Published:Updated:

புறநகர் ரயில்வேயா? மெட்ரோவா? ட்விட்டரில் வாக்குவாதம் செய்த நிறுவனங்கள்!

இரண்டு ரயில்வே நிறுவனங்களின் இந்த சமூக வலைதள விவாதம் அனைவரும் ரசிக்கும்படியான ஒன்றாக இல்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அரசு நிறுவனங்கள் மற்றும் பொது சேவை நிறுவனங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் என்றால் கட்டுக்கோப்புடன் அலுவல் முறையில் அறிக்கை பாணி ட்விட்டுகள்தான் கொட்டிக்கிடக்கும் என்பதனை மாற்றி, கலகல விவாதம் ஒன்றை செய்திருக்கின்றன சென்னை மண்டல ரயில்வேயும் சென்னை மெட்ரோ நிறுவனமும்! இந்த இரண்டு கணக்குகளும் ஜாலியாக இணையத்தில் போட்டிபோட்டுக் கொண்டது நெட்டிசன்களை குதூகலப்படுத்தியுள்ளது.

சென்னை மண்டல ரயில்வே மேலாளரின் அதிகாரப்பூர்வ கணக்கு இதை அலுவல் முறையற்ற ஒரு பொது விவாதமாகவே முதலில் தொடங்கியது. சென்னை மெட்ரோ-வின் கட்டணத்தை ஒப்பிட்டு பின்வருமாறு அது ட்விட் செய்தது.

"சென்னை புறநகர் சேவை, மெட்ரோ அளவு விரிவானது மற்றும் செலவு ரீதியாக மிக சிக்கனமானது" என்று கூறி மெட்ரோ கட்டணத்துடன் தன் சேவை கட்டணத்தையும் ஒப்பிட்டு அட்டவணை ஒன்றை பதிவு செய்தது.

இதற்கு உடனடியாக பதில் சொல்லும் வகையில் மெட்ரோ நிறுவனம், "ஹாய் @drmchennai நாங்கள் சிறந்த பாதுகாப்பு, குளிர்சாதன பெட்டிகள், மிக கச்சிதமாகப் பராமரிக்கப்படும் நவீன வசதிகளை வழங்குவதோடு எங்களின் ரயில்கள் கால அட்டவணையை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றன" என்று பதிவு செய்து மறைமுகமாக சென்னை புறநகர் ரயில் சேவையை கிண்டல் செய்துள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். மெட்ரோ சேவையை சிலர் ஆடம்பரமான ஒன்றாக, அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கருதினாலும் சிலர் அதன் வசதிகள் மற்றும் காலம் தவறாமையை பாராட்டினர். அதேபோல, புறநகர் சேவையை பலர் அதன் பொருளாதார சிக்கனத்தை முன்னிட்டு பாராட்டினாலும் சிலர் கேட்பாரற்று கிடக்கும் அதன் கால அட்டவணையை முன்னிட்டு குறை கூறினர்.

பின் இந்த விவாதத்தை முடித்துவைக்கும் வகையில் சென்னை மண்டல ரயில்வே மேலாளர், "பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றே இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. புறநகர் ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் இணைந்து செயல்படுவதன் மூலம் சென்னை நகரத்தை முழுவதுமாக இணைக்கிறோம். பல இடங்களில் சிறந்த சேவையை வழங்க இருவரும் சேர்ந்தே செயல்படுகிறோம்" என ட்விட் செய்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர். சாலைப் போக்குவரத்தை சார்ந்து இருக்கும் மக்களும், அதை பணியாகக் கொண்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்களும் அவதிப்படும் நிலையில் ரயில்வே நிறுவனங்களின் இந்த சமூக வலைதள விவாதம் அனைவரும் ரசிக்கும்படியான ஒன்றாக இல்லை!

நெட்டிசன்களில் ஒருவர், "உழைக்கும் மக்களுக்கு மெட்ரோ என்றாவது ஒருநாள் வந்து போகும் சுற்றுலா தளம் மட்டுமே... ஆனால் புறநகர் ரயில்கள் குடியிருக்கும் வீடுகள் போன்றவை!" எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பாராட்டுக்களும் எதிர் கருத்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆயிரம்தான் கூறினாலும் மெட்ரோ ஆடம்பரம் புறநகர் சேவை அத்தியாவசியம் என்பதுதான் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. அதே சமயம், புறநகர் சேவை, மெட்ரோவுடன் அடுத்தமுறை போட்டிக்குச் செல்லும் முன் தன்னை முதலில் செம்மைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் லட்சக்கணக்கான சென்னைவாசிகளின் ஆசையாக இருக்கிறது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு