திருமணம் இப்படியும் நிற்கலாம்... உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்த விநோத சம்பவம்!

உத்திர பிரதேச மாநிலம்... மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்த திருமணம் அது. மாப்பிள்ளையின் நண்பர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது...
திருமணம் என்பது எல்லோர் வாழ்விலும் முக்கியமான ஒரு நிகழ்வு. உலகம் முழுவதிலும் எல்லா கலாசாரத்திலும் திருமணங்களுக்குச் சிறப்பு இடம் உண்டு. ஆனால், அந்த சந்தோஷமான நிகழ்வில் கூட சொதப்பல்கள் நடப்பதுண்டு. சின்னச் சின்னக் காரணங்களுக்காக நிறைய திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில், உத்திரபிரதேச மாநிலம் இதில் முதலிடத்தில் இருக்கிறது. மாப்பிள்ளை ஒருவர் குடித்துவிட்டு ‘நாகினி டான்ஸ்’ ஆடினார் என்ற காரணத்துக்காக மணப்பென் அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இன்னொரு திருமணத்தில், மணப்பெண் வாட்ஸப்பே கதி என கிடப்பதாகச் சொல்லி மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்துவிட்டார். பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்துப் பேசி, அதனால் பிரச்னை உண்டாகி திருமணம் நின்று போன கதை கூட உத்திரப் பிரதேசத்தில் உண்டு. திருமண விருந்தில் ஏன் பீஃப் போடவில்லையென ஒரு திருமணம் நின்றிருக்கிறது. இப்படி நீளும் இந்தப் பட்டியலில் இன்னொரு காரணம் இப்போது சேர்ந்திருக்கிறது.
உ.பி மாநிலம்... மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்த திருமணம் அது. மாப்பிள்ளையின் நண்பர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணும் சேர்ந்தால் நன்றாக இருக்குமென நண்பர்கள் நினைத்து அவரையும் நடனம் ஆட அழைத்திருக்கிறார்கள். அவர் வர மறுக்க, கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது மணப்பெண் தரப்பை கோபமடையைச் செய்திருக்கிறது. முடிவு, திருமணத்தை நிறுத்தும் அளவிற்குச் சென்றிருக்கிறது. ஏற்கெனவே, மாப்பிள்ளை வீட்டார் நிறைய வரதட்சணை கேட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் மணப்பெண் வீட்டார்.

மணப்பெண்ணின் உறவினர் ஒருவர், "எங்கள் வீட்டுப் பெண்கள் பொது இடங்களில் நடனம் ஆட மாட்டார்கள். இப்படி ஒரு வீட்டில் எங்கள் பெண்ணைக் கொடுக்க நாங்கள் தயாரில்லை" எனச் சொல்லியிருக்கிறார். இரு தரப்பினருக்கும் பொதுவானவர் ஒருவர் "பெண்ணை யாரும் வற்புறுத்தவில்லை. பிரச்னை செய்யவில்லை. அதன் பின் நடந்த பேச்சுவார்த்தைதான் முற்றிப் போய் பிரச்னை ஆனது" என்கிறார். விஷயம் காவல் நிலையத்தை எட்டியிருக்கிறது. ஆனால், இரண்டு குடும்பங்கள் இடையே நடக்கும் பிரச்னை என்பதால் அவர்களுக்கு உள்ளாகவே தீர்த்துக் கொள்ளும்படி அறிவுரை செய்திருக்கிறார்கள். முடிவாக, மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்காக பெண் வீட்டில் செய்த 6.5 லட்சத்தைக் கொடுக்க வேண்டுமென பேசித் தீர்த்திருக்கிறார்கள்
இரண்டு பேரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். உறவினர்களும் நண்பர்களும் கொஞ்சம் கவனத்துடன் இதைக் கையாண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.