Published:Updated:

சிராவயலில் சீறிப் பாய்ந்த காளை...! -மஞ்சுவிரட்டில் தாய், மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி #Viralvideo

காளை
காளை

சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டில் காளை ஒன்று தாயையும் அவரின் குழந்தையையும் தாண்டிச் செல்லும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக தென்மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பாதுகாப்புக் குறைவாகவும், பரபரப்பு அதிகமாக இருக்கும் மஞ்சுவிரட்டு போட்டியைக் காண ஏராளமான இளைஞர்கள் அதிகப்படியாக விரும்புவார்கள்.

காளை
காளை

இந்த நிலையில், நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற அதே சமயம் சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. கூட்டத்துக்குப் பஞ்சம் இல்லாது எங்கு பார்த்தாலும் ஆண்களின் கூட்டம் அலைமோதியது. இருசக்கர வாகனம், வேன், கார் என்று பல்வேறு வாகனத்தில் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் சிராவயலில் குவிந்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு இடையில் மஞ்சுவிரட்டு காண சில பெண்களும் குடும்பத்துடன் வந்திருந்தனர். அப்போது மஞ்சுவிரட்டு நடைபெற்ற இடத்தில் காளை ஒன்று சீறிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் தன் குழந்தையுடனும் அருகே ஒரு சிறுவனுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவர்களைப் பார்த்து சீறிப் பாய்ந்து வந்துகொண்டிருந்த காளை அவர்கள் பயந்து உட்காரவும் முட்டாமல், அவர்களைத் தாவிச் சென்றது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகிவருகிறது. பெண்ணையும் குழந்தையையும் பார்த்து பாவப்பட்டு தாவிச் சென்ற காளையை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

வெள்ளையன்
வெள்ளையன்

இது குறித்து காளையின் உரிமையாளர் சுந்தரம்... ``என்னுடைய காளையின் பெயர் செல்வம் என்ற வெள்ளையன். பொன்னமராவதி தச்சம்பட்டியைச் சேர்ந்த என்னுடை காளையை பல்வேறு இடங்களுக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிக்கும் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், சிராவயல் மஞ்சுவிரட்டில் பெண்ணையும் குழந்தையையும் பார்த்து தாவிச் சென்றது மிகவும் பிரமிப்பாக இருந்தது. என்னுடைய மூன்றாவது மகனாக இந்தக் காளையை நினைக்கிறேன். மஞ்சுவிரட்டில் நடந்த இந்தச் சம்பவத்தை ஒப்பிடும்போது என்னுடை வீட்டில் உள்ள பெண்கள் என்று நினைத்து தாவியுள்ளது என்பதே உண்மை. மேலும், இது என் குலதெய்வத்தின் செயலாக நினைத்து வேண்டிக்கொள்கிறேன்" என்றார்

அடுத்த கட்டுரைக்கு