Published:Updated:

`மகளின் செல்லக்கோபம்; சர்ப்ரைஸ் கொடுத்த தாய்’ – இணையவாசிகளின் இதயத்தை வென்ற வீடியோ

சிறுமி - தாய்
சிறுமி - தாய்

துருக்கியைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் தன் மகளைச் சந்திக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

`அம்மா ஏன் என் கூடவே இல்ல.. நான் பேசமாட்டேன்’.... தன் தாயின் அன்புக்காக ஏங்கும் துருக்கியைச் சேர்ந்த 6 வயது சிறுமி தாத்தா, பாட்டியிடம் உதிர்த்த வார்த்தைகள்தான் இது. சிறுமியின் தாய் Ozge Kocak துருக்கியில் மருத்துவச் செயலாளராக இருக்கிறார். கொரோனாவின் தாக்கம் துருக்கியிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர் பரிசோதித்து வருகிறார்.

இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக தன் 6 வயது மகளைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். தன் மகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு Ozge Kocak பணியில் கவனம் செலுத்தி வந்தார். குழந்தையுடன் தொடர்ந்து போனில் மட்டுமே பேசி வந்துள்ளார்.

கொரோனா
கொரோனா

கொரோனா குறித்து அறியாத சிறுமிக்கு அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டுமே பெரிதாக இருந்துள்ளது. போனில் மட்டுமே பேசும் அம்மாவின் மீது மகளுக்கு செல்லக்கோபம் ஏற்பட்டது. நாம் பேசவில்லை என்றால் அம்மா நம்மை பார்க்கவருவார் என நினைத்தாரோ என்னவோ பேசுவதை நிறுத்திவிட்டார் அந்த 6 வயது ஜீனியஸ். மகளின் மழலை வார்த்தை கேட்க முடியாததால் Ozge kocak மனமும் நிலையாக இல்லை. மகளைப் பார்த்து பேச வேண்டும் எனற எண்ணம் வந்துவிட்டது.

இதையடுத்து, ஒருவாரம் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு மகளைப் பார்க்க புறப்பட்டுவிட்டார். சஸ்பென்ஸாக இருக்கட்டும் என அவர் மகளிடம் தெரிவிக்கவில்லை, பெற்றோரிடம் மட்டும் தெரிவித்துள்ளார். அம்மாவின் வருகையை அறியாத அந்த 6 வயது சிறுமி தன் வீட்டுக்கு முன்னாள் சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தார். யாரும் இல்லாத சாலையில் திடீரென நின்ற காரை பார்க்கிறார். காரில் இருந்து ozge இறங்கியதைப் பார்த்து மெதுவாக நடந்துசெல்கிறார். அவர் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். தன் மகளை அவர் கட்டியணைத்துக்கொண்டாள். செல்ல கோபத்துடன் இருந்த சிறுமி தாயைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கிவிட்டார்.

சிறுமி
சிறுமி

இதன்பின்னர் தன் தாயின் தலைமுடியை செல்லமாக வருடிக்கொடுத்த சிறுமி, செல்லமாக அவரது தலையில் ஒரு கொட்டு வைக்கிறார். இந்தக் காட்சிகளை அவரது உறவினர் அப்படியே படம்பிடித்துள்ளார். இதை ozge சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோவை ஏராளமானவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய Ozge, ``என்னுடைய உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில நாள்களாக அவள் எங்களுடன் போனில் பேசுவதை விரும்பவில்லை. நாங்கள் ஏன் அவளுடன் இல்லை என்ற கேள்வியை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தா. அது மிகவும் கடினமானது. விவரிக்க வார்த்தைகளே இல்லை” என உணர்ச்சிபொங்க கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு