செம வைரலானது. இந்த வீடியோவை ஷேர் செய்தும் மீம்ஸ் போட்டும் ரிப்பீட் மோடில் ஓடவிட்டும் பலரும் ரசித்துப்பார்த்தனர்.

'திருப்பூர் போலீஸோட கிரியேட்டிவிட்டி வேற லெவல்!' என சிலாகித்து அடங்குவதற்குள், ஆம்புலன்ஸை கன்டென்ட்டாக வைத்து அடுத்த வீடியோவை வெளியிட்டு அதகளப்படுத்தியிருக்கின்றனர்.

இளைஞர்களை ஆம்புலன்ஸில் ஏற்றும் போலீஸார்
இளைஞர்களை ஆம்புலன்ஸில் ஏற்றும் போலீஸார்

பைக்கில் ட்ரிபிள்ஸ் வரும் மூன்று இளைஞர்களை ஓரம்கட்டும் போலீஸார், ‘மாஸ்க் எங்க, எதுக்குப்பா மூணு பேரு வர்றீங்க’ என பவ்யமாக விசாரிப்பதோடு அந்த வீடியோ தொடங்குகிறது. அதையடுத்து, அந்த இளைஞர் மூவரையும் அங்கிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர். ஆம்புலன்ஸிலோ முழு உடற்கவசத்துடன் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் போல ஒருவர் படுத்துக்கிடக்கிறார்.

துரத்தி துரத்தி படம்பிடித்த ட்ரோன்; தெறித்து ஓடிய இளைஞர்கள்! -ட்ரெண்டிங்கில் திருப்பூர் போலீஸ் #Video

அதைப் பார்ந்த அந்த மூன்று இளைஞர்களும் ஆம்புலன்ஸில் ஏற மறுத்து தரையில் விழுந்து குதித்து ஓடுகின்றனர். அலேக்காக மூவரையும் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி, போலீஸார் கதவை அடைக்கின்றனர். ஆம்புலன்ஸில் படுத்திருந்த நபர், இருமியபடியே அந்த மூன்று இளைஞர்களையும் நெருங்க, இளைஞர்கள் மூவரும் அலறியபடி ஆம்புலன்ஸ் ஜன்னல் வழியே தாவிக் குதிக்க முயல்கின்றனர். ‘கதவைத் திறங்க சார்... இனிமே வெளிய வரவே மாட்டோம்’ என இளைஞர்கள் அலறி நிற்க, அந்த வீடியோ முடிகிறது.

ஆம்புலன்ஸில் அலறி நிற்கும் இளைஞர்கள்
ஆம்புலன்ஸில் அலறி நிற்கும் இளைஞர்கள்

திருப்பூர் போலீஸாரின் ட்ரோன் வீடியோவையே மிஞ்சும் வகையில், இந்த ஆம்புலன்ஸ் வீடியோ இருக்கிறது. வீடியோவைப் பார்ப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது. இன்னும் அந்த மூன்று இளைஞர்களுக்கும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பயம் விலகியிருக்காது.

வீடியோவின் முடிவில் பேசும் பெண் போலீஸ் ஒருவர், “ஆம்புலன்ஸில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருக்காருன்னு தெரிஞ்சதும், இளைஞர்கள் மூவருக்கும் பயம் வந்துடுச்சி. கொரோனா வைரஸ் எங்க வேணும்னா இருக்கும். எப்படி பரவும்னே தெரியாது. அதுக்காகத்தான் வீட்ல இருங்கன்னு சொல்றோம். தயவுசெய்து அத்தியாவசிய தேவையைத் தவிர வேற எதுக்காகவும் வீட்டை விட்டு வெளிய வராதீங்க” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு