சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கான்கர் மாவட்டத்தில் அழைக்கப்படாத விருந்தினராக ஒரு தாய் கரடியும் அதன் இரண்டு குட்டிகளும் கல்யாண மேடையில் நுழைந்து சேட்டை செய்துள்ளது. கரடிகளைப் பார்த்த தம்பதிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நிகழ்ச்சியை விட்டே ஓடிச் சென்றுள்ளனர். நெடுநேரமாகவே அந்தக் கரடிகள் புதுமணத் தம்பதிகளுக்காகக் குளிர்ச்சியாக அமைக்கப்பட்ட கல்யாண மேடையில் மோப்பம் பிடித்தபடி ஓடுவதும் அலைவதுமாக இருந்தன. நல்லவேளையாக அங்கு இருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் வரவில்லை.
கரடிகளின் இந்தச் சேட்டையை வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு வைரலாகி வரும் இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வின் கஸ்வான் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இந்த கல்யாண ஏற்பாட்டில் கரடிகள் மகிழ்ச்சி அடையவில்லை எனத் தெரிகிறது" என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோவைக் கண்டு மக்கள் ரசிக்கும் அதே நேரத்தில், "இது போன்ற வனவிலங்குகள் மக்கள் இருக்கும் இடங்களுக்குள் நுழைவது புதிதல்ல. காடுகள் வெட்டப்பட்டு மக்கள் குடியேறிதால் வந்த விளைவு" என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
